அழகுப் போட்டிகளில் ஒல்லியான அழகிகள் பங்கேற்க ஃபிரான்ஸ் தடை

பட மூலாதாரம், Getty Images
அழகுப் போட்டிகளில் ஆரோக்கியமில்லாத உடல் மெலிந்த மாடல்களை ஈடுபடுத்த தடைவிதிக்கும் சட்டம் சனிக்கிழமை முதல் ஃபிரான்ஸில் அமலாகியுள்ளது.
உயரத்திற்கு ஏற்ற எடையை குறிக்கும் பாடி மாஸ் இண்டெக்ஸ் (பி எம் ஐ )குறித்தும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் பற்றியும் மருத்துவர் ஒருவரின் கையொப்பமிட்ட சான்றிதழை மாடல்கள் சமர்பிக்க வேண்டும்.
உணவு கோளாறுகளை எதிர்த்துப் போராடுவதே இதன் முக்கிய நோக்கம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
டிஜிட்டல் ரீதியாக திருத்தப்பட்ட புகைப்படங்களிலும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதற்கான குறியீடு இடம்பெற வேண்டும்.
அதாவது, புகைப்படம் ஒன்றில் மாடலின் தோற்றம் மாற்றப்பட்டிருந்தால் அந்த புகைப்படத்தில் திருத்தப்பட்ட புகைப்படம் என இடம்பெற்றிருக்க வேண்டும்.
இந்த சட்டத்தின் முந்தைய வரைவில், மாடல்களுக்கான குறைந்தபட்ச பி எம் ஐ அளவு குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஃபிரான்ஸில் உள்ள மாடலிங் ஏஜென்ஸிகளை போராட்டத்தில் ஈடுபட தூண்டியது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், அந்த சட்டத்தின் இறுதி வடிவம், 2015 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்த நிலையில், மாடலின் எடை, வயது மற்றும் உடல் வடிவம் ஆகியற்றை கருத்தில் கொண்டு அவர் ஒல்லியாக இருக்கிறாரா இல்லையா என்பதை மருத்துவர்கள் முடிவெடுக்க இச்சட்டம் அனுமதிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
சட்டத்தை மீறும் ஊழியர்கள் மீது சுமார் 82,000 டாலர்கள் வரை அபராதமும், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
எடை குறைந்த மாடல்கள் தொடர்புடைய சட்டத்தை இயற்றியதில் ஃபிரான்ஸ் முதல் நாடல்ல. இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இஸ்ரேல் ஏற்கனவே அவ்வாறு சட்டங்களை இயற்றியுள்ளன.
அனோரெக்ஸியா எனப்படும் பசியின்மை நோயினால் ஃபிரான்ஸில் 30,000 முதல் 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 90 சதவிதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












