ராம் சேது - அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் - எப்படி உள்ளது?

ராம் சேது படம்

பட மூலாதாரம், ZEE STUDIOS

நடிகர்கள்: அக்ஷய் குமார், நாசர், ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ், நுஷ்ரத் பருச்சா, சத்யதேவ்; இசை: டேனியல் பி. ஜார்ஜ்; ஒளிப்பதிவு: அசீம் மிஸ்ரா; இயக்கம்: அபிஷேக் ஷர்மா.

'ராமர் பாலம்' என்றும் ஆதம் பாலம் என்றும் அழைக்கப்படும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பகுதியை உருவாக்கியது யார் என்பதை 'தொல்லியல்' சார்ந்து சொல்லும் படமாக 'ராம் சேது'வை உருவாக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். கடந்த சில மாதங்களாக பாலிவுட் திரைப்படங்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துவரும் நிலையில், இந்தப் படம் வெளியாகியிருக்கிறது.

படத்தின் கதை இதுதான்: ஆர்யன் (அக்ஷய் குமார்) ஒரு தொல்லியலாளர். நாத்திகர். தொல்லியலாளர்கள் மத்தியில் பெரும் மதிப்பு பெற்றவர். 2001ல் தாலிபன்களால் பாமியான் புத்தர் சிலைகள் சிதைக்கப்பட்டதை சரிசெய்யும் தொல்லியலாளர் குழுவில் இடம்பெற்றவர்.

2007இல் இந்திய அரசும் அதேபோல ஒரு தொல்லியல் சின்னத்தை சிதைக்க முயற்சிக்கிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள ராமர் பாலம் பகுதியைத் தோண்டி, கப்பல் செல்வதற்கான கால்வாய் அமைக்க முடிவுசெய்கிறது.

இதற்கான ஒப்பந்தம் இந்திரகாந்திற்குச் (நாசர்) சொந்தமான தனியார் நிறுவனத்திற்குக் கொடுக்கப்படுகிறது. அந்தப் பாலம் ராமரால் கட்டப்பட்டது என்பது வெறும் நம்பிக்கை என்பதை நிரூபிப்பதற்கான குழுவில் ஆர்யனை இடம்பெறச் செய்கிறது இந்திய அரசு.

ஆனால், அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள், அவரது எண்ணத்தை மாற்றுகின்றன. ஆர்யனின் நிலைப்பாட்டில் ஆத்திரமடையும் இந்திரகாந்த், அவரைக் கொல்ல ஆட்களை ஏற்பாடு செய்கிறார்.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அக்டோபர் 25ஆம் தேதி இந்தப் படம் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

"வாட்ஸ்அப் ஃபார்வர்டு தகவல்கள் நிறைந்த படம்"

"வாட்ஸ்அப் ஃபார்வர்ட்களோடு விஷுவல் எஃபக்ட்ஸைக் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் படம் இது" என கடுமையாக விமர்சித்திருக்கிறது 'ஸ்க்ரால்' இணையதளம்.

"ஆர்யன் பாத்திரம்தான் கிட்டத்தட்ட ஒரு கடவுளின் பாத்திரத்தைப் போல வருகிறது. ஆர்யனுக்கு உதவும் உள்ளூர் மீனவராக சத்யதேவ் நடித்திருக்கிறார். அது கிட்டத்தட்ட ஹனுமனுக்கு நிகரான பாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆர்யனின் மனைவியாக நுஷ்ரத் பருச்சாவும் சுற்றுச்சூழல் விஞ்ஞானியாக ஜாக்குலின் ஃபெர்ணாண்டசும் நடித்திருக்கின்றனர்.

மதசார்பற்ற அறிவுக்கு மேல், மத நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று சொல்லும் இந்தப் படத்தில் தர்க்கத்திற்கோ, அடிப்படையான அறிவிற்கோ இடமில்லை.

1981ல் யாழ்ப்பாணத்தில் பொது நூலகம் கொளுத்தப்பட்டது, பாமியானில் புத்தர் சிலை தகர்க்கப்பட்டது பற்றியெல்லாம் மிகவும் தொந்தரவுக்குள்ளாகிறார் ஆர்யன். ஆனால், 1992ல் இந்தியாவில் ஒரு பழமையான சின்னம் இடிக்கப்பட்டது பற்றி சொல்வதற்கு ஆர்யனிடம் ஏதுமில்லை" என்கிறது ஸ்க்ரால் இணையதளத்தின் விமர்சனம்.

சஸ்பென்ஸ் இல்லாத படம்

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

படத்தின் முடிவில் என்ன வரப்போகிறது என்பதை முதல் காட்சியிலேயே சொல்லி விடக்கூடிய படங்களில் வரிசையில் வந்திருக்கும் படம்தான் இந்த 'ராம் சேது' என்கிறது 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் விமர்சனம்.

"பற்பசை விளம்பரத்தில் வெள்ளைக் கோட்டுகளை அணிந்துகொண்டு, தங்களுடைய பற்பசையைத்தான் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்று வருமே, அதுபோலத்தான் இந்த 'ராம் சேது' திரைப்படம் இருக்கிறது.

'இந்த டாக்டர் சொல்வதைக் கேளுங்க' என அந்த பற்பசை அறிவியல் ரீதியாக எவ்வளவு பயனுள்ளது என்று விளக்குவார்கள்.

