You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமேசான் அற்புதங்களை கொண்ட பிரேசிலின் பிரம்மாண்டம்!
பிரேசில்,பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இருந்தாலும், வளமையான நீர் ஆதாரங்களையும், செழுமையான பல்லுயிர் பெருக்கத்தை கொண்ட நாடுகளில் முதலாவதாக திகழ்கிறது.
மழைக்காடுகளை இயற்கையின் கொடையாக பெற்றுள்ள பிரேசில், உலகில் உள்ள மழைக்காடுகளில் மூன்றில் ஒரு பகுதியை தன்னகத்தே கொண்டது. பல்வேறு வகையான வெவ்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை பிரேசிலில் நிலவுகிறது.
பூமியில் வசிக்கும் உயிரினங்களில் 30 சதவிகிதம் அமேசான் மழைக்காடுகளில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெவ்வேறு விதமான 40 ஆயிரம் தாவர இனங்கள், 430 வகை பாலூட்டிகள், இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான பூச்சி வகைகளை உள்ளடக்கிய அமேசான் மழைக்காடுகளில் ஆண்டுதோறும் புதிய வகை உயிரினங்கள் கண்டறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு, உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளை கொண்ட பிரேசிலில் காணப்படுகிறது. இந்த தனித்துவமான வாழ்விடத்தில் அனைத்துவிதமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை ஒன்றிணைக்கின்ற ஒற்றை விஷயம் இங்கு பெய்யும் மழையே.
பூமியின் கீழ்ப்பகுதியில் இருப்பதால் அமேசான் பகுதியில் அதீத மழைப் பொழிவு காணப்படுகிறது. பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் காடுகளில் இருந்து வெளிவரும் வெப்பம், அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் ஈரப்பதத்தை ஆவியாக்குகிறது.
பிறகு அது கிழக்கு வணிகக்காற்றால் கொண்டு செல்லப்படுகிறது. ஆவியாகும் நீர் மேலே சென்று, சுருங்கி நிலையான மழை மேகங்களாக உருமாறுகிறது, மழை மேகங்கள் கனமழையை பொழிகின்றன. இது மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் தொடர்வதால் அமேசானில் மழைவளம் அதிகமாக இருக்கிறது.
மழைக்காடுகளின் வழியாக சுமார் 400 மைல்கள் பயணித்து கடலில் கலக்கும் அமேசான் ஆறு உலகின் இரண்டாவது நீளமான நதியாகும். கொண்டு வரும் நீரின் அளவின் அடிப்படையில் பார்த்தால், அமேசானே உலகின் மிகப்பெரிய ஆறாகும். இளஞ்சிவப்பு டால்பின்கள், போடோ, சிவப்பு வண்ண பிரானாக்கள் போன்ற தனிப்பட்ட இனங்கள் அமேசானில் வாழ்கின்றன. இந்தப் பகுதியின் நீர் சுழற்சியில் அமேசான் நதி முக்கிய பங்காற்றுகிறது. வனத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமான நீரை, காட்டில் இருந்து கடலுக்கு கொண்டு செல்கிறது அமேசான்.
அமேசான் படுகையின் தெற்கில் இருந்து பயணித்தால், உலகின் மிகப்பெரிய, நன்னீர் ஈரநில அமைப்புகளில் ஒன்றான வாஸ்ட் பந்த்தானல் (vast Pantanal)ஐ பார்க்கலாம். பராகுவே நதி மற்றும் அதன் துணையாறுகளால் உருவாக்கப்பட்டிருக்கும் சதுப்பு நிலங்கள் மற்றும் ஏரிகளால் பிலானாட்லோ (Planalto) மலைப்பகுதிகள் பிரிந்துள்ளன.
இந்த சமவெளி பிரதேசத்தில் நிலவும் தட்பவெட்பநிலை, வழக்கமான வெள்ளம் மற்றும் வறட்சி அமைப்பானது, ஹெலிகாப்டர் டேம்செல்ஃபீஸ் (helicopter damselflies) போன்ற பூச்சியினங்கள், நதி நீர்நாய்கள் (giant river otters), ஜாகுவார்கள், செந்நீல ஐவண்ணக்கிளி (Hyacinth Macaws) போன்ற அற்புதமான, தனித்துவமான உயிரின்ங்களுக்கு வாழ்விடமாக இருக்கிறது.
மேலும் தெற்காக பயணித்தால், அர்ஜெண்டினா எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் ஆனந்த அதிர்ச்சியூட்டும் இகுவாசு நீர்வீழ்ச்சியை (Iguazu Falls) காணலாம்.
குதிரை வடிவத்தில் அமைந்துள்ள இகுவாசு நீர்வீழ்ச்சி, 275 தனிப்பட்ட அருவிகளை உள்ளடக்கியது. பெரிய ஆண்டீடெர்ஸ் (Giant anteaters), தும்பிக்கை பன்றி அல்லது தும்பிப்பன்றி (tapir), ஹாவ்லர் இன பபூன் குரங்குகள் (howler monkeys) போன்ற விலங்குகளும், இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தெறிக்கும் நீரால் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொள்ளும் இந்த துணை வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்கின்றன.
உலகின் மிகப்பெரிய நாடுகள் பட்டியலில் பிரேசில் ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், ஈரப்பதம் மற்றும் காடுகளைக் கொண்ட பரப்பளவு அதிகம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்