You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா போர் : 2017ல் கிட்டத்தட்ட 5 லட்சம் அகதிகள் வீடு திரும்பியுள்ளதாக ஐ.நா தகவல்
இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சிரிய அகதிகள் தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை இதனை 'குறிப்பிடத்தக்க மாற்றம்' என்றும் வர்ணித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு இதுகுறித்து குறிப்பிடுகையில், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த 440,000 -க்கும் அதிகமான சிரியா அகதிகளும், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த 31,000 அகதிகளும் தற்போது வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பான்மையினர் தங்களின் உடைமைகளை சரிபார்க்கவும் குடும்ப உறுப்பினர்களை தேடும் நோக்கத்திலும் அலெப்போ, ஹமா, ஹோம்ஸ் மற்றும் டமாஸ்கஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பியுள்ளனர்.
ஆனால், இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் வீடு திரும்புவதற்கேற்ற பாதுகாப்பான சூழ்நிலை இன்னும் சிரியாவில் உருவாகவில்லை என்று அகதிகளுக்கான அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இதுகுறித்து பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அண்ட்ரெஜ் மஹெசிக், 2017-ம் ஆண்டில் சிரியாவிற்குள் இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் வீடு திரும்புவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க போக்கை தனது அமைப்பு ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
'இவர்களில் பெரும்பான்மையினர் தங்களின் உடைமைகளை சரிபார்க்கவும் குடும்ப உறுப்பினர்களை தேடும் நோக்கத்திலும் திரும்பியுள்ளனர். நாங்கள் சேகரித்த சில ஆதாரங்களின் அடிப்படையில் இதை நாங்கள் தெரிந்து கொண்டோம்'
சில சந்தர்பங்களில் தங்களின் பாதுகாப்பு குறித்து தாங்களாகவே முடிவுசெய்து கொள்கின்றனர், அவர்கள் எந்த பகுதிக்கு செல்ல நினைக்கிறார்களோ அங்கு உண்மையாகவே பாதுகாப்பு நிலைமைகளில் முன்னேற்றங்கள் இருப்பதாகவோ அல்லது அவ்வாறு கருதிக்கொண்டோ செல்கின்றனர்.
2015-ம் ஆண்டில் இருந்து 260,000 அகதிகள் சிரியாவிற்கு திரும்பியுள்ளனர் என்றும் முக்கியமாக துருக்கியில் இருந்து அதிகமானோர் திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்களின் படி, வீடு திரும்புவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறியாவிற்குள் தங்களின் நடவடிக்கைகளை அதிகரித்து வருவதாகவும் தங்கள் அமைப்பு செய்து வருவதாக மஹசிக் தெரிவித்துள்ளார்.
ஆனால், அஸ்டனா மற்றும் ஜெனீவா சமாதானப் பேச்சுவார்த்தைகளுடன் இணைத்து பார்க்கும் போது நம்பிக்கைகள் அதிகரித்தாலும், இடம்பெயர்ந்த அகதிகள் மீண்டும் தங்களின் சொந்த இடங்களுக்கே திரும்புவதற்கு ஏற்ற பாதுகாப்பான சூழ்நிலை சிரியாவில் இன்னும் உருவாகவில்லை என நம்புவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
பிராந்தியத்தில் கணக்கிடப்பட்டுள்ள 5 மில்லியன் அகதிகளில் ஒரு பகுதியினரே தற்போது மீண்டும் வீடு திரும்பியுள்ளதாகவும் மஹெசிக் கூறியுள்ளார்.
2016-ம் ஆண்டில் 200,000 பேர் சிரியாவில் இருந்து வெளியேறியதாக கடந்த வாரம் ஐநா அகதிகள் தெரிவித்தது.
அரசுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் தொடங்கிய இந்த போரில் இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான சிரியர்கள் தங்களின் உயிரை இழந்துள்ளனர்.
பிற செய்திகள் :
- கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் திருமணம் (புகைப்படத் தொகுப்பு)
- வட கொரியாவுக்கு நிதி ஆதரவு: சீன வங்கிக்கு தடை விதித்த அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்
- மெஸ்ஸியின் 'நூற்றாண்டின் திருமணம்' - அர்ஜெண்டினாவில் பிரம்மாண்டம்
- ஜி.எஸ்.டியால் விலை உயரும் உயிர்காக்கும் மருந்துகள் - சிறு நகரங்கள், கிராமங்களில் தட்டுப்பாடு அபாயம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்