பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: செலவு செய்வது யார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கள நிலவரத்தை கண்டறியும் குழு
- பதவி, பிபிசி நியூஸ்
திருமணத்திற்கான இடத்தை தேர்வு செய்வது முதல் உணவு, அலங்காரம் மற்றும் அங்கு போடப்பட்டிருக்கும் நாற்காலியின் உறை வரை அனைத்தையும் திட்டமிடுவது எவ்வளவு கடினமானது என்பது அதை உண்மையாகவே செய்தவருக்குத்தான் தெரியும்.
வி.ஐ.பிக்கள், பாதுகாப்பு மற்றும் கூடுதல் ஆடம்பரம் போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய பிரிட்டன் அரச குடும்பத்தின் திருமணத்தின் செலவு பல கோடிகளை தாண்டும்.
எனவே, இன்று (சனிக்கிழமை) நடக்கவுள்ள இளவரசர் ஹேரி மற்றும் மெகன் திருமணத்திற்கு எவ்வளவு செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது பற்றியும், அதற்கு மக்கள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்பதையும் கண்போம்.
பாதுகாப்பு செலவு
லண்டனுக்கு அருகேயுள்ள வின்ஸ்டர் என்ற இடத்தில்தான் ஹேரி மற்றும் மெகனின் திருமணம் நடைபெறவுள்ளது. இதை பார்ப்பதற்காக சுமார் 1 லட்சம் பேருக்கும் மேலாக சம்பவ இடத்தில் மக்கள் குவியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்தில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ்கள் 600 விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மாலையில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இன்னும் கூடுதலாக 200 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அரச குடும்ப கோட்டையிலுள்ள மைதானத்தில் அமர்ந்து பொதுமக்கள் 1200 பேர் திருமணத்தை காணவுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இதுபோன்ற அதிக எண்ணிக்கையிலான விருந்தினர்களை சமாளிப்பதற்கு கணிசமான திட்டமிடல் தேவைப்படுகிறது.
பாதுகாப்பு இந்த திருமணத்திற்கான மிகப் பெரிய ஒற்றை செலவாக உள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டபோது, "தேசத்தின் பாதுகாப்பை" சமரசம் செய்யும் வகையிலான விவரங்களை அளிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இதேபோன்று, தாமஸ் வேலி காவல்துறையினர் இதுகுறித்த தகவல்களை அளிப்பதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.
ஆனால், கேம்பிரிட்ஜ் கோமகன் மற்றும் கோமகள் திருமண பாதுகாப்பிற்காக மாநகர காவல்துறை 6.35 மில்லியன் செலவு (மக்களின் வரிப்பணம்) செய்துள்ளது என்பது அந்நாட்டின் தகவலறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால், இடமும் விருந்தினர்களின் எண்ணிக்கையும் மாறுபடும் ஹேரி மற்றும் மெகலின் திருமணத்தோடு இதை ஒப்பிடுவது சரியான மதிப்பீட்டை அளிக்காது.
மற்ற செலவினங்கள்
கேம்பிரிட்ஜ் கோமகன் மற்றும் கோமகள் திருமணத்திற்கான செலவினங்களே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஹேரி மற்றும் மெகலின் திருமண செலவினங்கள் பற்றி அறிவிக்கப்படாதது ஆச்சர்யமளிக்கக் கூடியதாக இல்லை.
திருமண செலவினங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படாத நிலையில், மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் தரவையே எச்சரிக்கையுடன் நாட வேண்டியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பிரைடுபுக் (Bridebook.co.uk) என்ற திருமண ஏற்பாட்டு சேவை நிறுவனத்தின் இணையதளமானது, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் சேர்ந்து 32 மில்லியன் பவுண்டுகள் இருக்குமென்று கூறுகிறது.
கேக்குகளுக்கு 50,000 பவுண்டுகள், மலர் அலங்காரத்துக்கு 110,000 பவுண்டுகள் மற்றும் உணவு ஏற்பாடுகளுக்கு 286,000 செலவாகுமென்று அந்த இணையதளம் கூறுகிறது.
இதுகுறித்து இந்த இணையதள திருமண சேவை நிறுவனத்தின் உரிமையாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த தொகையானது சந்தையில் நிலவும் சேவைகளின் மதிப்பை கொண்டு உத்தேசமாக தொகுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
யார் பணமளிக்கிறார்?
திருமணத்திற்கான பாதுகாப்பு செலவு வரி செலுத்துவோர் மூலம் ஈடுகட்டப்படும்.
இதற்கு முன்னர், தாமஸ் வேலி போலீசார் அரச குடும்பத்திற்கான திருமண பாதுகாப்பு தொகையை தாங்களே ஏற்றுக்கொண்டனர்.
ஆனால், பாதுகாப்புக்காக காவல்துறையினர் செலவிடும் குறிப்பிட்ட தொகையை நிகழ்ச்சி முடிந்த பிறகு, நாட்டின் உள்துறை அமைச்சகத்திடம் பெற்றுக்கொள்ளுவதற்கு வழிவகைகள் உண்டு.
பாதுகாப்பை தவிர்த்து மற்ற விடயங்களுக்கான செலவினங்களை தாங்களே செலுத்துவோம் என்று அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் அரசின் கருவூலத்திலிருந்து கணிசமான தொகை அரச குடும்பத்திற்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அரச குடும்பத்தை சேர்ந்தவர்களில் சிலர் மற்ற விடயங்களின் மூலமாகவும் பணத்தை பெறுகின்றனர்.
உதாரணத்துக்கு, இளவரசர் சார்லஸ் தோட்டங்கள், நிலம் மற்றும் நிதிசார்ந்த முதலீடுகளின் மூலமாக கூடுதல் வருமானத்தை பெறுகிறார்.
ஆனால், இவற்றில் எதிலிலிருந்து அரச குடும்பத்தினர் திருமணத்திற்கான பணத்தை ஒதுக்க போகின்றனர் என்று இதுவரை தெரியவில்லை.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












