You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''ஆதார் அட்டை இல்லாவிட்டால் குடியா முழுகிவிடும்?''
- எழுதியவர், ரவி பிரகாஷ்
- பதவி, ஜார்க்கண்ட்
ஆதார் அட்டை பற்றிய சிறப்புத் தொடரை பிபிசி தொடங்கியிருக்கிறது. தொடரின் முதல் கட்டுரையை ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தொடங்குகிறோம்.
பொது விநியோகத்துறை மூலம் அரசு விநியோகிக்கும் பொருட்களை பெற்றுவந்தார் ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டத்தில் உள்ள 'சில்லி டீக்' என்ற கிராமத்தில் வசிக்கும் ஜக்தீஷ் ஹஜாம். இப்போது ரேஷன் கடைகளில் அவர் பொருட்களை வாங்க முடியாத நிலைமை. காரணம் என்ன?
அவரது ஆதார் அட்டை, பொது விநியோகத்துறையின் பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவேற்றப்படவில்லை. பயோமெட்ரிக் இயந்திரத்தில் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டால்தான், ஒருவர் தனது கைரேகையை அதில் பதிந்து பொருட்களை பெறமுடியும். இந்த பிரச்சனையால் உணவுப் பொருட்களை வாங்கமுடியாமல் அவரது குடும்பத்தினர் பட்டினியால் வாடவேண்டியிருக்கிறது.
தனது கிராமத்துக்கான ரேஷன் பொருட்கள் அனைத்தும் பெண்கள் சுய உதவிக்குழு ஒன்றின் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடையில் இருந்து கிடைக்கிறது என்றும், இத்தனை நாட்களாக இதில் எந்த சிக்கலும் இருந்ததில்லை என்று சொல்கிறார் ஜக்தீஷ் ஹஜாம்.
"எங்கள் குடும்பத்தை சிவப்பு வண்ண குடும்ப அட்டையில் என் அம்மா துர்கா தேவியின் பெயர் குடும்பத் தலைவியாக இருக்கிறது. இந்த ரேஷன் அட்டையை பயன்படுத்தித்தான் இவ்வளவு நாட்களாக ரேஷன் பொருட்களை வாங்கிவந்தோம்.
கடந்த இரண்டு மாதங்களாக குறைந்தது ஐந்து முறை ரேஷன் வாங்கச் சென்றேன். ஆனால், என்னுடைய பெயர் இயந்திரத்தில் வரவில்லை என்பதால் ரேஷன் பொருட்களை கொடுக்கமுடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். இந்த ஆதார் இல்லாவிட்டால்தான் என்ன? குடியா முழுகிவிடும்? ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் பசியால் உயிர்தான் போகிறது" என்கிறார் அவர்.
அரசு ஆணை
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கியது ஜார்கண்ட் மாநில அரசு. இதனால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
அண்மையில் சிம்டேகா மாவட்டத்தில் சாந்தோஷி குமாரி உணவு பொருட்கள் கிடைக்காததால், பசியால் தவித்த அவர் இறந்துபோனதாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து, மாநில பொது விநியோகத் துறை அமைச்சர் சரயூ ராய் அரசு உத்தரவை ரத்து செய்தார்.
ரேஷன் கடைகளில் பொருள் விநியோகத்திற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று அவர் கூறினார். இருந்தபோதிலும், அமைச்சரின் இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
புத்னி கோப்பின் துயரம்
ஜார்கண்ட் மாநிலத்தில் சாகுலியாவில் லோதாஷோலி பஞ்சாயத்தின்கீழ் வரும் பாத்ரடோலா கிராமத்தில் வசிக்கிறார் எழுபது வயதான புத்னி கோப். ஆதார் அட்டை இல்லாத ஒரே காரணத்தால் ரேஷனில் பொருட்களை வாங்கமுடியாமல் தவிப்பதாக அவர் வருந்துகிறார்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இந்த மூதாட்டியின் ஓய்வூதியமும், கூலி வேலைக்கு சென்று மருமகள் சம்பாதிக்கும் பணமும்தான் இவர்கள் குடும்பத்தின் வருமானம்.
ஜூன் மாதத்திற்கு பிறகு ரேஷன் பொருட்கள் கிடைக்காததால், தங்கள் வருமானம் அரை வயிற்றுக்குகூட போதவில்லை என்று கண்ணீர் மல்க கூறுகிறார் அந்த மூதாட்டி.
பசித்த வயிறுக்கு உணவில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது மஞ்சள் வண்ண ரேஷன் அட்டை வைத்திருக்கும் இந்த மூதாட்டிக்கு.
ஆதார் அட்டையை பயோமேட்ரிக் இயந்திரத்துடன் இணைக்காததால் ரேஷன் பொருட்கள் வாங்கமுடியாமல் தவிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களில் புத்னி கோப்பின் குடும்பமும் ஒன்று.
