செளதி இளவரசரை 'முதிர்ச்சியற்றவர்' 'சிந்திக்காதவர்' எனக் கடுமையாக விமர்சித்த இரான்

பட மூலாதாரம், Reuters
இரானின் அதி உயர் தலைவர் அயத்தொல்லா அலி கொமெனியை மத்திய கிழக்கின் 'ஹிட்லர்' என விவரித்த செளதி அரேபியாவின் இளவரசர் முகமத் பின் சல்மானை 'முதிர்ச்சியற்றவர்' என இரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
இரானுக்கும் சௌதிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து கொண்டிருக்க, சௌதி இளவரசர் முகமத் பின் சல்மான், பிராந்திய சர்வாதிகாரிகளின் 'தலைவிதியை' புரிந்து கொள்ள வேண்டும் என இரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
செளதியின் செயல்முறை ஆட்சியாளர் முகமத் பின் சல்மான், இரானுக்கு எதிராக கடும்போக்கு நிலையை எடுத்துள்ளார்.
இரானின் செல்வாக்கு பரவுவதை செளதி அனுமதிக்காது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் சல்மான் தெரிவித்தார்.
''திருப்திப்படுத்தும் முயற்சி பலனளிக்காது என ஐரோப்பியாவிடமிருந்து கற்றுக்கொண்டோம். மத்திய கிழக்கின் புதிய ஹிட்லர், ஐரோப்பியாவில் நடந்ததை மீண்டும் மத்திய கிழக்கில் செயல்படுத்த நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை'' என அயத்தொல்லா அலி கொமெனி குறிப்பிட்டு சல்மான் கூறியிருந்தார்.

இவரது கருத்துக்கு இரானிடம் இருந்து கடுமையான பதிலடி வந்துள்ளது.
முகமத் பின் சல்மான்,''முதிர்ச்சியற்ற, சிந்திக்காத, அடிப்படையற்ற கருத்துக்கள்'' கொண்டவராக இருப்பதாக இரான் வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பஹ்ராம் கஸீமி குற்றஞ்சாட்டி இருப்பதாக ஓரளவு ஆதிகாரப்பூர்வமான இஸ்னா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
''பிராந்தியத்தின் பிரபல சர்வாதிகாரிகளின் நடத்தையையும், கொள்கைகளையும் முன்மாதிரியாகக் கொண்டுள்ள சல்மான், அந்த சர்வாதிகாரிகளின் தலைவிதியைப் பற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும்'' என பஹ்ராம் கஸீமி கூறியுள்ளார்.
இரண்டு பலமிக்க நாடுகள் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












