உங்களை நீங்களே ஏமாற்றி வெற்றி பெறுவது எப்படி?
இந்த ஆண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி முடியப் போகிறது, இவ்வருடத்துக்காக நீங்கள் புத்தாண்டு தினத்தன்று திட்டமிருந்த பல உறுதிமொழிகள் உங்களுக்கு மறந்தே கூட போயிருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
புத்தாண்டு உறுதிமொழிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட பல சிறிய அளவிலான ஆராய்ச்சிகள், மக்களில் வெறும் 40% பேர்தான் இதுபோன்ற உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதாகவும், அதில் பாதிப்பேர் மட்டுமே வருடம் முழுவதும் கடைபிடிப்பதாகவும் கூறுகிறது. குறிப்பாக, அதிலும் வெறும் 8% பேர்தான் தங்களது குறிக்கோள்களை அடைந்துள்ளதும் ஒரு கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
புத்தாண்டு உறுதிமொழிகளை கடைபிடிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தாலும், அதை தொடர்ந்து முயற்சிப்பதை நாம் நிறுத்துவதேயில்லை. இந்நிலையில், உங்களது புத்தாண்டு உறுதிமொழிகளை தொடர்ந்து கடைபிடிப்பதற்கு உதவும் ஒரு புதிய தந்திரம் குறித்து இப்போது தெரிந்துகொள்வோம்.
'அதிக பாதிப்பை விளைவிக்காத ஏமாற்றுதல்' என்ற வழிமுறை மக்கள் தங்களது குறிக்கோள்களை அடைவதற்கு உதவும் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. இது பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலுள்ள 'தி வேர்டன் பள்ளி'யில் சந்தைப்படுத்தல் துறையின் துணைப் பேராசிரியரான மரிசா ஷெரிஃப்பின் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.
இது எப்படி வேலை செய்கிறது?
எல்லா குறிக்கோளையும் அடைந்ததாக வேண்டும் அல்லது எதுவுமே வேண்டாம் என்ற அணுகுமுறை மிகவும் தவறானது என்று அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகிறது. நமது குறிக்கோள் பதிலாக 'அவசரகால இருப்புகளை' உருவாக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அதாவது நமது இயல்பான நடைமுறை கொண்ட வாழ்க்கையில் ஏதாவதொன்றை நமக்குநாமே ஏமாற்றிக்கொண்டு செயல்படுவது புத்துணர்ச்சியுடன் செயல்படுவதற்கு உதவும் என்றும், இது ஒரு விதமான கட்டமைக்கப்பட்ட நெகிழ்வுத்தன்மை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
உடற்பயிற்சிகள் மற்றும் பணசேமிப்பு நடவடிக்கைளை மேற்கொள்பவர்கள் அவ்வப்போது தங்களுக்குள்ள அழுத்தத்தை போக்கிக்கொள்வதற்காக இதுபோன்ற பாதிப்பு விளைவிக்காத ஏமாற்றுதலை செய்வது இயல்பான ஒன்றாகும்.
பலர் உறுதிமொழிகளை எடுக்கும்போது காட்டும் கடுமையை தொடர்ந்து மேற்கொள்வதால் அவர்களின் உறுதிமொழிகளை அடைவதில் சுணக்கம் ஏற்படுவதாக ஷெரிஃப் கூறுகிறார்.
உதாரணத்திற்கு, ஒரு கணக்கெடுப்பில் பங்கேற்ற 273 பேர் தங்களது நடைப்பயணத்தை திறன்பேசி (ஸ்மார்ட் ஃபோன்) செயலியை பயன்படுத்தி நடக்கும்போது தாங்கள் எடுத்து வைக்கும் அடிகளை எண்ண வேண்டும் என்று கூறினார்கள்.
