என்ன நடக்கிறது மாலத்தீவில்? - அ முதல் ஃ வரை

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் தனது அதிகாரத்தை இறுகப் பற்றி கொள்ள விரும்புவதால் அந்த தீவு தேசத்தில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் வளர்ந்து `அவசர நிலை` பிரகடனப்படுத்தும் அளவிற்கு சென்றுவிட்டது.

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் கயூம்

பட மூலாதாரம், Getty Images

மாலத்தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல, அப்துல்லா யாமீன் கயூம் அதிபராக பொறுப்பேற்றப் பின் 2013 ஆம் ஆண்டு ஒரு முறை அவசர நிலையை பிரகடனப்படுத்தி இருக்கிறார்.

என்ன நடக்கிறது அந்த தீவு தேசத்தில்?

பிப்ரவரி 5ஆம் தேதி அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அவசர நிலையை பிரகடனப்படுத்தி, அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை முடக்கிய அப்துல்லா யாமீன், இந்நிலை 15 நாள் வரை தொடரும் என்று அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபரின் சகோதரருமான அப்துல்லா கயூம் கைது செய்யப்பட்டார்.

மாலத் தீவு

பட மூலாதாரம், Getty Images

அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட ஒன்பது எதிர்கட்சி தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத புகாரினை ரத்து செய்து அண்மையில் அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முகமது நஷீத் மாலத்தீவிலிருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் வசித்து வருகிறார்.

பதவி பறிக்கப்பட்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் பதவி வழங்கியது இந்த தீர்ப்பு.

இது மட்டுமல்லாமல், அந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் முகமது நஷீத், இந்த ஆண்டு அந்த நாட்டில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வழி வகை செய்தது இந்த தீர்ப்பு.

முகமது நஷீதை தனது போட்டியாளராக கருதுகிறார் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன்.

தொடரும் போராட்டம்

அப்துல்லா யாமீன் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு கீழ்படிய வேண்டும் என்று வலியுறுத்தி அந்நாட்டின் தலைநகர் மாலேவில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் உச்சநீதிமன்ற தீர்ப்பினை மாலத்தீவு அரசு மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. ஆனால், இந்த அழுத்தங்களுக்கு அவர் வளைந்து கொடுக்கவில்லை. இந்தப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர அவசர நிலை பிரகடனப்படுத்தி உள்ளார்.

யார் இந்த அப்துல்லா யாமீன்?

இப்போது அதிபராக இருக்கும் ஐம்பத்து எட்டு வயதான அப்துல்லா யாமீன் அந்த நாட்டின் சக்தி வாய்ந்த அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். அவரின் தந்தை அப்துல் கயூம் இப்ராஹிம், மாலத்தீவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல். அவரின் சகோதரர் அப்துல் கயூம், அந்த தீவு தேசத்தில் அதிபராக 1978 முதல் 2008 வரை இருந்தவர். ஆசிய கண்டத்தில் அதிக நாட்கள் அதிகாரத்தில் இருந்த தலைவர்களில் அவரும் ஒருவர்.

மாலத் தீவு

பட மூலாதாரம், Getty Images

மாலத்தீவின் முற்போக்கு கட்சியின் உறுப்பினராக, 1993 ஆம் ஆண்டு, அப்துல்லா யாமீன் தனது அரசியல் அத்தியாயத்தை தொடங்கினார். பின் தெற்கு மிலாதுன்மடுலு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு முறை இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் அப்துல்லா.

பின், 2013 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்று அந்நாட்டின் அதிபரானார். இத்தேர்தலில் தோல்வியுற்ற முகமது நஷீதின் ஆதரவாளர்கள், அப்துல்லா யாமீன் பெற்ற வெற்றி மோசடிகளால் பெற்ற வெற்றி என்று கூறினர்.

அப்துல்லா லெபனானில் உள்ள பெய்ரூட் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிக மேலாண்மையும், கலிஃபோர்னியாவில் உள்ள க்ளார்மொண்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்.

மாலத் தீவு

பட மூலாதாரம், Getty Images

சர்ச்சை நாயகன்

அப்துல்லாவின் அரசியல் வளர்ச்சி, சர்ச்சைகள் நிறைந்த ஒன்று. அவர் அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து, மாலத்தீவின் ஜனநாயகத்தில் பல மாறுதல்களை கொண்டு வந்தார். தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக தனது அதிகாரத்தை பயன்படுத்த அவர் என்றும் தயங்கியதில்லை என்கிறது மாலத்தீவின் உள்ளூர் ஊடகமான அவாஸ்.

அப்துல்லாவின் அரசியல் எதிரிகள் அனைவரும் ஒன்று வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று வாழ்ந்து வருகிறார்கள் அல்லது சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் மீதும் பயங்கரவாத குற்றசாட்டுகளை சுமத்திதான் சிறையில் அடைத்தார் அப்துல்லா. பிப்ரவரி 1-ஆம் தேதி அந்நாட்டு உச்சநீதிமன்றம் அவர்களை விடுவிக்கக் கோரி தீர்ப்பளித்தது.

என்ன சொல்கிறார்கள்?

அப்துல்லா யாமினின் எதிர்ப்பாளர்கள், அப்துல்லா சட்டத்தை மதிக்காதவர் என்று தொடர்ந்து தாக்கி வருகிறார்கள்.

அப்துல்லா மாலத்தீவை படுகுழியில் தள்ளிவிட்டதார் என்று முன்னாள் அதிபர் நஷீத் கூறியதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது அவாஸ்.

இந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி, நஷீத் பகிர்ந்த ஒரு ட்வீட்டில் அப்துல்லாவை பதவி விலக கோரி இருந்தார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருப்பது ஆட்சிகவிழ்ப்புக்கு வழிவகுக்கும் என்று கூறி இருந்தார்.

முன்னாள் அதிபர் நஷீத்

பட மூலாதாரம், Getty Images

"இப்போதைய அதிபர் வஞ்சகம் நிறைந்த, மோசமான அதிபர். அவரது ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நாம் அனைத்து வகையிலும் முயற்சி செய்ய உறுதி எடுக்க வேண்டும். நாம் நிச்சயம் அதனை செய்வோம்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் லத்தீஃப் முகமத் கூறியதாக ராஜ்ஜி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் அதே நேரம் அதிபரின் ஆதரவாளர்கள், இதனை மறுக்கிறார்கள். நீதிமன்ற தீர்ப்புக்கும் அதிபர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற வாதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள்?

"அதிபர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பு கூறவில்லை." என்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :