முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி; ஓராண்டுக்குப் பிறகு பொது நிகழ்வில் பங்கேற்பு

உடல்நலமின்றி கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே ஓய்வெடுத்துவந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள கட்சியின் நாளிதழான முரசொலி அலுவலகத்திற்கு வியாழக்கிழமை மாலையில் வருகை தந்தார்.
இன்று மாலை சுமார் 7 மணியளவில் முரசொலி அலுவலகத்திற்கு வந்த மு. கருணாநிதி, அங்கு அமைக்கப்பட்டுள்ள முரசொலி பவளவிழா கண்காட்சியைப் பார்வையிட்டார்.
கருணாநிதியுடன் மு.க. ஸ்டாலின், மு.க. தமிழரசு, கருணாநிதியின் மகள் செல்வி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, பொன்முடி, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், மருத்துவர்கள் ஆகியோர் வந்திருந்தனர். சுமார் 40 நிமிடங்கள் முரசொலி கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.
இந்தக் கண்காட்சியில் கருணாநிதியின் அறையில் அவரது மெழுகுச் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனையும் கருணாநிதி பார்த்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி முதலே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார்.

அதன் பிறகு கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று ஊட்டச் சத்துக் குறைபாட்டின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதி, 7ஆம் தேதியன்று வீடு திரும்பினார்.
ஆனால் மூச்சுத் திணறல் பிரச்சனைக்காக மீண்டும் டிசம்பர் 15ஆம் தேதியன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதிக்கு ட்ராக்யோஸ்டமி குழாய் பொருத்தப்பட்டது.
இதற்குப் பிறகு அவ்வப்போது தலைவர்கள், அவரை வந்து சந்திக்கும் படங்கள் வெளியிடப்பட்டுவந்த நிலையில், கடந்த ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் கருணாநிதி வெளியில் வந்துள்ளார்.
முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டு வைரலான கருணாநிதி
மு. கருணாநிதி திடீரென முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்தது அவருடைய தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சமூக வலைதளங்களில் இது தொடர்பாக தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் மிகுந்த கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்
தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துரையை கேட்கும் கருணாநிதி
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














