You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐ.எஸ் தீவிரவாதிகளை விரட்டும் இறுதி முயற்சியில் இராக்கில் தாக்குதல் முன்னெடுப்பு
இராக்கில் ஐ.எஸ் பிடியில் இருக்கும் கடைசி நகரங்களில் ஒன்றான டல் அஃபாரை மீண்டும் கைப்பற்றுவதற்கான தரைப்படை நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
அரசு படைகளின் தாக்குதல் முன்னெடுப்பு குறித்த தொலைக்காட்சி உரை ஒன்றில் இதனை அறிவித்த பிரதமர் ஹைதர் அல் அபாடி, ஜிஹாதிகள் சரணடைய வேண்டும் அல்லது பலியாக வேண்டும் என்ற இரண்டில் ஒன்றுதான் தீர்வு என்று கூறினார்.
கடந்த ஜூலையில், மொசூல் நகரை கைப்பற்றியதையடுத்து, ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக கருதப்படும் டல் அஃபாரை ராணுவம் அடுத்த இலக்காக குறிவைத்தது. கிழக்கிலிருந்து சுமார் 55 கி.மீ., தொலைவில் ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக மொசூல் விளங்கி வந்தது.
ஷியா முஸ்லிம்களை பெரும்பான்மை கொண்ட டல் அஃபார் நகரம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் பிடியில் வீழ்ந்தது.
மொசூல் மற்றும் சிரியா எல்லைக்கு இடையேயான முக்கிய சாலையில் அமைந்திருக்கும் டல் அஃபார் நகரம், ஒருகாலத்தில் ஜிஹாதி குழுக்களுக்கு முக்கிய விநியோக பாதையாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
டல் அஃபார் நகரில் ராணுவம் தரை தாக்குதல் நடவடிக்கைகளுக்கு தயாராவதற்குமுன், பல தினங்களாக நகரிலிருந்த ஐ.எஸ் நிலைகள் மீது இராக் போர் விமானங்கள் குண்டு வீசின.
இன்றைய தினம் (ஞாயிற்றுகிழமை) கறுப்பு ராணுவ உடையணிந்து கொண்டு இராக் தேசிய கொடி மற்றும் அந்நாட்டின் வரைபடத்திற்கு முன்னால் நின்றபடி, டல் அஃபார் நகரத்தை விடுவிக்கும் ராணுவ நடவடிக்கை குறித்த அறிவிப்பை பிரதமர் அபாடி வெளியிட்டார்.
''ஐ.எஸ் அமைப்பினர் ஒன்று சரணடைய வேண்டும் அல்லது மரணிக்க வேண்டும். இதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை,'' என்றார் அவர்.
''ஒட்டுமொத்த உலகமும் உங்களுடன் இருக்கிறது'' என்று இராக்கிய படைகளுக்கான உரையுடன் தனது பேச்சை நிறைவு செய்தார் அபாடி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :