கேம்ப்ரில்ஸில் மக்கள் மீது காரை மோதிய ஐந்து சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை
ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவின் தெற்குப் பகுதி நகரான கேம்ப்ரில்ஸில் மக்கள் கூட்டம் மீது காரை மோதச் செய்த சம்பவத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

பட மூலாதாரம், AFP
கேம்ப்ரில்ஸில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் பொதுமக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் வேகமாக வந்த கார் மோதியதாகவும், அதில் ஒரு காவல்துறை அதிகாரி உள்பட ஏழு பேர் மீது கார் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர் என்றும் ஸ்பெயினின் அவசரகால சேவை அமைப்பு கூறியுள்ளது.
இதில் ஆறு பேர் சம்பவ பகுதியிலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் காரை விட்டு வெளியே இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் அவர்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர் என்று உள்ளூர் ஊடகம் கூறியுள்ளது.
அந்த நபர்கள் தங்கள் இடுப்பில் வெடிபொருள்களை வைத்திருப்பதாக கருதப்பட்டது. ஆனால், அவை போலியானவை என்று உள்ளூர் காவல்துறை அதிகாரி கூறினார்.
கேம்ப்ரில்ஸ் நகரம், பார்சிலோனாவின் தெற்குப் பகுதியில் இருந்து 110 கிலோ மீட்டர் (68 மைல்கள்) தூரத்தில் உள்ளது. அந்த நகரில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
லாஸ் ராம்பிலாஸ் சம்பவம் என்ன?
கடந்த வியாழக்கிழமை லாஸ் ரம்பிலாஸ் நகரில் மக்கள் கூட்டம் மீது வேனை மோதச் செய்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
அந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் வேன் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சம்பவ பகுதியில் வேனில் இருந்த ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த வேனை மோசா ஒளக்பிர் என்பவர் ஓட்டி வந்திருக்கலாம் என்று ஸ்பேனிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது சகோதரர் ட்ரிஸ் ஒளக்பிர் ஆவணங்களை பயன்படுத்தி அந்த வேனை வாடகைக்கு எடுத்து தாக்குதலில் மோசா ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அவரது படத்தை ஸ்பெயின் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், AFP
பார்சிலோனா மற்றும் கேம்ப்ரில்ஸ் நகர தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரு குழுவாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை "ஜிகாதிகளின் செயல்" என்று ஸ்பெயின் பிரதமர் மேரியானோ ராஜோய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மூன்று நாட்களுக்கு ஸ்பெயினில் தேசிய அளவிலான துக்கம் அனுசரிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பார்சிலோனாவில் வியாழக்கிழமை நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவினருக்கு தொடர்பு இருக்கலாம் என்று ஸ்பெயின் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












