"தனிப் பெண்ணா? அறை கிடையாது": ஹோட்டல்

    • எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
    • பதவி, பிபிசி தமிழ்

ஹைதரபாதில் தனியாகப் பயணம் செய்த ஒரு பெண்ணுக்கு, அவர் ரிசர்வ் செய்திருந்த ஹோட்டல் அறையை, தங்கள் நிறுவனம் தனியாக வரும் பெண்களுக்கு அறை தருவதில்லை என்ற கொள்கையால், ஹோட்டல் நிர்வாகம் தர மறுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நூபுர் சரஸ்வட் என்ற அந்தப் பெண் சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு மேடைக் கலைஞர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, அவர் ஹைதரபாத் சென்றிருந்தார். அப்போது அவர் ஏற்கனவே இணைய தளம் வழியாக முன் பதிவு செய்திருந்த ஹோட்டல் அறையை அவருக்குத் தர அந்த ஹோட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது.

அவர் தனியாகப் பயணம் செய்யும் பெண் என்பதால் அறை அவருக்கு தரமுடியாது என்று நிர்வாகம் கூறிவிட்டதாம்.

தொடர்புடைய செய்தி:

இது குறித்து `ஃபேஸ்புக்கில் அவர் உடனடியாக ஒரு பதிவு செய்தார்.

அந்த பதிவில், இணைய வழியாக Goibibo வின் மூலம் அறையை பதிவு செய்தததை சரி பார்த்த பின்பும், தான் "தனியாக பயணிக்கும் பெண்" என்பதால் தனக்கு அறை தர மறுத்ததாகவும், இப்போது தனது பைகளுடன் விடுதிக்கு வெளியே நிற்பதாகவும் தெரிவித்தார்.

அவரின் அந்த பதிவு ஆயிரத்திற்கும் மேலானோரால் பகிரப்பட்டுள்ளது. மேலும் பலர் தங்கள் கருத்துகளையும் அதில் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து பிபிசிதமிழிடம் பேசிய நுபூர் சரஸ்வட், தனது முகநூல் பதிவை பார்த்த பலர் தனக்கு உதவ முன் வந்ததாக தெரிவித்தார்.

தங்கும் அறையை 'Goibibo' வின் மூலம் புக் செய்துள்ள நுபூர் அதனை தொடர்பு கொண்டு, "தனக்கு பரிச்சயம் இல்லாத ஒரு நகரில் தான் தெருவில் நின்று கொண்டிருப்பதாக" தெரிவித்துள்ளார். பின்பு அவர்கள் பணத்தை திரும்ப தந்து விட்டார்கள் என்றும் தான் தனது தோழி ஒருவரின் வீட்டில் தங்கியதாகவும் தெரிவிக்கிறார் நுபூர்.

நுபூரின் முகநூல் பதிவை பார்த்த மக்கள், 'Goibibo' மீது கடும் விமர்சனங்களை வைத்த பின், அவர்கள் நுபூரை தொடர்பு கொண்டு மாற்று அறை வழங்கியுள்ளனர்.

பொதுவாக தனது பணி காரணமாக உலகம் முழுவதும் பயணம் செய்யும் நுபூர், தான் பெண் என்பதால் அறை கிடைக்காமல் நின்றது இதுதான் முதல்முறை என கூறுகிறார்.

எழுத்தாளர், கவிஞர், மேடை கலைஞர் என்ற பல பரிமாணங்கள் கொண்ட நுபூர், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். மேலும் `டு சன்ஸ்காரி கேர்ல்ஸ்` ( Two Sanskari Girls) என்ற நிகழ்ச்சி மூலமாக நெடுங்காலமாக பெண்கள் குறித்து நிலவும் கருத்துகளை உடைக்கும் விதமாக, மேடைகளில் கதையாக, கவிதையாக தனது பணிகளை அரங்கேற்றி வருகிறார் நுபூர்.

தனியாக பயணம் செய்வதால் பல விதமான அனுபவங்களை பெற முடியும் என்ற போதிலும் அது ஒரு "சவாலான விஷயம்" என்றும் பாதுகாப்பு குறித்து கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

தான் தனியாக பயணம் செய்வது தெரிந்தால் மக்கள் வந்து தன்னிடம் பேச முயல்வார்கள் என்றும், அச்சமயத்தில் தான் தனது நண்பருக்காக காத்திருப்பதாக தெரிவித்துவிடுவேன் என்றும் கூறுகிறார் நுபூர்.

பிபிசியின் செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்