பேச்சுவார்த்தை தடங்களை வடகொரியா திறக்க வேண்டும் - ஐ.நா

ஐ.நாவின் உயரதிகாரி

பட மூலாதாரம், Reuters

போர் அபாயத்தை தவிர்க்க பேச்சுவார்த்தைக்கான தடங்களை வடகொரியா திறப்பது "அவசர தேவையாக" உள்ளதென ஐ.நாவின் உயரதிகாரி, அந்நாட்டின் மூத்த தலைவர்களிடம் கூறியுள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில், ஐ.நாவின் உயரதிகாரியான ஜெஃப்ஃபரி ஃபெல்ட்மேன் , வடகொரியாவிற்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்டதையடுத்து இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.

ஐ.நாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், கண்டம்விட்டு கண்டம்பாயக்கூடிய `மிக சக்திவாய்ந்த` ஏவுகணையை வடகொரியா ஏவிய பிறகு பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த இந்த ஏவுகணை அமெரிக்கா வரை செல்வதற்கான திறன் கொண்டது என வடகொரியா கூறியிருந்தது.

இந்த சூழலில், அமெரிக்காவும் தென் கொரியாவும் பெரியளவிலான ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

'அமெரிக்காவின் விரோத கொள்கை'

வடகொரியாவில், ஐ.நா சபையின் ஆறு நிறுவனங்கள், 50 சர்வதேச பணியாளர்களைக் கொண்டு இயங்கிவருகிறது. அந்த அலுவலகங்கள், உணவு, விவசாயம் மற்றும் சுகாதார உதவிகள் ஆகியவற்றை வடகொரிய மக்களுக்கு அளிக்கின்றன.

பேச்சுவார்த்தை தடங்களை வடகொரியா திறக்க வேண்டும் - ஐ.நா

பட மூலாதாரம், Getty Images

ஆனால், கடைசியாக ஐ.நாவின் மூத்த தலைவர் வடகொரியாவிற்கு பயணித்தது 2011 ஆம் ஆண்டு.

அறிக்கையின் படி, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான தலைவரான ஜெஃப்ஃபரி ஃபெல்ட்மேன் வட கொரியாவின் மூத்த தலைவர்களை சந்தித்த போது "தற்போதுள்ள சூழல், உலகிலேயே அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் பதட்டமான சூழல்" என அனைவரும் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், "தவறான கணிப்புகளை தடுக்க மற்றும் மோதல் ஆபத்துகளை தவிர்க்க பேச்சுவார்த்தை தடங்களை திறக்க வேண்டும் என குறிப்பிட்டு, பதட்டம் அதிகரித்து வருவதால், சர்வதேச சமூகம் இதற்கொரு அமைதியான தீர்வை அடைவதில் உறுதியாக உள்ளதென ஃபெல்ட்மேன் சுட்டிக்காட்டியதாக" அறிக்கை கூறுகிறது.

"அமெரிக்காவின் விரோத கொள்கைகளே" இந்தப் பதட்டத்திற்கு காரணம் என வடகொரியாவின் அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

கிம் ஜாங்-உன்

பட மூலாதாரம், AFP

"எதிர்காலத்தில் பல கட்டங்களில் தொடர் வருகைகளின் மூலம் தொடர்பில் இருக்க" இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் வடகொரிய செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

பியாங்யங்கிற்கு வருகை தரும் முன், வடகொரியாவிற்கு பொருளாதார ரீதியாக முக்கிய கூட்டாளியான சீனாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார் ஃபெல்ட்மேன்.

மற்ற உலகத் தலைவர்கள் தடுத்தும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் மனநிலை சரியில்லாதவர் எனக்கூறி ஒருவரை ஒருவர் அவமானப்படுத்திக் கொண்டனர்.

எனினும், இருத்தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கான தடங்கள் திறந்திருப்பதாக அமெரிக்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியிருந்தார்.

தங்களை உலக நாடுகள் அழிக்க நினைப்பதாகவும், தங்கள் அணு ஆயுத திறன்களே அதை தடுத்து வருவதாகவும் வடகொரிய வாதாடுகிறது.

வரைபடம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :