துணியில் கறை நீக்கிய சலவை தொழிலாளிகள் வாழ்க்கையில் கரையேறினார்களா?

- எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
- பதவி, பிபிசி தமிழ்
தொழில்நுட்பம் வளர வளர கைத் தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. பல தொழில்கள், அதன் கடைசி பரம்பரையினரின் கைகளில்தான் இருக்கின்றன.
தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் சுருங்கி விட்ட பல தொழில்களில் ஒன்றுதான் சலவைத்தொழில். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குமுன், ஆங்கிலேயர் காலத்தில் சலவைத்துறைகள் அமைக்கப்பட்டன.
ஐந்தாறு தலைமுறைகளாக தொடர்ந்து சலவைத்தொழில் மட்டுமே வாழ்க்கை என்று அங்கேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, வாழ்ந்து வரும் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள், எவ்வளவு தலைமுறைகளானாலும் தங்கள் வாழ்வில் பெரியளவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்கிறார்கள்.
வெயிலோ, மழையோ இரண்டுமே இவர்களுக்குத் தேவை. ஆனால், இரண்டும் எல்லை அளவை மீறினால் இவர்களது அன்றாட வாழ்க்கை திண்டாட்டமாகிவிடும்.

அவர்களின் தொழில் குறித்து மேலும் தெரிந்துகொள்ள காலை 6 மணியளவில் சென்னை வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள சலவைத்துறைக்கு சென்றோம். காலை வேளையிலும் சலவைத்தொழிலாளிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
அங்கு மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த நாகு என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம், "நாங்க 60-70 வருஷமா இதே இடத்துலதான் வேலை செஞ்சிட்டு வரோம். சௌகார்பேட்டை, எக்மோர்னு வெளில இருந்து துணிகள எடுத்துட்டு வந்து துவச்சு குடுப்போம். பெரிய வருமானம் இல்லை" என்கிறார்.
சலவைத் தொழிலாளிகள் நலனுக்கென தனியாக அரசாங்கம் பெரிதாக ஏதும் செய்வதில்லை என்று அங்குள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒரு சட்டைக்கு 20 முதல் 25 ரூபாய் வரை கட்டணம். லாண்டரிகாரர்களிடம் பேசாமல் 45 ரூபாய் வரை தரும் மக்கள் எங்களுக்கு 20 ரூபாய் தர பேரம் பேசுகிறார்கள் என்று சலவைத் தொழிலாளர்கள் சலித்துக் கொள்கின்றனர்.
சலவைத்துறை வரலாறு குறித்து ஆர்வமாக பேசுகிறார் வண்ணாரப்பேட்டையிலே பிறந்து வளர்ந்த 75 வயதான ஆறுமுகம்.

"என் அப்பா இந்த இடத்துக்கு பல வருடங்களுக்குமுன் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து குடிபெயர்ந்து வந்தார். பழனிமலையார் என்பவருடைய இடம் இது. சலவைத்தொழில் செய்ய 1940ஆம் ஆண்டு அவர் என் அப்பாவுக்கு இந்த இடத்தை கொடுத்தார். நான் 1943ஆம் ஆண்டு பிறந்தேன்" என்கிறார் ஆறுமுகம்.
அப்போது 8 முதல் 10 பேர்தான் இந்தத் தொழில் செய்து கொண்டிருந்ததாகவும், வக்கீல்கள், நீதிபதிகள் போன்றோரிடம் இருந்து துணிகள் வாங்கி வந்து சலவை செய்து தந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
"முன்பெல்லாம் நாங்கள் ஓலை வீட்டில்தான் இருந்தோம். அப்புறம் எம்.ஜி. ஆர் காலத்துல எங்களுக்கு வீடு கட்டி கொடுத்தாங்க" என்று நினைவு கூறுகிறார் அவர்.

அந்த காலத்தில் இந்த சலவைத்துறை ஒரு சுடுகாட்டுக்கு பக்கத்தில் இருந்தது. இப்போ இந்த சலவைத்துறை இருக்கும் இடம் குளமாக இருந்தது. சடலத்தை சுடுகாட்டில் புதைத்து விட்டு இந்த குளத்திற்கு நல்லது கெட்டது செய்ய வருவார்கள். இது ஒரு புண்ணிய ஸ்தலமாக கருதப்பட்டது. காலப்போக்குல சுடுகாடு இருந்த இடத்தை எல்லாம் ப்ளாட் போட்டு விற்று விட்டார்கள். இது சலவைத்துறை ஆனது என்று அவர் குறிப்பிட்டார்.
"இங்க வண்ணான் சாதியை தவிர வேறு எந்த சாதிக்காரங்களையும் உள்ளே அனுமதிக்க மாட்டோம்" என்கிறார் அவர்.
முன்னாடி இருந்த அளவிற்கு இப்போது தொழில் இல்லை என்றும், தங்கள் பிள்ளைகள் எல்லாம் படித்துவிட்டு வேறு வேலைக்கு போய் விட்டதாகவும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

"இப்ப எல்லார் வீட்டிலையும் வாஷிங் மெஷின் இருக்கு. அவங்களே துணிகளை எல்லாம் துவச்சிக்கறாங்க. அதனால எங்களுக்கு துணிகள் வரதில்லை" என்று தொழில்நுட்பம் சலவைத் தொழிலை சுருக்கி விட்டது குறித்து விவரிக்கிறார் ஆறுமுகம்.
மக்களே துணிகளை வீட்டில் துவைத்துக் கொள்வதால் இஸ்திரிக்குதான் அதிகளவில் துணிகள் வருகிறது என்கிறார் அவர். அதனால் சலவைத் தொழிலுக்கு பதிலாக இஸ்திரி தொழிலுக்கு பல சலவைத் தொழிலாளர்கள் சென்று விட்டதாக குறிப்பிடுகிறார்.