அதில், முதல் குழு, 7,000 முதல் 10,000 அடிகள் நடப்பதை தொடர்ந்து வாரத்தின் ஏழு நாட்களில் அடைய வேண்டும் என்றும், இரண்டாம் குழு அதே இலக்கை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களில் அடைய வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
மூன்றாவது குழு "இரண்டு நாட்கள் அவசரகால விடுப்புகளை" எடுத்துக்கொண்டு ஏழுக்கும் மேற்பட்ட நாட்களில் அதே இலக்கை அடையலாம் என்று முடிவு செய்யப்பட்டது. நான்காவது குழுவிற்கான அவசரகால விடுப்பு நாட்கள் பகிரப்பட்டு ஒரு மாதம் முழுவதுமான காலகட்டத்தில் இலக்கை அடையலாம் என்று கூறப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
அவசரகால விடுப்பு நாட்கள் எடுப்பதற்கு அனுமதிக்கப்படாத குழுவைவிட, அதற்கு அனுமதிக்கப்பட்ட குழுவினர் வாரத்திற்கு அதிகளவிலான நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்தது அந்த ஆராய்ச்சியின் வாயிலாக தெரியவந்துள்ளது.
இதுபோன்ற அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஏமாற்றிக்கொள்ளும் வேலைகள் இரண்டு வழிகளில் வேலை செய்வதாக ஷெரிஃப் கூறுகிறார். தங்களுக்கு பிறகு எப்போதாவது தேவைப்படும் என்ற எண்ணத்தில் மக்கள் தங்களது அவசரகாலத்தில் மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு தயங்குகிறார்கள். அவர்கள் அவசரகாலமற்ற சூழ்நிலையில் விடுப்புகளை வீணாக்குவதைப் பற்றி மோசமாக உணர்கிறார்கள்.
இரண்டாவதாக, நீங்கள் உங்களது "பாதிப்பு ஏற்படுத்தாத ஏமாற்றுதலை" பயன்படுத்தினால் முதலாவது வகையினரில் சிக்குவதிலிருந்து தப்பிக்கிறீர்கள். எனவே, உங்களது குறிக்கோளை முழுவதுமாக அடைய முடியாத சூழல் ஏற்பட்டால், குறிக்கோளை முற்றிலுமாக கைவிடும் வாய்ப்பு குறைவாக உள்ளதென்று ஷெரிஃப் கூறுகிறார்.
இதுபோன்ற விடுப்பெடுக்கும் அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஏமாற்றுதல், ஒருவர் தனது நீண்டகால குறிக்கோள்களில் கவனம் செலுத்துவதற்கு உதவுவதாக லீனா ரின்னே என்ற வல்லுநர் கூறுகிறார்.

"ஏதோ ஒன்றை அடைவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இலக்குகள் துவங்கினாலும், அது உங்களுக்கு கிடைத்த குறிப்பிட்ட தருணத்தை பொறுத்தே அமைகிறது. 'அவசரகாலத்தில் மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை' பயன்படுத்திக்கொள்வதற்கு உங்களை நீங்களே அனுமதிப்பதே அதிலுள்ள முக்கியமான விருப்பத் தேர்வாகும்."
ஆனால், அவசரகாலத்திற்கான வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கென்று வரம்புகள் உள்ளன. ஒருவருக்கு ஏமாற்றுவதற்கென்று அதிகளவிலான வாய்ப்புகள் இருக்கும்பட்சத்தில் அவை குறிக்கோளை அடைவதை நோக்கிய செயல்பாட்டில் பெரும் பாதிப்பைத்தான் உண்டாக்கும் என்று ஷெரிஃப் கூறுகிறார்.
தாங்கள் திட்டமிட்ட அவசரகால வரம்பை மீறும்போது ஒருவர் எதிர்மறையான எண்ணத்தை பெறுவதற்கும் சரிசமமான வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
ஒவ்வொருவரும் தங்களுடைய இலக்கை, குறிக்கோளை அடைவதற்கு விதவிதமான வழிமுறைகளை கையாள்கின்றனர். முறைப்படுத்தப்பட்ட சில சமரசங்களை செய்துகொள்ளும் வழிமுறை மூலம் சிலருக்கு பொருந்திப்போக வாய்ப்பிருந்தாலும், குறிப்பிட்ட வரம்பை மீற விரும்பாத மற்றவர்களுக்கு இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