இந்த பஞ்சாயத்தின் ரேஷன் பொருட்களுக்கான முகவரின் பொறுப்பற்றத்தன்மை பற்றி சிங்கம்பூம் மாவட்ட துணை கமிஷனர் அமித் குமாருக்கு ஒரு அறிக்கையை அனுப்பினார் ஜார்கண்ட் மாநில உணவு மற்றும் விநியோகத்துறை அமைச்சர். அதில் ரேஷன் பொருட்களை பெற முடியாத மக்கள் பற்றிய விவரமான தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
அமைச்சரின் அறிக்கைக்கு பிறகு நடவடிக்கை சிங்கம்பூம் மாவட்ட துணை கமிஷனர், அந்தப் பகுதியை சேர்ந்த ரேஷன் பொருள் விநியோக முகவரின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும், அவருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யவேண்டும் உத்தரவிட்டார்.
அதோடு, மக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் தடைபடாமல் இருப்பதற்காக, அந்த குறிப்பிட்ட பஞ்சாயத்தை சேர்ந்த மக்களை உடனடியாக அருகிலுள்ள மற்றொரு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் முகவருடன் இணைத்தும் உத்தரவிட்டார்.
பட்டினிச் சாவு
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மாதத்தில் நிகழ்ந்த மூன்று இறப்புக்கள் குறித்து அரசு நிர்வாகமும் கிராம மக்களும் வெவ்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளன.
ஜால்ரேகாவைச் (லிம்டேகா) சேர்ந்த சந்தோஷி குமாரி, ஜஹரியாவை (தன்பாத்) சேர்ந்த பைஜ்நாத் ரவிதாஸ், மோகன்பூர் (தோகோகார்) ரூப்லால் மராண்டி ஆகியோர் வீட்டில் உணவு பொருட்கள் இல்லாததால் பட்டினியால் இறந்துபோனதாக அவர்களது குடும்பத்தார் கூறுகின்றனர்.
ஆனால், மாநில முதலமைச்சர் ரகுவர் தாஸ் மற்றும் அரசு அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ரகுவர் தாஸ், இந்த மரணங்களுக்கு காரணம் பசியல்ல என்று உறுதியாக தெரிவித்தார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தியது. தனது இயலாமையை மறைக்க முயலும் மாநில நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டதாக கோடா மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் தீபிகா பாண்டே சிங் குற்றம் சாட்டுகிறார்.
உண்மையில் மக்கள் பசி பட்டினியால் வாடுகின்றார்கள், மூவரின் இறப்புக்கு காரணம் பசிதான் என்றும், மாநில அரசு மக்களுக்கு ரேஷன் பொருட்களை முறையாக வழங்க முடியாமல் செயலற்றுப் போய்விட்டது என்றும் அவர் சாடுகிறார்.
இதற்கு காரணம் ஆதார் அட்டையே
மோகன்பூர் பூப்லால் மாரண்டியின் தேவ்கரில் 'சக்ரிய சன்ஸ்தா பிரவாஹ்' என்ற அமைப்பின் திட்ட மேலாளர் பபிதா சின்ஹா, ''அரசு தரப்பினர் இவர்களின் மரணத்திற்கு பசி-பட்டினி காரணமில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் வீட்டில் பல நாட்களாக உணவே சமைக்கப்படவில்லை'' என்று கூறுகிறார்.
''அவர்கள் வீடுகளில் எஞ்சியிருந்தவற்றை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார்கள். இருந்தவை முற்றிலும் தீர்ந்துவிட்டால் என்ன செய்வார்கள் ஏழை மக்கள்? ரேஷன் கடை முகவர் அவர்களுக்கு ரேஷன் கொடுக்க மறுத்துவிட்டார். அதற்கு காரணம் அவர்களது ஆதார் அட்டை POS இயந்திரத்தில் பதிவேற்றப்படவில்லை என்பதுதான்!''
சந்தோஷியின் தாய் கோய்லி தேவியும் இதையே சொல்கிறார். ஆதார் அட்டையை காரணம் காட்டியே ரேஷன் கடை முகவர் தங்களுக்கு உணவுப் பொருட்களை கொடுக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
"சித்தப்பா இறந்தபிறகு ரேஷன் கடை முகவர் உணவு பொருட்களை வழங்க மறுத்தார். அப்பா புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்திருந்தார்" என்கிறார் பைஜ்நாத் ரவிதாஸின் மகன் ரவிகுமார். "ஆனால் புதிய ரேஷன் அட்டை வருவதற்கு முன்னரே தந்தை பைஜ்நாத் ரவிதாஸ் இறந்துவிட்டார்" என்கிறார் ரவிகுமார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்