'திமுகவை அழிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது' - மு.க. ஸ்டாலின்
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை விடுதலை செய்து வெளியிடப்பட்ட தீர்ப்பை திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

பட மூலாதாரம், PRAKASH SINGH
இன்று (வியாழக்கிழமை) டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி வழங்கிய தீர்ப்பு குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், ''டெல்லி சிபிஐ நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க மிக்க ஒரு தீர்ப்பு'' என்று தெரிவித்தார்.
திமுகவை அழிக்கும் முயற்சியாக இந்த வழக்கு போடப்பட்டது என்று கூறிய மு.க. ஸ்டாலின், ''இன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், ''பெரிய அளவில் சித்தரிக்கப்பட்டு, பொய் கணக்குகளை காட்டி இந்த வழக்கு போடப்பட்டது. திமுக மீது மக்களிடம் எந்தளவு களங்கம் ஏற்படுத்த வேண்டுமோ அந்தளவுக்கு இந்த வழக்கில் செய்யப்பட்டது'' என்று கூறினார்.

பட மூலாதாரம், CHANDAN KHANNA
''தற்போது வழக்கில் திமுகவை சேர்ந்தவர்கள் குற்றமமற்றவர்கள் என்று தீர்ப்பு வந்த நிலையில், இந்த தீர்ப்பு குறித்து மக்களிடையே எடுத்துச் சொல்லும் பணியை திமுகவினர் செய்திட வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக, இன்று (வியாழக்கிழமை) 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை விடுதலை செய்து டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












