டோக்லாம்: படைகளை வாபஸ் பெற இந்தியா - சீனா ஒப்புதல்

பட மூலாதாரம், AFP
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சனைக்குரிய டோக்லாம் பகுதியில் இருந்து இரு நாட்டு படைகளையும் பரஸ்பரம் திரும்பப் பெற இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இரு நாடுகளின் தூதரக அளவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, டோக்லாம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு நாட்டு படையினரும் திரும்பப் பெறும் பணிகள் தொடங்கியுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ கூறுகையில், "டோக்லாமில் உள்ள படைகளையும் தளவாடங்களையும் இந்தியா திரும்பப் பெற்றுள்ளது சீனாவும் அதன் வரலாற்று எல்லை உடன்பாட்டின்படி, இறையாண்மை உரிமைகளின்படி செயல்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவித்த ஒரு மூத்த இந்திய அரசு அதிகாரி கூறுகையில், ''நீண்ட காலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இந்தியா மற்றும் சீனா ஆகிய இருதரப்பும் பிரச்சனைக்குரிய பகுதியில் இருந்து தங்கள் படைகள் மற்றும் ஆயுத தளவாடங்களை திரும்பப் பெறுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே டோக்லாமில் சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பாக மோதல் போக்கு நிலவி வந்தது.
ஜுன் மாத மத்தியில், இந்தியாவில் டோக்லாம் என்றும், சீனாவில் தொங்லாங் என்று அறியப்படும் பீடபூமி வழியாக எல்லையில் சாலையை விரிவாக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தபோது சமீபத்திய மோதல் தொடங்கியது.

பட மூலாதாரம், AFP
இந்த சாலை பணிகள் நிறைவுபெற்றுவிட்டால், இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் "கோழியின் கழுத்து" எனப்படும் 20 கிலோமீட்டர் (12 மைல்) நிலப்பரப்பை சீனா எளிதாக சென்றடைய வழிசெய்யும் என்பதால் இந்தியா கவலையடைந்துள்ளது.
இந்திய பெருநிலப்பகுதியின் வட கிழக்கில் அமைந்துள்ள 7 மாநிலங்களை இந்த பகுதிதான் இணைக்கிறது.
இந்த முட்டுக்கட்டை நிலை துவங்கியதிலிருந்து, இரு தரப்பினரும் தங்களது படைகளை குவித்து வருவது மட்டுமின்றி, எதிர் தரப்பினரை பின் வாங்குமாறு வற்புறுத்தி வந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த பகுதிக்கு சீனாவும் பூட்டானும் பரஸ்பரம் உரிமை கொண்டாடி வரும் நிலையில் இந்த முட்டுக்கட்டை நிலை நெருக்கடியாக மாறும் நிலை இருந்தது.
இந்த நிலையில் இந்தியாவும், சீனாவும் ராஜீய அளவில் பேச்சு நடத்தி படைகளைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளன.
பிற செய்திகள் :
- விஞ்ஞானி என நிரூபிக்க ரகசிய குறியீட்டை கண்டுபிடியுங்கள்! புதிர் - 8
- ஹார்வி புயல்: ஹூஸ்டனில் வெள்ளப்பேரழிவில் இருந்து 2000 பேர் மீட்பு
- டிசம்பரில் இலங்கை உள்ளூராட்சி சபைக்கு தேர்தல்?
- ஒருநாள் போட்டி தொடரை வென்றது இந்தியா: 5 முக்கிய காரணங்கள்
- ஹரியானா சாமியாருக்கு இன்று தண்டனை: 7 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கடுமையாக போராடிய சிந்து தோல்வி
- பிரிவினைக்கு முந்தைய வரலாறு இந்தியா, பாகிஸ்தானில் எவ்வாறு கற்பிக்கப்படுகிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












