ஹார்வி புயல்: ஹூஸ்டனில் வெள்ளப்பேரழிவில் இருந்து 2000 பேர் மீட்பு

பட மூலாதாரம், Reuters
டெக்சாஸ் மாகாணத்தில் கன மழையுடன் ஹார்வி புயல் புரட்டி எடுத்து வரும் நிலையில், ஹுஸ்டன் நகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய சுமார் 2000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களுக்குள் ஏராளமான உயிரிழப்புகளுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது பற்றி விசாரணை நடந்து வருவதாக ஹாரிஸ் கவுன்ட்டி காவல் அலுவலக தலைமை அதிகாரி டேரில் கோல்மென் அலுவலகம் கூறியுள்ளது.
புயல் தொடர்புடைய உயிரிழப்புகளை தம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று டெக்சாஸ் மாகாண ஆளுநர் க்ரெக் அப்போட் கூறியுள்ளார்.
அங்கு தற்போது நிலவும் வானிலை சூழ்நிலை, "முன்னெப்போதும் இல்லாதது" என்று தேசிய வானிலை சேவை அலுவலகம் கூறியுள்ளது.
ஹூஸ்டன் பெருநகர் பகுதியில் வெள்ளப்பெருக்கு அவசரகால அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அங்கு பயணம் செய்வது இயலாத ஒன்று என வானிலை அலுவலகம் கூறியுள்ளது.
புயல் பாதிப்புகளையொட்டி, ஏராளமான தங்குமிடங்களும் ஒருங்கிணைப்பு மையமும் திறக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Twitter/@caroleenam/Reuters
ஆளுநர் அப்போட் கூறுகையில், "டெக்சாஸை இணைக்கக் கூடிய 250 சாலைகள் மூடப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் கூறியபடி, 19 பகுதிகளை மத்திய பேரிடர் ஏற்பட்ட இடங்களாக அறிவித்துள்ளேன்" என்றார்.
ஹுஸ்டன், விக்டோரியா மற்றும் கோர்பஸ் கிறிஸ்டி என மூன்று நகரங்களிலும் நீடித்து வரும் கன மழையை தற்போது எதிர்கொண்டுள்ளதாகவும் நம்ப முடியாத அளவுக்கு அதிக மழையை நாம் பெறுவோம்" என்றும் அப்போட் தெரிவித்தார்.
முன்னதாக, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஐந்து பேர் உயிரிழந்ததாக தேசிய வானிலை சேவை அலுவலகம் கூறியது. ஆனால், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ஹூஸ்டன் உறுதிப்படுத்தியுள்ளது.

புயல் கரையை கடந்தது முதல் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராக்போர்ட் நகரம் உள்ள அரான்சாஸ் மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை இரவு தீ பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
ஹூஸ்டனில் கடந்த சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வீதியில் வாகனத்தை ஓட்டிச் சென்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

பட மூலாதாரம், Houston Transtar
இந்நிலையில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழல் ஏற்பட்டாலோ அல்லது மீட்பு நடவடிக்கை நடவடிக்கை அவசியம் என கருதினாலோ மட்டுமே அவசரகால சேவையை அழைக்குமாறு குடியிருப்புவாசிகளை மேயர் சில்விஸ்டர் டர்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புயல் முடிந்து விட்டதாகக் கருதிக் கொண்டு வீதியில் நடமாட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஹாரிஸ் மாவட்டத்தில் படகுகளை வைத்திருப்பவர்கள், மீட்புப் பணிக்கு உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். .

பலத்த காற்று வீசுவதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது. ஏராளமான மக்கள் தொடர்ந்து உதவிகள் கோரி வருவதால், ஹுஸ்டனில் உள்ள அமெரிக்க கடலோர காவல் படை, கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2004-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்லி புயலுக்கு பிறகு வீசும் கடுமையான புயலாக ஹார்வே புயல் கருதப்படுகிறது.
டெக்சாஸில் 1961-ஆம் ஆண்டில் கர்லா சூறாவளி தாக்கியதில் 34 பேர் கொல்லப்பட்டனர் என்று ஹுஸ்டன் குரோனிக்கல் நாளிதழ் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள் :
- ஒருநாள் போட்டி தொடரை வென்றது இந்தியா: 5 முக்கிய காரணங்கள்
- ஹரியானா சாமியாருக்கு இன்று தண்டனை: 7 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கடுமையாக போராடிய சிந்து தோல்வி
- பிரிவினைக்கு முந்தைய வரலாறு இந்தியா, பாகிஸ்தானில் எவ்வாறு கற்பிக்கப்படுகிறது?
- 800 ஏக்கர் பிரம்மாண்ட பங்களாவில் இருந்த ஹரியானா சாமியார்
- கேக்கை தின்றவர் யார்? புதிரை கண்டுபிடித்து ராணிக்கு உதவுங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