அடுத்து, வண்ணாரப்பேட்டையில் உள்ள புச்சம்மாள் தெருவில் உள்ள சலவைத்துறைக்கு சென்றோம்.
இங்கு சலவைத் தொழில் செய்பவர்கள் தெலுங்கு மொழி பேசக்கூடியவர்கள்.

"70 வருஷமா இருக்கோம். அப்பா, தாத்தா காலத்தில் இருந்து இதுதான் எங்க இடம். பசங்க எல்லாரும் படிச்சு வேற வேலைக்கு போயிட்டாங்க. வருமானம் முன்னவிட நல்லா இருக்குனாலும் எங்களுக்கு வயசாயிடுச்சு. பழைய மாதிரி எதுவும் செய்ய முடியல. மேலும், வாஷிங் மெஷின் வந்துட்டதுனால எங்களுக்கு துணி அவ்வளவா வரதுமில்ல" என்கிறார் சலவைத் தொழிலாளி ஸ்ரீனிவாசன்.
அந்த காலத்தில் சைக்கிள் எடுத்துக் கொண்டு சென்னையில் பல இடங்களுக்கு சென்று துணிகள் எடுத்துக் கொண்டு வந்ததாகவும், இப்போது வயது மூப்பு காரணமாக ஆட்டோவில் சென்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் தமிழக அரசு சலவைத்துறையில், துணிகளை வைக்கவும் இஸ்திரி செய்யவும் கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளதாகவும், தண்ணீருக்காக மோட்டார் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் எதுவும் திறக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை துணி வெளுக்கும் இவர்கள் பத்து வருடம் கழித்து இந்த தொழிலை பார்க்க முடியாது என்கின்றனர்.
தங்களுக்கு அடுத்த தலைமுறையினர் எல்லாம் படித்து நல்ல வேலையில் இருப்பதால் இந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், ஒரு சிலரோ இந்த தலையெழுத்து எங்களுடன் போகட்டும், எங்கள் குழந்தைகள் எல்லாம் படித்து நல்ல வேலைக்கு போகிறது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தனர்.

வண்ணாரப்பேட்டையின் வரலாறு என்ன?
வண்ணாரப்பேட்டையின் வரலாறு குறித்து பத்திரிகையாளரும், எழுத்தாளருமான தமிழ்மகனிடம் பேசினோம்.
1600களில் கிழக்கு இந்திய கம்பெனி, இந்தியா வந்தபோது அவர்களின் பிரதான நோக்கம் தொழில் செய்வதே. அவர்கள் செய்யும் தொழில்களுக்கு ஒரு பெரிய சந்தை தேவைப்பட்டது. அப்படியொரு சந்தையாகத்தான் இந்தியாவை அவர்கள் பார்த்தனர்.
அதன் ஒரு பகுதியாக கப்பல் கப்பலாக ஆடைகள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டது. அந்த ஆடைகளை வெளுக்கவும், சாயம் பூசவும் இடம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
முதலில், சென்னை பூந்தமல்லியை அடுத்த பெத்தநாயக்கன்பேட்டையை தேர்ந்தெடுத்தனர். ஆனால், அங்கு இதற்கான போதிய நீர்நிலைகள் இல்லை.

பட மூலாதாரம், Hulton Archive
இந்தக் காரணத்தினால் சலவைத்தொழில் வடசென்னைக்கு மாற்றப்பட்டது. கடற்கரை ஓரம் என்பதாலும், அங்கு குளங்கள் போன்ற நல்ல நீர் ஆதாரங்கள் இருந்ததாலும் இங்கு பல இடங்களில் ஆங்கிலேயர்கள் சலவைத்துறைகளை அமைத்தனர். சலவை செய்து வந்த சமூக மக்கள் ஒன்றாக சேர்ந்து ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த ஆடைகளை அங்கு வெளுத்து வந்தனர்.
காலம் மாற மாற எல்லாம் மாறியது. 1900களில் நீதிபதிகள், மருத்துவர்கள், வக்கீல்கள் துணிகளை வாங்கி சலவைக்காரர்கள் வெளுத்து வந்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்தும் துணிகள் வாங்கப்பட்டு வெளுத்து கொடுக்கப்பட்டது.
சலவைத்தொழில் தீவிரமாக செய்யப்பட்டு வந்ததால், தண்ணீர் தேங்காமல் இருக்க நல்ல வடிகால் அமைப்பு தேவைப்பட்டது. இதில் ஆங்கிலேயரின் சுயநலம் இருந்தாலும், வடசென்னைக்கு நல்ல வடிகால் அமைப்பை அவர்கள் செய்து தந்தனர்.

தற்போதைய நிலையில், சலவைத் தொழில் தனது இறுதிக் கட்டத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்தத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மூத்தவர்களுடன் சலவைத் தொழிலும் முடிவுக்கு வருகிறது என்றே அவர்கள் ஆழமாக நம்புகிறார்கள்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












