கடத்தப்பட்ட 2 ஆண்டுக்குப் பின் பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மீட்பு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் உள்ள லாகூர் நரகில் இருந்து கடத்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளர் ஜீனத் ஷெசாதி மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களுக்கான ஆணையத்தின் தலைவரான, ஓய்வு பெற்ற நீதிபதி ஜாவேத் இக்பால், ஜீனத் மீட்கப்பட்ட தகவலை பிபிசி உருதுவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நேற்று முன்தினம், வியாழக்கிழமை, மீட்கப்பட்டதாக பிபிசி செய்தியாளர் ஷெசாத் மாலிக்கிடம் அவர் தெரிவித்தார்.
சில அரசு அல்லாத குழுக்கள் மற்றும் அரசுக்கு எதிரான ரகசிய அமைப்புகள் அவரைக் கடத்தியதாகவும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் ஜீனத் மீட்கப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
பலோசிஸ்தான் மற்றும் கைபர் பகுன்காவா மாகாணங்களில் உள்ள மலைவாழ் மக்கள் தலைவர்களும் இந்த மீட்பில் முக்கிய பங்காற்றியதாக இக்பால் தெரிவித்தார்.
ஜீனத் மீட்கப்பட்டது குறித்தோ, அவரின் மீட்பு தொடர்பான சம்பவங்கள் குறித்தோ அவரது குடும்பம் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
லாகூரில் உள்ள ஜீனத்தின் வீட்டிற்கு பிபிசி செய்தியாளர் உமர் திராஸ் நங்யானா சென்றபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது.

மூன்று வாரங்களுக்கு முன்பே அவர்கள் அந்த வீட்டில் இருந்து குடிபெயர்ந்துவிட்டதாகவும், ஜீனத் குறித்த தகவல் கிடைத்துள்ளதாக அவரின் தாய் சில நாட்களுக்கு முன்பு தங்களிடம் கூறியதாகவும் அவரின் அண்டை வீட்டில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார். ஜீனத்தின் தாய் நம்பிக்கையுடன் இருந்ததாகவும் அவர் கூறினார்.
லாகூரில் உள்ள ஒரு தொலைக்காட்சிக்காக ஜீனத் பணியாற்றி வந்தார்.
2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆண்டு ஜீனத் ஒரு ரிக்ஷாவில் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது, அதை இரண்டு கோரோலா கார்கள் வழிமறித்ததாகவும், அவற்றில் வந்த ஆயுததாரிகள் அவரைக் கட்டாயப்படுத்தி ஒரு காரில் ஏற்றி கடத்தியதாகவும் மனித உரிமைகள் வழக்கறிஞர் ஹினா ஜில்லானி கூறினார்.
அவர் கடத்தப்பட்டதற்கு மறுநாள், வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கான ஆணையத்தில் அவர் ஆஜராக இருந்தார்.
ஜீனத் கடத்தப்படும் முன்பு, ஹமீது அன்சாரி எனும் இந்தியர் காணாமல் போனது தொடர்பான வழக்கு ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார். மும்பையில் இருந்த ஹமீதின் தாயாருடன் தொடர்பில் இருந்த ஜீனத், அவர் சார்பில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தார்.
ஜீனத் கடத்தப்பட்டிருந்த சமயத்தில் அவரது சகோதரர் சதாம் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். ஜீனத் நீண்ட நாட்களாகக் காணாமல் போயிருந்ததால், சதாம் நம்பிக்கையற்று இருந்ததாக பிபிசி உருது சேவைக்கு அளித்த ஒரு பேட்டியில் அவரது தாயார் கூறியிருந்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













