ஆதார் கசிவை அம்பலப்படுத்தியவருக்கு அரசு விருதளிக்க வேண்டுமே தவிர விசாரணையல்ல: எட்வர்ட் ஸ்னோடன்

ஆதார் தகவல் விற்பனை குறித்து த டிரிபியூன் பத்திரிக்கை வெளியிட்டிருந்த செய்திக்கு அக்கட்டுரையை எழுதிய ரச்னா கைரா மீது காவல்துறை வழக்கு பதிந்திருந்த நிலையில், அரசின் நடவடிக்கைக்கு முன்னாள் அமெரிக்க உளவுப் பகுப்பாய்வாளரான, எட்வர்ட் ஸ்னோடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

'த டிரிபியூன்' பத்திரிக்கையின் செய்தியாளருக்கு ஆதரவாக, எட்வர்ட் ஸ்னோடன் தனது ட்விட்டர் கணக்கில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க அரசு தனது குடிமக்களை வேவுபார்ப்பதாக தகவல் கசியவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வர்ட் ஸ்னோடன். இவர், 'த டிரிபியூன்' பத்திரிக்கையின் செய்தியாளரை அரசு பாராட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஸ்னோடன் தனது ட்விட்டர் பதிவில், ஆதார் தரவுகள் கசிவை அம்பலப்படுத்திய செய்தியாளருக்கு அரசு விருது அளிக்க வேண்டுமே தவிர விசாரணை அல்ல என்றும், உண்மையிலேயே நீதி குறித்து அரசு அக்கறை கொண்டுள்ளது என்றால், பில்லியன் கணக்கான இந்தியர்களின் அந்தரங்க தகவல்களை அழிக்கும் கொள்கைகளில் சீர்திருத்தத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆதார் கசிவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டுமெனில், இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யூ.ஐ.டி.ஏ.ஐதான் கைது செய்யவேண்டும் என்றும் ஸ்னோடன் குறிப்பிட்டுள்ளார்.

'த டிரிபியூன்' பத்திரிக்கையின் செய்தியாளரான ரச்னா கைரா, எவருடைய ஆதார் அட்டை தகவலையும் 500 ரூபாய் கொடுத்தால் 10 நிமிடங்களுக்கு இணையத்தில் பார்க்கலாம் என்று செய்தி வெளியிட்டிருந்தார்.

இந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தனித்துவ அடையாள ஆணையமான யூ.ஐ.டி.ஏ.ஐ-யின் அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில், அவரின் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் நான்கு பிரிவுகளின்கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஆதார் சட்டத்தின் பிரிவு 36/37இன் கீழும் வழக்கு பதிவாகியுள்ளது.

இவருக்கு ஆதரவளிக்கும் வகையில், ஊடகங்களின் சங்கங்கள் அறிக்கைகள் அளித்துவரும் நிலையில், தற்போது எட்வர்ட் ஸ்னோடனின் பதிவின் மூலமாக, இவ்வழக்கு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :