மொசூல் குடியேறிகள் முகாமில் வழங்கப்பட்ட உணவால் பலர் பாதிப்பு: உணவில் நச்சுத்தன்மையா?
இராக்கில் மொசூலுக்கு அருகே குடிபெயர்ந்தோர் தங்கியிருந்த முகாமில் வழங்கப்பட்ட உணவில் இருந்த நச்சுத்தன்மையால்நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். மேலும், இதில் ஒரு குழந்தை இறந்துள்ளது.

பட மூலாதாரம், UNHCR/AMIRA ABD EL KHALAK
ரமலான் நோன்பு வைத்தவர்கள் மாலையில் நோன்பை துறக்கும்விதமாக உணவு உண்டபோது, அவர்களுக்கு வாந்தி-பேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மொசூல் நகரை மீட்க இராக்கிய துருப்புக்கள் சண்டையிட்டு வருவதால், மொசூல் நகரில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு பகுதியினர் மொசூல் மற்றும் இர்பில் இடையே அமைந்த்திருக்கும் 'ஹசான்ஷம் யூ2' முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.
மொசூல் நகரின் மேற்குப்பகுதியில் வலுவாக இருக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது கடுமையான முற்றுகையை எதிர்கொண்டுள்ளனர்.
உணவில் இருந்த நச்சுத்தன்மையால் இதுவரை ஏறக்குறைய 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியிருப்பதாகவும், அதில் 200 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐ.நா அகதிகள் முகமையின் அறிக்கை கூறுகிறது.
ஒரு குழந்தை உயிரிழந்துள்ள தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பெண் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகாம்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்வது மிகவும் கவலையளிக்கக்கூடியது என்று ஐ.நா அகதிகள் முகமை கூறுகிறது.

பட மூலாதாரம், UNHCR/AMIRA ABD EL KHALAK
"பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைக்கவும், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காகவும், ஐ.நா அகதிகள் முகமையின் பணியாளர்கள், பிற முகமைகள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து இரவு முழுவதும் பணியாற்றினார்கள்," என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இர்பிலிலுள்ள உணவகம் ஒன்றில் தயாரிக்கப்பட்ட உணவில், பீன்ஸ், கோழி தயிர் ஆகியவை இடம்பெற்றிருந்தன. கத்தார் அறக்கட்டளை மூலம் முகாமிற்கு உணவு கொண்டு வரப்பட்டதாக ருடெள செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
முகாம்களுக்கு உணவு வழங்க வெளி அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், நடைமுறைகளை மாற்றுவதற்கு "பெரும் அழுத்தம்" இருப்பதாக முகாமின் மேற்பார்வையாளர் ரிஸ்ஜார் ஓபேட் கூறுகிறார்.
பாதிக்கப்பட்டவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
உணவு தயாரித்த உணவகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக ருடெள தெரிவித்துள்ளது.
மொசூல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வெளியேறும் மக்கள் தங்குவதற்காக, ஐ.நா அகதிகள் முகமை அந்தப் பகுதியில் அமைத்துள்ள 13 முகாம்களில் இந்த முகாமும் ஒன்று. இங்கு தற்போது 6,235 பேர் தங்கியிருக்கின்றனர்.

அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப்படைகளின் ஆதரவு பெற்ற இராக் படைகள், ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் நகரை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் கடந்த அக்டோபர் முதல் சண்டையிட்டு வருகின்றன.
பிப்ரவரி மாதம் முதல் நகரின் மேற்குப்பகுதியில் மோதல் தொடங்கியது.
ஏறக்குறைய, ஒரு லட்சம் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயிரத்திற்கும் குறைவான ஐ.எஸ் தீவிரவாதிகளின் வசம் இருக்கும் மொசூலின் பழைய பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பல வடக்கு மாவட்டங்களும் தற்போது முற்றுகையிடப்பட்டுள்ளது.
மொசூல் நகரில் வசித்து வந்த மக்களில் மூன்றில் ஒரு பகுதியான எட்டு லட்சம் பேர், கடந்த அக்டோபர் மாதத்தில் சண்டை தொடங்கியதும் வெளியேறிவிட்டனர். அதில் 6,33,000 பேர் நகரின் மேற்குப் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












