You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மொசூலுக்கான மோதல்: ஐ.எஸ் குழுவின் எதிர் தாக்குதலை தடுக்கும் இராக் படைகள்
மொசூலின் பழைய நகரின் ஒரு மூலைக்குள் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் படையினரை, முடக்க இராக்கிய படையினர் முயல்கையில், அக்குழுவினர் தொடுத்த எதிர்தாக்குதல்களை படையினர் முறியடித்துள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதக் குழுவினர் நகரின் வடக்குப் பகுதியில் பல்வேறு இடங்களில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்தாரிகளை நிலைநிறுத்தியிருந்தது; ஆனால் அந்த பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக இராக் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மொசூலில் இருந்து ஐ.எஸ் குழுவினரை வெளியேற்றும் இராக் படைகளின் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஃபரூக் மாவட்டத்தை தான் கைப்பற்றியுள்ளதாக இராக்கிய ராணுவம் அறிவித்துள்ளது.
மொசூலை மீட்கும் நடவடிக்கைகளை இராக் அரசு 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.
மொசூலின் கிழக்குப் பகுதியை விடுவித்துவிட்டதாக இந்த ஆண்டு ஜனவரியில் இராக் அரசு அறிவித்தது. ஆனால் குறுகிய தெருக்களைக் கொண்ட நகரின் மேற்குப்பகுதியை மீட்பது மேலும் கடினமானதாக இருக்கிறது.
இருந்தபோதிலும், தற்போது 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பிற்குள் ஐ.எஸ் குழுவினர் ஒடுக்கப்பட்டுவிட்டார்கள்.
இராக் படைகள் தங்கள் இலக்கிற்கு வெறும் 600 மீட்டர் தொலைவில் இருப்பதாக காவல்துறை தலைமை அதிகாரி லெப்டினெண்ட் ஜென்ரல் ரயாத் ஜாவத் கூறுகிறார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில், ஐ.எஸ் குழுவினர் குறைந்தது இரண்டு எதிர் தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொசூலின் மேற்குப் பகுதியில் இருக்கும் அல்-தனக், ரஜ்ம் ஹதித் மற்றும் அல்-யர்மெளக் மாவட்டங்களில் மூன்று தாக்குதல்கள் நடைபெற்றதாக பாக்தாதை சேர்ந்த குர்திஷ் ஷாஃபக் செய்தி முகமை தெரிவித்திருக்கிறது.
அங்குள்ளவர்களின் குடியிருப்புகளுக்கு தீவைக்கப்பட்டதாகவும் செய்தி நிறுவனம் கூறுகிறது.
பழைய நகருக்குள் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அங்கு மறைந்திருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் எண்ணிக்கை பல நூறு பேர்கள் என இருக்கலாம் என்று இராக் ராணுவமும், ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
ஒரு வாரத்திற்கு முன், அல்-நூரி மசூதி மற்றும் அதன் சாய்வு கோபுரம் அழிக்கப்பட்ட பிறகு, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டை தீவிரமடைந்துள்ளது.
கிட்டத்தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த அல்-நூரி மசூதி தகர்க்கப்பட்டது, "ஐ.எஸ் அமைப்பின் தோல்விக்கான அதிகாரபூர்வ பிரகடனம்" என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி தெரிவித்தார்.
இந்த மசூதியில் இருந்துதான், ஜூலை 2014இல், ஐ.எஸ் தலைவர் அபு பக்ர் அல்-பக்தாதி பொதுவெளியில் நிகழ்த்திய ஒரே ஒரு உரையில், தனது `கலிஃபேட்``டுக்கு (இஸ்லாமிய அரசு) அனைவரது விசுவாசத்தையும் கோரினார்.
இராக்கில் ஐ.எஸ் தீவிரவாதக் குழுவின் பிடியில் இருக்கும் பகுதிகளில் மிகப்பெரியதும், கடைசி கோட்டையுமான மொசூலை மீட்கும் நடவடிக்கை 2016, அக்டோபர் 17 ஆம் நாளன்று தொடங்கியது.
ஆயிரக்கணக்கான இராக் பாதுகாப்புப் படையினர், குர்திஷ் பெஷ்மெர்கா வீர்ர்கள், சுன்னி அரபு பழங்குடியினர், ஷியா போராளிகள், அமெரிக்க தலைமையிலான கூட்டணிப்படைகளின் விமானப் படைகள், ராணுவ ஆலோசகர்கள் என பல தரப்பினரும் இணைந்து மொசூல் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மொசூலில் ஐ எஸ் பயங்கர பதில் தாக்குதல்
மோசூல் நகரை கைப்பற்றும் நிலையில் இராக்கியப் படைகள்
தொடர்படைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்