அதிபர் தேர்தலில் தலையீடு: 19 ரஷ்யர்களுக்கு அமெரிக்கா தடை

அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தலையீடு செய்ததாகவும், இணையவழித் தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி 19 ரஷ்ய நாட்டவர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

டொனால்டு டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டொனால்டு டிரம்ப்

இந்தத் தடை மூலம் மேற்கண்ட 19 நபர்களுக்கு அமெரிக்காவில் ஏதேனும் சொத்துகள் இருந்தால், அவை முடக்கப்படும். அவர்களுடன் அமெரிக்கர்கள் தொழில் ரீதியான உறவு வைத்துக்கொள்ளவும் தடை செய்யப்பட்டுள்ளது.

நீதித் துறையின் சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் மியூலரால் கடந்த மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கமான ஏவ்ஜென்ஸி பிரிகோஜின் எனும் தொழில் அதிபர் மற்றும் அவரது ஊழியர்கள் ஆகிய 13 நபர்களும் அவர்களில் அடக்கம்.

ரஷ்ய அரசின் உளவுப் பிரிவு உள்பட ஐந்து ரஷ்ய அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது இன்றைய தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம் அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்த முயன்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து செயல்படும் 'இன்டர்நெட் ரிசர்ச் ஏஜென்சி' எனும் இணையதள ஆய்வு அமைப்பும் இந்தத் தடைப் பட்டியில் உள்ளது.

அழிவை உண்டாக்கும் இணையவழித் தாக்குதல் நடத்தியதாகவும், முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை அழிக்க இலக்கு வைத்ததாகவும் அவர்கள் மீது கருவூலச் செயலர் ஸ்டீவன் மனூஷின் குற்றம் சாட்டியுள்ளார்

இன்று விதிக்கப்பட்டுள்ள தடைகள் என்று அமலுக்கு வரும் என்று அவர் குறிப்பிடாவிட்டாலும், அந்த 19 பேருக்கும் அமெரிக்காவின் நிதிக் கட்டமைப்பை அணுகுவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் துண்டிக்கும் நோக்கிலேயே இத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

அமெரிக்காவின் இந்தத் தடைகள் குறித்து ரஷ்ய அரசு அமைதி காப்பதாக அந்நாட்டு வெளியுறவு இணை அமைச்சர் செர்கெய் ரியாப்கோவ் கூறியுள்ளதாக இன்டெர்பேக்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

எனினும், எதிர் நடவடிக்கைகளை ரஷ்யா தொடங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார் என்றும் அச்செய்தி முகமை கூறுகிறது.

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் மீது நடந்த கொலை முயற்சியின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக தாம் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ''நம்பகமான விளக்கம் அளிப்பது'' ரஷ்யாவின் பொறுப்பு என்று பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் தாங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் மீதான நச்சு வேதிப்பொருள் தாக்குதலுக்கு ரஷ்யாவே பொறுப்பு என்று கூறி 23 ரஷ்ய வெளியுறவு அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது. எனினும், அந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: