தடைகளைத் தாண்டி தனியே பயணிக்கும் பெண்கள்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியாகிவரும் நிலையில், ஒரு பெண் தனியாக பயணம் செய்வது என்பது பாதுகாப்பானதல்ல என்பது தான் பலரது கருத்து. எனினும் ஒற்றையாய் பயணித்து சுற்றுலா செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகிறது என்பது புதிய செய்தி.

ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும், வலைப்பதிவுகளிலும் இது போல தனியாகப் பயணம் செய்யும் சில பெண்கள் தமது பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.

அவ்வாறு சுற்றுலா செல்லும் பல பெண்களில் சென்னையை சேர்ந்த கவிப்பிரியாவும் ஒருவர். 27 வயதாகும் அவர் பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரி. தனியாக பயணித்து சுற்றுலா செல்வது நம்மை பற்றி நாம் அறிந்துகொள்வதற்கு உதவும் என்கிறார் இளம் எழுத்தாளருமான இவர்.

புதிய அனுபவங்களையும் புதிய இடங்களையும் தேடிச் செல்லும் தனது பயணங்களை கவிப்பிரியாவும் தனது வலைப்பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறார்.

தனியே சுற்றுலா செல்லும் பெண்ணின் அனுபவங்கள் குறித்து காணொளியை காண: புதிய அனுபவங்களை தேடி தனியாக பயணிக்கும் பெண்

முதலில் தான் தனியாக பயணம் செய்வதை தனது குடும்பத்தார் விரும்பவில்லை என்று கூறும் அவர், பிறகு தனது பெற்றோர் தனக்கு ஆதரவளிக்கத் தொடங்கிவிட்டதாக கூறுகிறார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கோவா, தில்லி, லே, லடாக் போன்ற பல இடங்களுக்கு தனியாகவே பயணித்துள்ள இவர், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பயணிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்று இவர் கூறுகிறார். தான் இதுவரை பார்த்த இடங்களில் தாஜ் மஹால் போன்ற ஒரு அழகிய இடத்தை பார்த்ததே இல்லை என்கிறார்.

தனியாகப் பயணிக்கும் பெண்கள் பல சவால்களை எதிர்கொள்ளலாம். ஆனால் அவற்றை தைரியமாகவும் மன உறுதியுடனும் கையாண்டால் எந்த பிரச்சினையையும் சமாளிக்கலாம் என்கிறார் கவிப்பிரியா.

ஆக்ராவில் ஒரு முறை, தான் பயணிக்கவேண்டிய ரெயிலைக் கோட்டை விட்ட நிலையில், அடுத்த ரெயிலுக்காக இரவு முழுவது காத்திருக்க வேண்டிய நிலையை அவர் நினைவு கூர்கிறார்.

ஒற்றையாய் செல்லும் சுற்றுலா பயணங்களுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தவிர்க்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது தனியாக சுற்றுலா சென்று புதிய அனுபவங்களை பெற வேண்டும் என்கிறார் கவிப்பிரியா.

கட்டுரை தொகுப்பு: சங்கீதா ராஜன்