காட்சிக்காக வைக்கப்பட்ட உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு பிரான்ஸ் தடை
காட்சிக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ள டால்பின் மீன்கள் மற்றும் கில்லர் வேல்ஸ் என்றழைக்கப்படும் திமிங்கல வகைகள் இனப்பெருக்கம் செய்வதை பிரான்ஸ் தடை செய்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்நடவடிக்கையை தங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக தடை கோரிய ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.
ஆர்கா வகை மீன்கள் மற்றும் குமிழ் மூக்கு டால்பின் மீன்களை தவிர அனைத்து வகை திமிங்கலங்கள், டால்பின் மீன்கள் மற்றும் கடல் பன்றி வகைகளை காட்சிகாக பிடித்து வைப்பதையும் பிரான்ஸ் அரசு தடை செய்துள்ளது.
இந்த தடை உத்தரவு குறித்து தாங்கள் கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்று ஃபிரெஞ் விலங்கியல் பூங்காக்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளன.
ஆனால், அரசின் இந்த முடிவை விலங்குகள் நல ஆர்வலர்கள், பிரான்ஸ் அரசு முன்னெடுத்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற முடிவு என்று தெரிவித்துள்ளனர்.
காட்சிக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ள உயிரினங்களின் இனப்பெருக்கத்தை தடை செய்வது, கடல் சர்க்கஸ் என்ற விலங்குகளை வைத்து காட்டப்படும் வித்தையை முடிவுக்கு கொண்டு வரும் என்று ஸீ ஷெப்பர்ட் உள்ளிட்ட ஐந்து பாதுகாப்பு குழுக்கள் தாங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான சட்டத்தின் பதிப்பில், கடந்த புதன்கிழமையன்று பிரான்ஸின் சுற்றுச்சூழல் அமைச்சர் கையெழுத்திட்டுள்ளார்.
ஆனால், இது தொடர்பான விதிகளை மேலும் கடினமாக்க முடிவு செய்துள்ள சுற்றுச்சூழல் அமைச்சகம், மீன்காட்சியங்களில் சில விலங்குகளுக்கு மருந்து செலுத்தப்படுகிறது என்பதை கண்டறிந்த பின்னர், காட்சிக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ள உயிரினங்களின் இனப்பெருக்கத்தை முற்றிலுமாக தடை செய்வது என்ற முடிவு எடுக்கப்பட்டதாக ஏஃஎப்பி செய்தி முகமையிடம் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
மேலும் இந்த புதிய விதிகள், டால்பின் மீன்கள் உள்ள நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களில் பொது மக்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே நேரடி தொடர்பையும் தடை செய்துள்ளன.
அதே போல், விலங்குகள் மற்றும் மீன் வகைகள் இருப்பதற்காக நீச்சல் குளங்கள் அளவும் குறிப்பிடத்தக்க அளவு பெரியதாக இருக்க வேண்டும் என்றும் புதிய விதிகள் தெரிவிக்கின்றன.
இந்த விதிகளுக்கு இணங்க நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்குள் மாற்றங்கள் செய்தாக வேண்டும். மேலும், மூன்று ஆண்டுகளுக்குள் நீச்சல் குளங்களை விரிவுபடுத்த வேண்டும்.
பிற முக்கிய செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












