டின்டின் கேலிச்சித்திர ஓவியம் 12 லட்சம் டாலர்களுக்கு ஏலம்

புகழ்பெற்ற காமிக்ஸ் கதாபாத்திரமான டின்டின் சாகசம் செய்யும் ஒரு தொகுப்பின் கடைசி இரண்டு பக்கங்களுக்கென வரையப்பட்ட ஓவியங்கள் 12 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போயிருக்கின்றன.

உலகெங்கும் டிண்டின் கேலிச்சித்திரப் புத்தகங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.
படக்குறிப்பு, உலகெங்கும் டிண்டின் கேலிச்சித்திரப் புத்தகங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

கிங் ஒட்டோகர்'ஸ் ஸெப்டர் என்று பெயரிடப்பட்ட இந்த கதையில் கடைசியில், கடல் விமானம் ஒன்று கடலில் இறங்கியிருக்க, அதில் பயணித்தவர்கள் ஏதோ ஞாபகத்தில் விமானத்திலிருந்து வெளியேறி தண்ணீரில் இறங்குவது, கதையின் நாயகனான டின்டின் படிப்பவர்களை நோக்கி கண்ணடிப்பது ஆகியவை இந்த ஓவியங்களில் இருந்தன.

இவ்வளவு பெரிய தொகைக்கு டின்டின் ஓவியம் ஏலம் போவது இதுவே முதல் முறை.

இதற்கு முன்பும், கிங் ஒட்டோகர் புத்தகத்தைச் சேர்ந்த ஓவியங்களே இந்த விலைக்கு ஏலம் போயின.

டிண்டின் கதாபாத்திரம் நகைச்சுவையுடன் சாகசம் செய்யும் ஒரு பாத்திரமாக உருவாக்கப்பட்டிருந்தது.
படக்குறிப்பு, டிண்டின் கதாபாத்திரம் நகைச்சுவையுடன் சாகசம் செய்யும் ஒரு பாத்திரமாக உருவாக்கப்பட்டிருந்தது.

பெல்ஜியத்தைச் சேர்ந்த ஓவியரான ஹெர்க் உருவாக்கிய டின்டின் பாத்திரத்தின் பதினெட்டாவது சாகசம்தான் இந்த கிங் ஒட்டோகர்'ஸ் செப்டர். 1939ல் இந்தப் புத்தகம் வெளிவந்தது.

கற்பனையான மத்திய ஐரோப்பிய நாடு ஒன்றில் அரசரைத் தூக்கியெறிய நடக்கும் முயற்சிகளை டின்டின் தடுத்து நிறுத்துவதுதான் இந்தத் தொகுப்பின் கதை.

நாஜி ஜெர்மனி மீதான விமர்சனமாக இந்தக் கதை உருவாக்கப்பட்டிருந்தது.