வேதிப்பொருள் தாக்குதல்: 'ரஷ்யா விளக்கமளிக்க வேண்டும்'- பிரிட்டனின் நேச நாடுகள்
முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் மீது நடந்த கொலை முயற்சி தொடர்பாக ''நம்பகமான விளக்கம் அளிப்பது'' ரஷ்யாவின் பொறுப்பு என்று பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் தாங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தி நடந்த முதல் தாக்குதல் இது என்று கண்டனம் தெரிவித்துள்ள இந்த கூட்டறிக்கை, பிரிட்டனின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் இது என்றும் கூறியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தங்கள் நாட்டில் பணியாற்றும் ரஷ்யாவை சேர்ந்த 23 ராஜீய அலுவலர்களை பிரிட்டன் வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
வியாழக்கிழமையன்று தாக்குதல் நடந்த பகுதியை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே பார்வையிட்டார்.
''இந்த வெட்கக்கேடான மற்றும் வெறுக்கத்தக்க செயலுக்கு ரஷ்யாவே பொறுப்பு என்று கருதுகிறோம்'' என்று தெரீசா மே தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், EPA/ Yulia Skripal/Facebook
முன்னதாக, பிரிட்டனில் கடந்த மார்ச் 4 அன்று மயங்கிய நிலையில் காணப்பட்டு, தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் 66 வயதாகும் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் 33 வயதாகவும் அவரது மகள் யூலியாவை கொல்ல நோவிசோக் (novichok) எனப்படும் நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பிரிட்டன் காவல் துறை கூறியுள்ளது.
ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












