கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காத தீ! 10 பேர் பலி

கலிபோர்னியாவில் முழுமையாக எரியும் வீடு.

பட மூலாதாரம், AFP/GETTY

படக்குறிப்பு, இரவு மட்டும் 1500 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

கலிஃபோர்னியா மாகணாத்தின் திராட்சைத் தோட்ட பகுதிகள் கட்டுக்கடங்காத தீயினால் எரிந்து சாம்பலானது. அதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிக அளவிலான மக்களை வெளியேற்றும் பணி நடந்து வருவதோடு, இதில் 1500 கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் வரை முழுவதுமாக அழிந்துள்ளன. சோனோமா கவுண்டியில் மட்டும் 7 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாகாணத்தின் மிக மோசமான காட்டுத்தீ பரவியதை தொடர்ந்து, நாபா, சோனோமா மற்றும் யூபா பகுதிகளில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.

கலிஃபோர்னியா ஆளுநர், அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

அந்த பிரகடனத்தில், " இந்த தீ பல கட்டிடங்களை அழித்துள்ளதோடு, தொடர்ந்து ஆயிரக்கணக்கான இல்லங்களை அழிக்கும் அச்சுறுத்தலையும் அளிக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இங்கிருந்து கிளம்ப வேண்டிய தேவையை இது உருவாக்கியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

தீயணைப்பு வீரர்

பட மூலாதாரம், AFP/GETTY

ஒரு பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் எரிந்துள்ள நிலையில்,சோனோமாவில் இறந்தவர்களைத் தவிர, நாபாவில் இருவர் மற்றும் மெண்டொசினோ பகுதியில் ஒருவரும் இறந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சிலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

கலிஃபோர்னியாவின் வனத்துறை மற்றும் தீ பாதுகாப்புத்துறை தலைவர் கிம் பிம்லோட் கூறுகையில், இந்த தீயால் 1500 கட்டடங்கள் அழிந்துள்ளதாக தெரிவித்தார்.

ஞாயிறு இரவு, இந்த தீ எவ்வாறு துவங்கியது என்பது இன்னும் தெரியவில்லை.

மாகாணத்தின் பிற பகுதிகளில் இருந்தும் உதவிக்கான தளவாடங்கள் கொண்டு வந்துள்ள போதில், இங்குள்ள நிலைமை, தீயணைப்பு வீர்ர்களுக்கு தடையாகவே உள்ளது என்று நாபா கவுண்டியின் தீயணைப்புத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

திராட்சை தோட்டங்களில் பணிபுரியும் டஜன் கணக்கான தொழிலாளர்கள் இரவோடு இரவாக ஹெலிகாப்டர்கள் மூலம் காப்பற்றப்பட்டுள்ளனர்.

அதிக காற்று, குறைந்த ஈரப்பதம் மற்றும் வரண்ட வானிலையால், நெருப்பு வேகமாக பரவிவருகிறது.

தேசிய வானிலை சேவை விடுத்துள்ள எச்சரிக்கையில், கலிஃபோர்னியா பகுதிகளில் பரவும் எந்த தீயாக இருந்தாலும், அது வேகமாக பரவும் என குறிப்பிட்டுள்ளது.

எல்.ஏ டைம்ஸ் நாளிதழிடம் பேசியுள்ள திராட்சைத்தோட்டத்தின் உரிமையாளர் ஒருவர், ஞாயிறு இரவு, தானும் தனது குடும்பத்தினரும் தப்பித்த பிறகு, தனது தோட்டம் அழிந்துவிடும் என்று நினைத்ததாக தெரிவித்தார்.

"அங்கு காற்றே இல்லை. பின்பு வேகமாக காற்று அடிக்கும், மீண்டும் காற்று நின்றுவிடும். அதன் பின்னர் வேறு திசையில் இருந்து பலத்த காற்று அடிக்கும். தீ எங்களை சுற்றிவளைத்து இருந்தது என்கிறார் கென் மொஹொல்ட் -சிபெர்ட்.

நாபா பள்ளத்தாக்கில் தீ

பட மூலாதாரம், AFP/getty

தீயணைப்புத்துறை இணையதளத்தில், கலிஃபோர்னியாவில் பார்த்ததிலேயே மிகவும் மோசமான தீயென்றும், 14 தீ விபத்துக்களில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அழிந்துள்ளதாகவும் பதிவிடப்பட்டுள்ளது.

வரலாற்றிலேயே மிகப்பெரிய காட்டுத்தீயால், லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் கடந்த செப்டம்பர் மாதம் கடும் பாதிப்புக்கு உள்ளானது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :