மெக்சிகோவில் அடிக்கடி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், EPA
கடந்த செவ்வாய்கிழமையன்று 7.1 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று மெக்சிகோவின் மத்திய பகுதியை உலுக்கி எடுத்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ப்யூபிலாவிலிருந்து 55 கி.மீ தொலைவில் அக்சோசியாப்பனின் புறநகர் பகுதியில் 51 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.
1985 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் 32வது ஆண்டு நினைவு நாளில் நிகழ்ந்த இந்த அதிர்வு மெக்சிகோ தலைநகரில் வசிக்கும் சுமார் 20 மில்லியன் மக்களுக்கும் பீதியைத் தந்தது.
தென் கிழக்கு மெக்சிகோவில் குறைந்தது 100 பேர் பலிகொண்ட 8.2 அளவிலான நிலநடுக்கம் ஒன்று தாக்கி ஒருவாரத்துக்குள்ளாகவே இந்த நிலநடுக்கம் நிகழ்ந்தது.

பட மூலாதாரம், AFP
இத்தனை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் மெக்சிகோவில் ஏற்படக் காரணம் என்ன?
மெக்சிகோ அமைந்துள்ள இடத்தின் புவியியல் அமைப்பில் இதற்கான விடை உள்ளது.
நெருப்பு வளையம்
பசிஃபிக் ரிங் ஆஃப் ஃபையர் என்று அறியப்படும் குதிரை லாடம் போன்ற, நிலஅதிர்வுகள் நிரம்பிய பகுதியில் மெக்சிகோ அமைந்துள்ளது.
ஆசியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து, அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி வரையிலும் பசிஃபிக் ரிங் ஆஃப் ஃபையர் நீண்டுள்ளது.
''உலகில் நிகழும் சுமார் 90% நிலநடுக்கங்கள், அதிலும் 80 சதவீத சக்திவாய்ந்த நில நடுக்கங்கள் பசிஃபிக் ரிங் ஆஃப் ஃபையர் பகுதியில் நிகழ்கின்றன,'' என்கிறார் பிபிசி முண்டோவிடம் பேசிய பெருவின் புவி இயற்பியல் நிறுவனத்தை சேர்ந்த நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்யும் துறையின் இயக்குனர் ஹெர்னாண்டோ டவேரா.

பட மூலாதாரம், Reuters
மெக்சிகோவை தவிர்த்து ஜப்பான், ஈக்வடோர், சிலி, அமெரிக்கா, பெரு, பொலிவியா, கொலம்பியா, பனாமா, கோஸ்டா ரிகா, நிக்காராகுவா, எல் சால்வடோர், ஹோண்டுராஸ், குவாட்டமாலா மற்றும் கனடாவின் ஒரு பகுதி ஆகியன இந்த பசிஃபிக் ரிங் ஆஃப் ஃபையர் பகுதியில் அமைந்துள்ளன.
பசிஃபிக் பெருங்கடல் படுக்கை பல்வேறு புவிமேல் தகடுகளாலானது. "இந்தத் தகடுகள் இந்தப் பகுதியில் ஒன்று சேர்வதும், அதனால் ஏற்படுகிற உராய்வுமே ''ரிங் ஆஃப் ஃபையர் பகுதியில்
நில அதிர்வு மிகவும் தீவிரமாக இருப்பதற்குக் காரணம். இது தவிர உலகின் உயிருடன் உள்ள மற்றும் உயிரற்ற எரிமலைகளில் 75 சதவீதம் இந்தப் பகுதியில்தான் உள்ளன,'' என்கிறார் டவேரா.
சியாபஸ்
இருவாரங்களுக்குமுன், 8.2 அளவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் மையம் சியாபஸ் மாகாணத்தில் தென்-கிழக்கு டோனாலாவிலிருந்து 137 கி.மீ தூரத்தில் ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
நிலநடுக்கம் ஏற்பட மிக அதிகம் வாய்ப்புள்ள மாகாணங்களில் ஒன்று சியாபஸ் என்று மெக்சிகோவின் தேசிய நில அதிர்வு சர்வே நிறுவனம் கூறுகிறது.
''கோகோஸ் மற்றும் கரிபியன் ஆகிய இரு முக்கிய புவிமேல் தட்டுகள் இப்பகுதியில் சந்திப்பதே இந்தப் பகுதியின் தீவிர நிலநடுக்கத்தன்மைக்குக் காரணம்," என்கிறார் டவேரா.
மெக்ஸிகோ பூகம்பத்தில் இருநூறுக்கும் அதிகமானோர் பலி
பிற செய்திகள்
- இலவச சேலைகளை தீயிட்டுக் கொளுத்தி கொந்தளிக்கும் தெலங்கானா பெண்கள்
- நவராத்திரியின் போது சன்னி லியோனின் 'ஆணுறை' விளம்பரம் : குஜராத்தில் கொதிப்பு?
- பெரும் உயிர்த் தியாகத்துடன் டோக்ரை யுத்தத்தை வென்றது இந்தியா
- தெருவில் பெண் சிறுநீர் கழித்த பிரச்சனை, உரிமைப் போராட்டமாக வெடித்த சுவாரஸ்யம்!
- இணைய அழைப்புகள் மீதான தடையை நீக்குகிறது செளதி அரேபியா
- நுரையீரல் புற்றுநோய் நோயாளியின் வாழ்நாளை அதிகரிக்கும் மருந்துக்கு அனுமதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













