மொசூல் போர் : ஐஎஸ் அமைப்பின் இறுதி நிலைகளை அழிக்கும் இராக் படைகள்

மொசூல் நகரில் முற்றுகையிட்டு எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதிகளின் இறுதி எதிர்ப்பு நிலைகளை இராக்கிய படைகள் அழித்துக் கொண்டிருக்கின்றன.

விடுதலை பெற்று கொடுத்தமைக்காக இராக்கிய படையினருக்கு தனது பாராட்டுகளை தெரிவிக்க கடந்த ஞாயிறு அன்று மொசூல் நகருக்கு இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாடி சென்றிருந்தார், ஆனால் வெற்றிக்கான அறிவிப்பை வெளியிடுவதை அவர் நிறுத்தியிருந்தார்.

180 மீட்டர் (590 அடி) நீளம் மற்றும் 45 மீட்டர் அகலம் கொண்ட பரப்பினை ஐஎஸ் அமைப்பினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக மொசூல் நகரைக் கைப்பற்றுவதற்கான போர் நடைபெற்றுள்ளது. இந்த போரினால், பல்வேறு இடங்கள் அழிந்துள்ளன, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் சுமார் ஒன்பது லட்சத்துக்கு மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர்.

வான்வழித் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதலுக்கான ஆதரவினை இராக்கிய படைகளுக்கு அளித்த அமெரிக்க தலைமையிலான கூட்டணி படைகளின் தளபதிகள் இது குறித்து குறிப்பிடும் போது, இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து, நகர்ப்புறங்களில் நடந்த போர்களில், மொசூல் நகருக்கான இப்போர் மிகத்தீவிரமான ஒன்றாக இருந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பிரதமர் அபாடி, வெற்றி குறித்தான முறையான அறிவிப்பு எதையும் ஞாயிறன்று வெளியிடவில்லை என்றாலும் , அதற்கான நேரம் நெருங்கி வருகிறது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

ஐ.எஸ் அமைப்பை, அதன் அரபியப் பெயரான, டேயிஷ்,என்பதன் சுருக்கத்தைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட அவர், ` டேயிஷின் எச்சங்கள் சில அங்குலங்களை முற்றுகையிடப்பட்டுள்ளனர் ` என்றும் , டேயிஷின் கதையை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டுவர துணிச்சலுடன் செயல்பட்ட படையினருக்கு பாராட்டுகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.

`ஒன்று அல்லது இரண்டு பகுதிகளை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐஎஸ் அமைப்பினருக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன : சரணடைவது அல்லது கொல்லப்படுவது` என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில டஜன் ஐஎஸ் அமைப்பினர் மட்டும் டைக்ரிஸ் ஆற்றின் மேற்குக் கரையோரம் உள்ள பழைய நகரில் எதிர்த்து நின்று போரிட்டுக் கொண்டிருப்பதாக இராக்கிய இராணுவ அதிகாரிகள் திங்களன்று காலையில் கணக்கிட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் குடும்பங்கள் என்று நம்பப்பட்ட, அதே நேரத்தில் மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட பொதுமக்கள் பலர் மட்டுமே அங்கு எஞ்சியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மொசூலில் இருக்கும் பிபிசி செய்தியாளர், இது குறித்து கூறுகையில், பசியாலும் நீர் பற்றாக்குறையாலும் பலவீனமடைந்துள்ள மக்கள் கூட்டம் பழைய நகரில் இருந்து வெளியேறிக் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மலைபோல் குவிந்திருக்கும் இடிபாடுகளில் இருந்து பல சடலங்களை மீட்பு மற்றும் தேடுதல் குழு தோண்டி எடுத்துக் கொண்டேயிருப்பதாகவும் நமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

வான்வழித் தாக்குதல் மற்றும் தரைவழித் தாக்குதலின் மூலம் மக்கள் அதிகமாக வசிக்கும் பழைய நகரில் மட்டும் 5000 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 490 கட்டிடங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

`மொசூல் நகரில் இராணுவ செயல்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளது என்பதை அறியும் போது ஆறுதலாக இருக்கிறது. மோதல்கள் முடிவுக்கு வந்திருக்கலாம் ஆனால் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி முடிவுக்கு வரவில்லை` என்று ஐக்கிய நாடுகள் சபையின் இராக் ஒருங்கிணைப்பாளர் லிசி கிராண்ட் தெரிவித்துள்ளார்.

`போரில் இருந்து தப்பியோடிய பலர் அனைத்தையும் இழந்துவிட்டனர். அவர்களுக்கு இருப்பிடம், உணவு, உடல்நல பராமரிப்பு, தண்ணீர், துப்புரவு மற்றும் அவசரகால பொருட்கள் அல்லது அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுகின்றன. இதுவரை எங்கும் காணாத அதிர்ச்சியினை இங்கு நாங்கள் பார்த்து வருகிறோம். மக்கள் இங்கு அனுபவித்து வருவது கற்பனை செய்ய இயலாத அளவிற்கு உள்ளது` என்றார் அவர்.

வடக்கு மற்றும் மேற்கில் உள்ள பல்வேறு இடங்களை கைப்பற்றுவதற்கு முன்னரே, 2014 ஜூன் மாதத்தில் மொசூல் நகரை ஐஎஸ் அமைப்பினர் கைப்பற்றினர். அதற்கடுத்த மாதத்தில், பெரிய மசூதியான அல்-நூரி அமைந்துள்ள நகரில் ஐஎஸ் அமைப்பின் தலைவராக முதன்முறையாக பொதுவெளியில் தன்னை முன்னிறுத்திய அபு பக்கர் அல்-பகாடி கலிபா உருவாக்கத்திற்கான பிரகடன உரையை ஆற்றினார்.

மோசூல் நகரை கைப்பற்றும் நிலையில் இராக்கியப் படைகள்

பிற செய்திகள்

மோசூல்: மனிதக் கேடயங்களாகப் பொதுமக்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :