You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா: ஐ.எஸ் படை மீது அமெரிக்கக் கூட்டணி விமானத் தாக்குதல்
சிரியா- இராக் எல்லையில் உள்ள பாலைவனப் பகுதியில் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் ஆயுதக் குழுவினர் வந்த சுமார் 20 வாகனங்கள் மீது, விமானத்தில் இருந்து குண்டு வீசித் தாக்கியதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினர் கூறியுள்ளனர்.
சிரியா-லெபனான் எல்லைப்பகுதியில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சிறு பகுதியை அவர்கள் இழந்த பிறகு, அங்கிருந்த நூற்றுக்கணக்கான ஐ.எஸ் படையினர் தங்கள் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறி கிழக்கு நோக்கிச் செல்ல ஹிஸ்புல்லா அமைப்புடனும், சிரிய அரசுடனும் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
இராக் எல்லையை ஒட்டி அவர்கள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு செல்வதில் இருந்து தொடர்ந்து தடுக்கப்படுவார்கள் என்று அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படைகள் தெரிவித்துள்ளன.
தங்கள் குடும்பங்களுடன் கிழக்கு நோக்கி நகரப்போவதாக ஹெஸ்புல்லா அமைப்பு மற்றும் சிரிய அரசிடம் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆனால், தாங்களுக்கோ, இராக்குக்கோ இந்த உடன்படிக்கையில் பங்கு இல்லை என்பதால் சிரியா-இராக் எல்லையில் உள்ள ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு அவர்கள் செல்வதைத் தடுக்கப் போவதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்தது. அவர்களது பேருந்துகள் பயணிக்கும் சாலையில் குண்டு வீசித் தாக்கியது.
இதனால், பல நாள்களாக அப்பேருந்துகள் சிரியாவின் எல்லையில் உள்ள பாலைவனத்தில் ஹுமாய்மா, அல்-சுக்னா நகரங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டன.
இப்பேருந்துகளுக்கு உதவி செய்வதற்காகச் சென்ற ஐ.எஸ். படையினர் மீதுதான் தாம் தாக்குதல் தொடுத்ததாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
இடம் பெயரும் முயற்சியில் உள்ள ஐ.எஸ் குழுவில் இருக்கும் சுமார் 300 பேரையும், "அனுபவம்வாய்ந்த போராளிகள்" என்று அமெரிக்கக் கூட்டணி தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இராக்கிய எல்லையை நோக்கி மேற்கொண்டு அவர்கள் கிழக்கு நோக்கி நகர்வதை அனுமதிக்க மாட்டோம் என்றும், தீவிரவாதிகளை ஒரு இடத்தில இருந்து வேறொரு இடத்துக்கு மாற ஒப்பந்தம் செய்வது நிரந்தரத் தீர்வைத் தராது என்றும் அந்தக் கூட்டணி கூறியுள்ளது.
குழந்தைகளும், பெண்களும் அவர்களுடன் இருப்பதால் இடம் பெயர்வோர் மீது குண்டுகள் ஏதும் வீசப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு சிக்கிக்கொண்டுள்ளவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கியுள்ளதாகக் கூறிய அமெரிக்கக் கூட்டணி, அங்கு இருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களை மட்டும் மீட்பதற்கான ஆலோசனைகளை ரஷ்யா மூலமாக சிறிய அரசுக்கு வழங்கியுள்ளது.
ஆயுதங்கள் உள்ள வாகனங்கள் மற்றும் அவர்கள் இடம் பெயர உதவி செய்யும் பிற வாகனங்கள் அமெரிக்கா தலைமையிலான படைகளின் வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
கடந்த வாரம் லெபனான், சிரியா மற்றும் ஹிஸ்புல்லா படையினர் ஐ.எஸ். படையினருடன் கடந்த வாரம் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டனர். இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த 2014-ஆம் ஆண்டு சிறைபிடிக்கப்பட்ட லெபனான் ராணுவ வீரர்களின் உடல்களை மட்டும் மீட்க விரும்புவதாகவும், மேலும் உயிர்களை இழக்க விரும்பவில்லை என்றும் அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் ஜோசஃப் அவோன் கூறினார்.
இராக்கிய பிரதமர் ஹைதர் அல்-அபாடி இதை விமரசித்தார். "எங்கள் நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளுடன் நாங்கள் போரிடுகிறோம். அவர்களை சிரியாவுக்கு அனுப்புவதில்லை என்று கூறியுள்ளார்."
இதனிடையே, அந்தக் கூட்டணிக்கான அமெரிக்கத் தூதர் பிரெட் மெக்கர்க், "ஐ.எஸ் தீவிரவாதிகள் போர்க்களத்தில் கொல்லப்படவேண்டும். இராக்கின் அனுமதி இல்லாமல் சிரியாவில் இருந்து இராக்குக்குள் அனுப்பி வைக்கக் கூடாது," என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :