ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

அண்மையில் நிகழ்ந்த சில முக்கிய உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்து வழங்குகிறோம்.

ஆளில்லா விமானத் தாக்குதல்:

ஒமர் காலித் கொராசனி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஒமர் காலித் கொராசனி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் பல வெடிகுண்டுத் தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாதக் குழுவின் தலைவர் ஒமர் காலித் கொராசனி கொல்லப்பட்டார்.

'மனம் உடைந்த டிரம்ப்'

ஜான் கெல்லி
படக்குறிப்பு, ஜான் கெல்லி

நைஜரில் கொல்லப்பட்ட அமெரிக்கப் ராணுவ வீரரின் மனைவியிடம் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியபோது அவரது உணர்வை உதாசீனம் செய்யும் விதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாக அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்ற) உறுப்பினர் பேசியதைக் கேட்டு டொனால்டு டிரம்ப் மனம் உடைந்து காணப்பட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஜெனரல் ஜான் கெல்லி தெரிவித்தார்.

கேட்டலோனியாவில் ஐஒ தலையீடு இல்லை

ஸ்பெயின் பிரதமர் (வலது) மரியானோ ரஜாய் மற்றும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மக்ரோன் (இடது)

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஸ்பெயின் பிரதமர் (வலது) மரியானோ ரஜாய் மற்றும் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மக்ரோன் (இடது)

கேட்டலோனியா தனி நாடு பிரகடனத்தால் ஸ்பெயினில் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியம் அதில் தலையிடவோ மத்தியஸ்தம் செய்யவோ வாய்ப்பு இல்லை என்று வெளிப்படையாக மறுத்துள்ளார் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க்.

தன்னாட்சிப் பிராந்தியமான கேட்டலோனியாமீது தமது நேரடி ஆட்சியை நடத்துவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதாக ஸ்பெயின் அறிவித்த சில மணி நேரங்களில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் ஜீன் கிளவுடி ஜக்னருடன் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது இக் கருத்தை வெளியிட்டார் டொனால்டு டஸ்க். ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சில் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவை ஸ்பெயின் மத்திய அரசை ஆதரித்துள்ள நிலையில், "சில பிரிவினை கோரிக்கைகளை ஆதரிப்பது மற்றதை ஆதரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்கும் மேற்கத்திய போலித்தனம் இந்த விவகாரத்தில் வெளிப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின்.

அமெரிக்காவிடம் தள்ளி இருங்கள், ஆஸியைக் கோரும் வடகொரியா

கிம் ஜோங்-உன்

பட மூலாதாரம், Korean Central News Agency

படக்குறிப்பு, கிம் ஜோங்-உன்

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்திடம் நட்பு பாராட்டாமல் சற்று தள்ளியே இருக்கும்படி ஆஸ்திரேலியாவுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு ஆவணத்தை வடகொரியா அனுப்பியுள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. பிற நாடுகளுக்கும் இப்படிப்பட்ட வேண்டுகோளை வடகொரியா அனுப்பியுள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

சீனாவில் வருகிறது புதிய அரசியல் கொள்கை

ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷி ஜின்பிங்

கம்யூனிஸ்ட் நாடான சீனா புதிய அரசியல் கொள்கை ஒன்றை அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் பெயரால் உருவாக்குகிறது. 14 அம்சங்கள் உள்ள இந்தக் கொள்கை அந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்படும் என்று அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.

தற்போது மாநாடு நடத்திவரும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கும் இந்தக் கொள்கையின் பெயர் "புது யுகத்துக்கான சீனப் பண்புகளுடன் கூடிய சோஷியலிசம் பற்றிய ஷி ஜின் பிங்கின் சிந்தனை" என்பதாகும். தற்போது நடைபெற்றுவரும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு அங்கீகரித்த பிறகே இந்தக் கொள்கை அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்படும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :