ரஷிய துணைத் தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு

ரஷிய துணைத் தூதரகம்.

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ள ரஷியத் துணைத் தூதரகத்தையும், இரண்டு தூதரக கூடுதல் மையங்களையும் மூடும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

ரஷியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்கும்படி அந்நாடு வலியுறுத்தியதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையை அமெரிக்க ராஜீயத் துறை எடுத்துள்ளது.

ரஷிய நடவடிக்கையை சமன் செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

துணைத் தூதரகத்தையும், வாஷிங்டனிலும் நியூயார்க்கிலும் உள்ள தூதரகக் கூடுதல் மையங்களையும் சனிக்கிழமைக்குள் மூடிவிடவேண்டும் என்று அது கெடு விதித்துள்ளது.

தேவையற்ற இடையூறாக அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்குப் பதிலடியாக இதைச் செய்வதாகக் குறிப்பிட்ட அமெரிக்க ராஜீயத் துறை, தற்போதைய இந்த மோதல் போக்கு முடிவுக்கு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்குப் பிறகும் பரஸ்பரம் இரு நாடுகளிலும் உள்ள தூதரகப் பணியாளர்கள் எண்ணக்கையில் சமமின்மை நீடிக்கவே செய்யும். ஆனாலும், இரு நாடுகளின் உறவு மோசமடைவது ஒரு சுழலாகத் தொடர்வதைத் தடுக்கும் நோக்கத்தோடு ரஷியாவின் வேறு சில தூதரகக் கூடுதல் மையங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதாக அமெரிக்க ராஜீயத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :