வீடியோவில் இருப்பது நான்தான்; குரல் என்னுடையதல்ல: சரவணன்
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவளிக்க 6 கோடி ரூபாய் வரை தர முன்வந்ததாக தான்பேசுவதுபோல வெளி வந்திருக்கும் வீடியோவில் இருப்பது தான்தான் என்றும், ஆனால், அதிலிருக்கும் குரல் தன்னுடையதல்ல என்றும் மதுரை தெற்குத் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ். சரவணன் விளக்கமளித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த பிப்ரவரி மாதத்தில், கூவத்தூரில் சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தபோது, பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாகவும், பணம், தங்கம் ஆகியவை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால், அவை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சியில் எஸ்.எஸ். சரவணன் பேசுவதுபோன்ற ரகசியமாக பதிவுசெய்யப்பட்ட காட்சி ஒன்று ஒளிபரப்பானது.
அவரவர் தொகுதியிலிருந்து சென்னைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களை சசிகலா தரப்பினர் விமான நிலையத்திலேயே சந்தித்து, 2 கோடி ரூபாய் தருவதாக வாக்குறுதியளித்ததாகவும் பிறகு ஆளுனரைச் சந்திக்கச் சென்றபோது, 4 கோடி ரூபாய் வரை தருவதாகக் கூறியதாகவும் பிறகு கூவாத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது 6 கோடி ரூபாய் வரை தருவதற்கு முன்வந்ததாகவும் சரவணன் கூறுவது போன்ற காட்சிகள் அதில் இருந்தன.

பட மூலாதாரம், Getty Images
அதேபோல, அ.தி.மு.கவின் சின்னத்தில் போட்டியிட்ட பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும் அதில் அவர் கூறினார். இதேபோல, சூலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கனகராஜும் கூறியதாக காட்சிகள் ஒளிபரப்பாயின.
இந்தக் காட்சிகளை ஒரு தனியார் தமிழ் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் பதிவுசெய்து, ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்திருந்தனர்.
இந்தக் காட்சிகள் திங்கட்கிழமையன்று மாலையில் ஒளிபரப்பானதும், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சரவணன், அந்த வீடியோ காட்சியில் இருப்பது தான்தான் என்றும், ஆனால், அதில் உள்ள குரல் தன்னுடையதல்ல என்றும் விளக்கமளித்தார்.
மேலும், அந்தப் பேட்டியை ரகசியமாக ஒளிப்பதிவு செய்த ஷா நவாஸ் என்பவர் யார் என்றே தனக்குத் தெரியாது என்றும் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
ஏதோ ஒரு விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ அது என்றும், தன்னுடன் இருப்பது யார் என்றே தனக்கு நினைவில்லையென்றும் சரவணன் தெரிவித்திருக்கிறார்.
தொடர்புடைய கட்டுரைகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












