தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசு பலமடங்கு அதிகரிப்பு

பட மூலாதாரம், AFP
தீபாவளி தினத்தன்று வெடிக்கப்படும் பட்டாசின் காரணமாக, சென்னையில் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டு அளவு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தீபாவளி தினத்தன்று, காற்றில் மிதக்கும் துகள்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைவிட பெருமளவு அதிகரித்துள்ளதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2005ஆம் ஆண்டில் உச்ச நீதின்றம் அளித்த ஒரு உத்தரவின்படி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஒட்டி ஏற்படும் மாசின் அளவு குறித்த விவரங்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு வருகிறது.
தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்னதாக ஒரு நாளும் (12 அக்டோபர்) தீபாவளியன்றும் (18 அக்டோபர்) எடுக்கப்பட்ட அளவுகளை இன்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது.
சென்னையில் திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், சௌகார்பேட்டை, தியாகராய நகர் ஆகிய ஐந்து இடங்களில் காற்றின் தரமும் ஒலியின் அளவும் கண்காணிக்கப்பட்டது.
இந்த இடங்கள் அனைத்திலுமே, பட்டாசு வெடிப்பதால் வெளியிடப்படும் கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகியவை தீபாவளிக்கு முன்னதாகவும் தீபாவளியன்றும் அனுமதிக்கப்பட்ட அளவான 80 மைக்ரோகிராமிற்கு குறைவாகவே இருந்தன. ஆனால், 2016ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது சிறிய அளவில் அதிகரிப்பு இருந்தது.
ஆனால், காற்றில் மிதக்கும் நுண்துகளின் அளவு (PM10) கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கடுமையாக அதிகரித்திருந்தது. இந்த நுண்துகள்கள் ஒரு கன மீட்டருக்கு 100 மைக்ரோகிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.
2016ஆம் ஆண்டில் தியாகராய நகரில் 177 மைக்ரோகிராமாக இருந்தது, இந்த ஆண்டு 597 மைக்ரோகிராமாக அதிகரித்துள்ளது.
பெசன்ட் நகரில் 102 மைக்ரோகிராமாக இருந்த நுண்துகள்கள் 387 மைக்ரோகிராமாகவும் நுங்கம்பாக்கத்தில் 178லிருந்து 541ஆகவும் தியாகராயநகரில் 113 மைக்ரோகிராமிலிருந்து 529 மைக்ரோகிராமாகவும் அதிகரித்துள்ளன.

பட மூலாதாரம், AFP
சென்னையிலேயே அதிக அளவாக வடசென்னையில் உள்ள சவுகார்பேட்டையில், கடந்த ஆண்டில் 178 மைக்ரோகிராமாக இருந்த நுண்துகள்கள் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று 777 மைக்ரோகிராமாக அதிகரித்திருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சாதாரண நாளில் இப்பகுதியில் 70 மைக்ரோகிராம் அளவுக்கே நுண்துகள்கள் இருக்கும்.
ஒலி மாசுபாட்டின் அளவும் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று தியாகராய நகர் பகுதியில் 88 டெசிபலாக இருந்த சத்தம், இந்த ஆண்டு, 75 டெசிபலாக குறைந்திருந்தது. கடந்த ஆண்டு சென்னையிலேயே இங்குதான் அதிக சத்தம் இருந்தது.
இந்த ஆண்டு, சென்னையிலேயே அதிக அளவாக நுங்கம்பாக்கம் பகுதியில் 80 டெசிபல் அளவுக்கு சத்தம் காணப்பட்டது. ஆனால், சாதாரண நாட்களிலேயே இந்தப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவான 55-65 டெசிபலைவிட சத்தம் சற்று கூடுதலாகவே இருப்பது வழக்கம்.
இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று நிலவிய காலநிலையின் காரணமாகவே காற்றில் கலந்த நுண்துகள்கள், கலைய முடியாமல் ஒரே இடத்தில் நிலைகொண்டன என்றும் அதன் காரணமாகவே நுண்துகள்களின் அளவு அதிகமாகக் காணப்பட்டதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














