மேனஸ் தீவில் தஞ்சம் அடைந்தவர்கள் பலவந்தமாக வெளியேற்றம்

பப்புவா நியூ கினியாவில் ஆஸ்திரேலிய அரசால் நடத்தப்பட்டு பிறகு மூடப்பட்ட, 'தஞ்சம் கோரி வந்தோர் தடுப்பு மையத்தில்' இருந்து வெளியேற மறுத்தவர்கள், மூன்று வாரகால இழுபறிக்குப் பிறகு, பலவந்தமாக புதிய இடத்துக்கு மாற்றப்பட்டதை ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.

தஞ்சம் கோருவோர்

பட மூலாதாரம், KALEEM

கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி, மேனஸ் தீவில் உள்ள இம்மையம் மூடப்பட்டதையடுத்து, தஞ்சம் கோரி வந்தவர்கள், உள்ளூர் வாசிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டனர்.

பின்பு இரண்டாம் முறையாக காவல்துறையினர் அங்கு உள்ளே புகுந்ததைத் தொடர்ந்து, தஞ்சம் கோரி வந்த சுமார் 300 பேர் அம்மையத்திலிருந்து பேருந்து மூலம் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் பப்புவா நியூ கினியா போலீஸ் தங்களை கட்டையால் தாக்கியதாக சில கைதிகள் தெரிவித்தனர்.

கைதிகள் தாக்கப்பட்டதாக கூறுவது தவறானது என்றும் அவை மிகைப்படுத்தப்பட்டது என்றும் ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கூறியுள்ளார். தாங்கள் இது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்று ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

தஞ்சம் கோரி வந்தவர்கள், மேனஸ் தீவில் இருப்பது ஏன்?

பிற நாடுகளில் இருந்து படகுகள் மூலம் ஆஸ்திரேலியா வந்தவர்களை மேனஸ் தீவிலும் மற்றும் நௌரு என்ற சிறிய நாட்டிலும் உள்ள தடுப்பு மையங்களில் தங்க வைத்தது ஆஸ்திரேலிய அரசு.

ஆள்கடத்தல் மற்றும் கடல் பயணங்களின் போது ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்பதால் மையங்களில் தடுத்து வைக்கப்பட்ட யாரும் ஆஸ்திரேலியாவில் குடியேற முடியாது என்று அந்நாட்டு அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இதனையடுத்து அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று பப்புவா நியூ கினியா நீதிமன்றம் உத்தரவிட்டதால், ஆண்கள் மட்டுமே தங்க வைக்கப்பட்டிருந்த தடுப்பு மையம் மூடப்பட்டது.

அங்கிருந்த ஆண்கள் எங்கே?

மேனஸ் தீவிலிருந்து பேருந்து மூலம் வேறு மாற்று இடங்களுக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். புதிய இடம் பாதுகாப்பானது என்றும், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் அங்குள்ளதென்றும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்தது.

ஆனால், அப்புதிய மையம் கட்டிமுடிக்கப்படாத புதிய கட்டடம் என்றும், போதுமான பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் அங்கு இல்லை என்றும் ஐ.நா. அகதிகள் உயர் ஆணையம் கூறுகிறது.

என்ன தீர்வு?

ஹொவெல் க்ரிஃபித், பிபிசி சிட்னி செய்தியாளர் இது பற்றிக் கூறும்போது,

"மேனஸ் தீவின் நிலைமைக்கு இன்னும் எந்த தீர்வுமில்லை.

சமீபத்தில் இடம் பெயர்ந்த அகதிகள் சிலர், வெளிநாடுகளில் குடியேற, அமெரிக்காவுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படும் என்று இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஆனால் ஒரு வருடமாகியும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. மிகவும் மெதுவாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நடைமுறையால் இதுவரை சில டஜன் மக்கள் மட்டுமே இத் திட்டத்தின்படி ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

புதிய மையத்தில் உள்ள வசதிகள் குறித்து ஆஸ்திரேலிய அரசின் கூற்று சரியாகவே இருந்தாலும், தஞ்சமைடைந்தவர்களும், அகதிகளும் எவ்வளவு நாட்கள் அங்கு தங்கப் போகிறார்கள் அல்லது அவர்களின் இறுதியில் அவர்கள் எங்கே போவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது," என்று தெரிவித்துள்ளார்.

அவர்கள் எங்கு போகலாம்?

தஞ்சம் கோருவோர்

பட மூலாதாரம், Reuters

பப்புவா நியூ கினியாவில் நிரந்தரமாக மீள்குடியேறலாம், கம்போடியாவில் வாழ விண்ணப்பிக்கலாம் அல்லது நௌருவுக்கு மாறக் கோரலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை அகதிகள் தேர்ந்தெடுப்பதற்கதான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெகு சிலரே இதில் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாக வழக்கறிர்கள் தெரிவித்தனர்.

மேனஸ் தீவு மற்றும் நௌருவிலிருந்து 1,250 அகதிகளை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் இறுதியில் அதைவிட குறைவானவர்களையே அவர்கள் ஏற்றுக்கொள்வர் என்று தெரிகிறது.

ஐ.நா. அகதிகள் உயர் ஆணைய உடன்படிக்கைப் படி, பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள், மேலும் அதிக பலவீனமான அகதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

பப்புவா நியூ கினியா மையத்திலிருந்து 150 அகதிகளை எடுத்துக் கொள்வதாக நியூசிலாந்து தெரிவிக்க, அது தன்னுடைய நாட்டுக்கான ஒரு 'பின் கதவு' என்று கூறி அத்திட்டத்தை ஆஸ்திரேலியா மறுத்துவிட்டது.

சர்ச்சையை ஏற்படுத்தியதா தடுப்பு மையம்?

ஆம். அம்மையம் 2012-ல் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, கலவரத்தில் கொலை செய்யப்பட்ட இரானை சேர்ந்த ரெசா பராட்டி உள்ளிட்ட தஞ்சம் கோரி வந்த ஆறு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், மேனஸ் தீவில் பாதிக்கப்பட்டதாகக் கூறிய தஞ்சம் கோரி வந்தவர்கள் மற்றும் அகதிகளுக்கு 70 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை இழப்பீடாக அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :