எங்களைப் பாதிக்கும் விஷயங்களுக்குப் பதிலடி கொடுப்போம்: ரஷ்யா
சான்ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகத்தை மூடும்படி உத்தரவிட்டுள்ள நிலையில், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விஷயங்களுக்கு தங்கள் நாடு கடுமையான பதிலடி கொடுக்கும் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், AFP
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள தனது துணைத் தூதரகம் மற்றும் நியூ யார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களில் உள்ள வர்த்தக செயல்பாடுகளுக்கான அலுவலகங்கள் ஆகியவற்றை ரஷ்யா மூட வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.
கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவில் உள்ள அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளின் எண்ணிக்கையை 755-ஆக ரஷ்ய அரசு குறைத்ததைத் தொடர்ந்து அமெரிக்கா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின்போதுதான் இருநாட்டு உறவுகளில் இப்பிரச்சனை தொடங்கியதாக லாவ்ரோவ் குற்றம்சாட்டினார்.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள துணைத் தூதரக அலுவலகத்தின் புகை போக்கியில் இருந்து அடர்ந்த கரும்புகை வெளிவந்ததைத் தொடர்ந்து, வெள்ளியன்று அங்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அங்கு அனுப்பப்பட்டனர்.
அறியப்படாத பொருட்கள் ஏதேனும் எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அச்சப்படத் தேவையில்லை என்றும் தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர். அவர்கள் அந்தக் கட்டடத்தினுள் அனுமதிக்கப்பட்டார்களா என்பது தெளிவாகவில்லை.

பட மூலாதாரம், Getty Images
கிரிமியா பகுதியில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு தொடர்பான குற்றச்சாட்டு ஆகியவற்றைத் தொடர்ந்து ஒபாமா 35 ரஷ்ய வெளியுறவு அதிகாரிகளை அமெரிக்காவை விட்டு வெளியேற்றினார்.
அமெரிக்க-ரஷ்ய உறவுகளை மட்டுப்படுத்தும் நோக்குடனும், டிரம்ப் தனது ஆட்சிக்காலத்தில் ஆக்கபூர்வமாக செயல்படுவதையும் தடுக்கும் நோக்குடனும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லாவ்ரோவ் ஒபாமா நிர்வாகத்தைக் குறை கூறியுள்ளார்.
ஒபாமாவின் நடவடிக்கைகளுக்கு அப்போது ஏதும் கருது தெரிவிக்காத ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் வெளியுறவு அதிகாரிகளின் எண்ணிக்கையைக் கடுமையாகக் குறைத்தார்.

பட மூலாதாரம், EPA
ரஷ்யாவில் இருந்து வெளியேற அவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந் நிலையில் ஒரு நாள் முன்னதாக அமெரிக்கா துணைத் தூதரகம், வர்த்தக மையங்கள் ஆகியவற்றை மூடும் தமது உத்தரவை வெளியிட்டது. சனிக்கிழமையுடன் இந்த மூன்று அலுவலகங்களும் மூடப்படவேண்டும் என்பதே உத்தரவு.
துணைத் தூதரகம் மூடப்பட்டாலும் ரஷ்ய அதிகாரிகள் அமெரிக்காவை விட்டு வெளியேறத் தேவையில்லை என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்க-ரஷ்ய உறவுகள் ஆபத்தான அளவில் மோசமடைந்துள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார். அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் ரஷ்யா மீது தடைகள் விதிப்பது தொடர்பாக விவாதம் நடந்த நிலையில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருந்தார்.
டிரம்ப் அதிபராகத் தேர்வு செயப்பட்ட, கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதா என்றும் டிரம்ப் தரப்பில் யாரேனும் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தார்களா என்றும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், ரஷ்யா தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இந்த விசாரணைகளை, தன்னை இலக்கு வைத்து செய்யப்படும் பழிவாங்கும் செயல் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












