You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை மருத்துவர்களாக பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட முதல் தனியார் மருத்துவக் கல்லூரியின் மருத்துவப் பட்டதாரிகளை மருத்துவர்களாக பதிவு செய்து கொள்ளுமாறு மேல் நீதிமன்றம் இலங்கை மருத்துவ சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
தங்களை மருத்துவர்களாக பதிவு செய்து கொள்ள இலங்கை மருத்துவ சபை மறுத்து வருவதாக குற்றம்சாட்டி சயிடம் எனும் தனியார் மருத்துவக் கல்லூரியின் பட்டதாரி ஒருவர் தாக்கல் செய்த மனு தொடர்பாக தீர்ப்பு வழங்கிய போது நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
சயிடம் தனியார் மருத்துவக் கல்லூரியினால் வழங்கப்படும் மருத்துவ பட்டத்தில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்ற காரணத்தினால் தகுதியற்ற நபர்களை மருத்துவர்களாக பதிவு செய்துக்கொள்ள முடியாதென்று இலங்கை மருத்துவ சபை தெரிவித்து வந்தது.
ஆனால், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள், சயிடம் தனியார் கல்லுரிக்கு மருத்துவ பட்டங்களை வழங்கும் அதிகாரத்தை உயர் கல்வி அமைச்சு சட்டரீதியாக வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
எனவே, அந்த பட்டத்தை நிராகரிக்க இலங்கை மருத்துவ சபைக்கு எந்த விதமான அதிகாரங்களும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், எனவே சம்பந்தப்பட்ட பட்டதாரிகளை பதிவு செய்துகொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தனர்.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசு மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் உப தலைவர் டாகடர் .நவீன் டி சொய்சா இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.
இதேவேளையில், தனது சங்கத்தின் மத்தியக் குழு நாளை மறுதினம் கூடி தகுந்த தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தெரிவித்த டாகடர் நவீன் டி சொய்சா தகுதியற்ற நபர்கள் அரச மருத்துவ துறையில் சேர்வதை தனது சங்கம் அனுமதிக்காது என்று மேலும் தெரிவித்தார்.
இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட போது உச்ச நீதிமன்ற வளாகம் முன் அமைந்துள்ள பாதையில் நூற்றுக் கணக்கான அரசு மருத்துவ கல்லூரிகளின் மாணவர்கள் ஒன்று கூடி, சயிடம் தனியார் மருத்துவக் கல்லூரியை தடை செய்யுமாறு வலியுறுத்தி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்