குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்11) நடந்த தீவிபத்தில் சிக்கி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நான்கு நாட்களாக சிகிச்சை எடுத்துவந்த அனுவித்யா மற்றும் கண்ணன் ஆகியோர் இறந்துவிட்டதாக அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனுவித்யா

பட மூலாதாரம், ANU VIDYA / FACEBOOK

படக்குறிப்பு, அனுவித்யா (மத்தியில்)

கண்ணன் மற்றும் அனுவித்யா ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்த நிலையில் இருவரும் வியாழக்கிழமை மரணம் அடைந்துவிட்டதாக மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

70 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணனின் உடலில் பலத்த காயங்களும், உள்உறுப்புகளில் தீயின் புகை மோசமான பாதிப்புகளும் ஏற்பட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

90 சதவீத தீக்காயங்களுடன் நான்கு நாட்களும் தன்னம்பிக்கையுடன் இருந்த அனுவித்யாவின் இழப்பு பலருக்கும் வருத்தத்தை அளிப்பதாக அமைந்துவிட்டது.

சந்திக்க வந்த நண்பர்களிடம் தான் மீண்டும் வந்துவிடுவேன் என்று உறுதியாக கூறிவந்த அனுவித்யாவுக்கு இரண்டு நாட்களாக சிறுநீரக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதால் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

குரங்கணியில் மலைஏற்றம் பயிற்சியில் ஈடுபட்ட 36 நபர்களில் எட்டு நபர்கள் சிறிய அளவிலான காயங்களுடன் உயிர்தப்பினர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒன்பது நபர்கள் இரண்டாவது நாளே இறந்துவிட்டதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: