You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்கள் தலை முடிக்கு என்ன வர்ணம் பூசுவது பொருத்தமாக இருக்கும்?
- எழுதியவர், சாரா பக்லே & அமீலியா பட்டர்லி
- பதவி, பிபிசி செய்தி பிரிவு
உலகின் மிகப்பெரிய உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் பெண், தனது கூந்தலுக்கு பழுப்பு வண்ண சாயம் ஏற்றினார். அணிந்திருந்த உயர்ந்த குதிகால் கொண்ட காலணிகளையும், கண்ணில் அணிந்திருந்த காண்டெக்ட் லென்சையும் புறம்தள்ளி, வணிகத்தில் முன்னேறிய ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.
வெற்றிகரமான தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிவரும் எய்லீன் கேரே முப்பதுக்கும் சற்று கூடுதலான வயது கொண்டவர்.
கண்களில் கண்ணாடியும், அடர் பழுப்பு வண்ண கூந்தலுடன் காணப்படும் அவர் எப்போதும் இதே தோற்றத்தில் இருப்பதில்லை.
"மூலதன ஆலோசகரான ஒரு பெண்ணின் ஆலோசனையின்படியே முதல் முறையாக எனது முடிக்கு சாயம் பூசினேன்" என்று கூறுகிறார் எய்லீன் கேரே.
கேரே, தனது தோற்றத்தை இன்னும் வசதியாக கையாள்வதற்கு பொன்னிறத்தை விட அடர் பழுப்பு நிற கூந்தல் உகந்ததாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் கூறினார்கள்.
"நிதி திரட்டுவதில் இது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் என்னிடம் இந்த அறிவுரை கூறப்பட்டது. ஏனென்றால் அடர் பழுப்பு நிற கூந்தல் கொண்ட பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் வலுவானவர்களாக அங்கீகரிக்கப்படுவது இங்கு ஒரு முறைமையாக இருக்கிறது" என்று அவர் விளக்குகிறார்.
அங்கீகார முறைமை (Pattern recognition) என்பது மக்களுக்கு பழக்கமான அனுபவங்கள் அல்லது நன்கு அறியப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் பரிந்துரைக்கும் ஒரு கோட்பாடு. உணரப்பட்ட அபாயங்களை கருத்தில் கொண்டு, அவர்களை வசதியாக உணர வைக்கும் கோட்பாடு இது.
பொன்னிற கூந்தலைக் கொண்டிருந்தபோது, சர்ச்சைக்குரிய தெரோனெஸ் நிறுவனத்தின் எலிசெபத் ஹோம்ஸுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டதாக எய்லீன் கேரே கூறுகிறார்.
"பழுப்பு வண்ண கூந்தலை கொண்டிருப்பதால் நான் சற்று முதிர்ந்த தோற்றத்துடன் காட்சியளிப்பது எனக்கு வசதியாக இருக்கிறது, அதுதான் எனக்கு தேவையானதும்கூட. இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நான் உணர்ந்தேன்" என்று சொல்கிறார் கேரே.
பன்முகத்தன்மையுடன் மேம்படுத்தப்பட்ட கணினி மென்பொருட்களை பிற நிறுவனங்களுக்கு வழங்கும் 'கிளாஸ்ப்ரேக்கர்ஸ்' (Glassbreaker s) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் எய்லீன் கேரே. தனது நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணலின்போது, தங்களது பொன்நிற கூந்தலை அடர் பழுப்பு வண்ணமாக சாயமேற்றியிருந்த பல பெண்களை அவர் சந்தித்தார்.
"பொன்னிற கூந்தலால் அசெளகரியங்கள் ஏற்படுவது பற்றி நாங்கள் விவாதித்தோம்" என்கிறார் கேரே.
"மது அருந்தகத்திற்கு செல்லும்போது பொன்னிறமானவர்கள் தாக்கப்படுவது சகஜமாக இருக்கிறது. இது பொதுவான பிரச்சனை."
"இந்த தொழில்நுட்பத் துறையில் நான் வெற்றிகரமாக இயங்க வேண்டுமானால், பிறரின் கவனத்தை அதிகமாக ஈர்க்கக்கூடாது அதிலும் குறிப்பாக பாலியல் ரீதியாக எந்தவிதத்திலும் பிறரை ஈர்க்கக் கூடாது."
அவர் சொல்வது கூந்தலின் நிறத்தை பற்றி மட்டும் அல்ல. காண்டாக்ட் லென்சை பயன்படுத்தி கொண்டிருந்த கேரே, இப்போது வழக்கமான கண்ணாடிகளை பயன்படுத்துகிறார். ஆண் பெண் என்று அடையாளப்படுத்த முடியாத வகையிலான (androgynous) ஆடைகளையும், தளர்வான ஆடைகளையும் உடுத்துகிறார்.
ஆண்களின் மேலாதிக்கம் கொண்ட பணிச்சூழலில், சற்று வயதான தோற்றமளிக்க முயற்சிப்பது தனக்கு வசதியாக இருப்பதாக கேரே கருதுகிறார்.
100 பெண்கள் தொடரின் நோக்கம் என்ன?
உலகெங்கிலும் உள்ள செல்வாக்கான மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடிய பெண்களை பற்றிய தொடர் பிபிசி 100 பெண்கள். 2017ஆம் ஆண்டில், இன்றைய பெண்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளான கண்ணுக்கு தெரியாத தடைகள், பெண்களுக்கு கல்வியின்மை, பொது இடங்களில் துன்புறுத்தல், விளையாட்டுத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றை சமாளிக்க 100 பெண்களுக்கு சவால் விடுகிறோம்.
உங்கள் உதவியுடன், இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளுடன் அவர்கள் வெற்றிபெறுவார்கள், உங்கள் கருத்துகளுடன் நீங்களும் இதில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறோம். பேஸ்புக், இன்ஸ்ட்ராகாம் மற்றும் டிவிட்டரில் எங்களை தொடரலாம். # 100 Women (#100 பெண்கள்) என்ற டேகை பயன்படுத்துங்கள்.
"வணிகத்தில் ஒரு தலைவராக பார்க்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன், பாலியல் பொருளாக அல்ல. இந்தத் துறையில் இதை நான் அடிக்கடி சந்திக்க, கடக்க வேண்டியிருக்கிறது" என்று அவர் விளக்குகிறார்.
இருந்தபோதிலும், வேலை அல்லது பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மிகவும் பொதுவானதாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார் அவர்.
"எங்கள் தொழிலில், இந்த காலத்தில் பாலியல் துன்புறுத்தல் என்ற பிரச்சனை இருக்கிறது," என்று அவர் விளக்குகிறார்.
மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுக்கான ஒரு சமீபத்திய நிகழ்வில், தேவதைகள் போல் அலங்கரிக்கப்பட்ட பெண் மாடல்கள் மது வகைகளை பரிமாறினார்கள்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒருசில பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளில் தானும் ஒருவராக இருந்ததை குறிப்பிடும் கேரே, அந்த சூழ்நிலை பொருத்தமற்றதாகவும், நேர்மையற்றதாகவும் தோன்றியது என்கிறார்.
ஆண்மையையும் பெண்மையையும், பாலின சிக்கல்களையும் பொதுவாக அணுகும் முறையில் தனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தனது தாயார் எய்லீன் சீனியர் என்று கூறுகிறார் எய்லீன் கேரே.
கேரேயின் தாயும் அத்தையும் 1980களிலேயே பெண்ணியவாத சிந்தனைகளை கொண்டவர்கள்.
"ஓட்ட வெட்டிய முடியுடன் இருக்கும் என் அம்மா ஒப்பனை செய்யமாட்டார், உயர் குதிகால் கொண்ட காலணிகளையோ, ஈர்க்கக்கூடிய ஆடைகளையே அணிய மாட்டார்" என்று சொல்கிறார் கேரே.
கடந்த காலத்தில் தலைமுடி வெட்டப்பட்டு, நகங்களை அழகுபடுத்தியிருந்தார் கேரே.
"இப்போதுதான் என் அம்மாவுக்கு ஏற்ற பெண்ணாக இருக்கிறேன், ஒப்பனை செய்துகொள்ள விரும்பவில்லை, அதிக உயரமான குதிகால் உள்ள காலணிகளை அணிய விரும்பவில்லை, வேலையில் இருக்கும்போது வசதியாக உணர்கிறேன்" என்று சொல்கிறார் எய்லீன் கேரே.
கலாசாரம் மற்றும் பாரம்பரிய பின்னணியை கொண்ட குடும்பங்களில் வளர்க்கப்பட்ட பெண்களுக்கு உள்ள அழுத்தம் தனக்கு இருப்பதாக கேரே உணரவில்லை. "மிக இளம் வயதில் வழக்கமான பாலின நடத்தைகளை பின்பற்ற வேண்டும் என்ற அழுத்தம் இல்லாதது அதிர்ஷ்டம் என்றே சொல்வேன்."
தொழில்நுட்ப துறையில் பாலியல் மற்றும் பாலினம் பற்றிய புதிய செய்திகளே அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றன, அது ஊபெராக இருந்தாலும் சரி, கூகுளாக இருந்தாலும் சரி. எங்கு வேலை செய்வது என்ற தெரிவு பணியாளர்களிடம்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் எய்லீன் கேரே.
ஒரு நிறுவனத்திற்குள் தனியாக ஒரு கலாசாரத்தை மாற்ற முயற்சிப்பது கடினம் என்று கூறும் கேரே, மேலும் அங்கே பணிபுரிபவர்கள் காயமடைவதாக உணர வழிவகுக்கும் என்று சொல்கிறார். இது, "ஒரு மில்லியன் காகிதத்துண்டுகள், நுண்ணிய ஆக்கிரமிப்புகள், சிறிய விஷயங்கள்" நோக்கிச் செல்லும் என்றும் கூறுகிறார்.
நீங்கள் ஒரு நிறுவனத்தை மாற்ற விரும்பினால், "அது உலகில் நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக இருக்கட்டும், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை. பாரபட்சம் காட்டுவதற்கான வழக்குக்காக தியாகம் செய்யலாம். துரதிருஷ்டவசமாக, நீங்கள் தொழில்களை மாற்ற வேண்டியிருக்கும்."
இல்லையெனில், "எங்கே வெற்றியடைய முடியுமோ அங்கே செல்லுங்கள்."
- சிலிக்கன் பள்ளத்தக்கில் 2016இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, தொழில்நுட்ப துறையில் 60 சதவிகித பெண்கள் ஏதாவது ஒருவிதத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
- அதே ஆண்டில் பணியிடங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 91,503 வழக்குகளில் 30% பாலியல் தாக்குதல் தொடர்பானவை.
- 2013 இன் ஒரு கணக்கெடுப்பின்படி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் 75 சதவிகிதத்தினர் இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை என்பதால் உண்மையான பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.
அனைவருடன் இணைந்து செல்லாத, பெண்களின் தலைமைத்துவத்திற்கு இடமளிக்காத, பெண்களுக்கு சிக்கலான சூழலை உருவாக்கும் நிறுவனங்கள் நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்று சொல்கிறார் எய்லீன் கேரே.
"நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள், தலைமைப் பண்பை கவனியுங்கள், அங்கு வேலை செய்யும் பெண்களிடம் பேசுங்கள், உங்கள் திறனை பயன்படுத்த அவர்களால் முடியாது என்று நினைத்தால், அங்கே வேலை செய்யாதீர்கள்" என்று கேரே அறிவுரை கூறுகிறார்.
100 பெண்கள் தொடர்: ஹாங்காங் போராளி
பிற செய்திகள்
- போர் விமானம் வெடித்து பாகிஸ்தானில் விழுந்த இந்திய விமானப்படை அதிகாரி
- ரோஹிஞ்சா பிரச்சனை : 'சர்வதேச கண்காணிப்பு குறித்து அச்சமில்லை' - ஆங் சான் சூச்சி
- பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஆஃப்கன் பெண்களின் புகைப்படங்கள்
- திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?
- குழந்தையும் வேண்டாம், 100 கோடி சொத்தும் வேண்டாம்!
- இலங்கை : டெங்குவால் உயிரிழந்தோரில் 68% பேர் பெண்கள்
- அமேசான் அற்புதங்களை கொண்ட பிரேசிலின் பிரம்மாண்டம்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்