'ராம் சேது'வும் அதையே செய்கிறது. விஞ்ஞானிகள், சுற்றுச்சூழலியலாளர்கள், தொல்லியலாளர்கள் என படத்தில் வரும் எல்லோருக்கும் ஒரே நோக்கம்தான் - ஸ்ரீ ராமரும் ராமர் பாலமும் புராணங்கள் அல்ல, வரலாற்றின் ஒரு பகுதி என்று ஏற்றுக்கொண்டு, அதைப் பரப்புவது. இந்தப் பாத்திரங்கள் எல்லாம், கலாச்சாரம், பண்பாட்டைவிட அறிவிலையே அதிகம் நம்புபவர்களாக காட்டப்படுவதால், இவர்கள் 'பக்தர்கள்' இல்லை என்றும் படத்தில் எந்த சாய்வும் இல்லையென்றும் சொல்ல விரும்பியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முதல் காட்சியிலேயே, முடிவாக என்ன சொல்லப்போகிறார்கள் என்று உங்களால் கணிக்கக்கூடிய படம்தான் 'ராம் சேது'. எளிதில் ஊகிக்கக்கூடிய, வெளிப்படையான கருத்துகளை திரிக்க நினைக்கும் படம் இது. நோக்கத்தை விட்டுவிட்டு, ஒரு புராண சாகச படம் என்று வைத்துக் கொண்டால் கூட, மிகவும் சோர்வளிக்கக்கூடிய, நம்ப முடியாத படம்.

உணவுக்கு ஆர்டர் செய்தால், அந்த உணவு வழங்கப்பட எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட குறைவான நேரத்தில் மறைந்திருக்கும் குகைகள், மிதக்கும் பாறைகள், பழங்கால சுவடிகள், சஞ்சீவினி, ராவணனின் இலங்கை என எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறார்கள் இந்தப் படத்தில் வரும் பாத்திரங்கள்.

அயர்ன் மேனைப் போல நீருக்குள் செல்வதற்காக விசேஷ ஆடைகளை எல்லாம் அணிந்து அக்ஷய் குமார் ஏதோ செய்ய முயற்சித்தாலும் அது எந்த ஆர்வத்தையும் ஏற்படுத்துவதில்லை. படம் நகர்வதே மிக மோசமாக இருக்கும் நிலையில், க்ளைமேக்ஸ் படுமோசமாக இருக்கிறது. நீதிமன்றத்தில் நடக்கும் க்ளைமேக்ஸ் காட்சியில் 'கலாச்சாரத்தைப் பலிகொடுத்து வளர்ச்சி தேவையில்லை' என்கிறார்.

புராணத்தை வரலாறாக மாற்றும் முயற்சியில் ஸ்ரீ ராமருக்கும் அவர் பற்றிய நம்பிக்கைகளுக்கும் எதிராகச் செயல்படுகிறது படம். சில துரத்தல் காட்சிகளைத் தவிர, இந்தப் படத்தில் நல்ல காட்சிகள் ஏதும் இல்லை. நிறைய பாடம் நடத்திக் கொண்டேயிருக்கிறார்கள்" என விமர்சித்திருக்கிறது 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் விமர்சனம்.

'இந்தியா டுடே' இணைய தளமும் இந்தப் படம் குறித்து கடுமையான விமர்சனங்களையே முன்வைத்திருக்கிறது.

ஹீரா அறிமுகத்துக்கு அதிக முயற்சி

ராம் சேது படம்

பட மூலாதாரம், LYCA

"'பட உருவாக்கத்தில் எந்த மிருகமும் துன்புறுத்தப்படவில்லை' என படத்தின் துவக்கத்தில் சொல்கிறார்கள். படம் முடிந்து வெளியில் வரும்போது நம்முடைய மூளை செல்களுக்கும் அப்படிச் சொல்ல முடிந்தால் நன்றாக இருந்திருக்கும்.

படத்தின் முதல் பாதிக்கும், படத்தின் கதைக்கும் சம்பந்தமே இல்லை. ஹீரோ எப்படிப் பட்டவர் என்பதைக் காண்பிக்க முதல் அரை மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். ஹீரோ உண்மையையே தேடுவார். அவரை யாராலும் குழப்பவோ, ஏமாற்றவோ முடியாது. இதைச் சொல்லத்தான் இந்த அரைமணி நேரம்.

'அறிவியல் முடிந்து நம்பிக்கை எங்கே பிறக்கிறது' என ஒரு நல்ல கதையை கையில் எடுத்திருக்கிறார்கள். மிக புத்திசாலித்தனமாக, நம் சிந்தனையைத் தூண்டக்கூடிய விதத்தில் விவாதிக்க வேண்டிய ஒரு விஷயத்தை மிக மோசமான படமாக்கலின் மூலம் சிதைத்திருக்கிறார்கள். மதம், நம்பிக்கை என எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் போகப்போக மோசமாகிக்கொண்டே வருகின்றன. அதுவும் கடலுக்கடியில் வரும் காட்சிகள் எல்லாம் படுமோசம். ஒரு கட்டத்திற்குப் பிறகு, ஏதோ மீன் காட்சிச் சாலைக்குள் இருப்பதைப் போல இருக்கிறது. ஒரு பெரிய சுழற் நாற்காலியில் அமர்ந்து சுற்றிக்கொண்டேயிருக்கக்கூடிய, நடிக்க வாய்ப்பே இல்லாத பாத்திரத்தை ஏன் நாசர் ஏற்றுக்கொண்டார்? ஆர்யனின் மனைவியாக வரும் காயத்ரி ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. அவரை ஏன் கணவர் ஆர்யன் புரொஃபசர் என்று அழைக்கிறார்?

படத்தின் இசை மட்டும் சற்றுப் பரவாயில்லை. தவிர, அக்ஷய் குமார் இறுதியாக தன் வயதுக்கேற்ற ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவ்வளவுதான்" என விமர்சித்திருக்கிறது இந்தியா டுடே.

காணொளிக் குறிப்பு, பிரின்ஸ் திரைப்படம் தடுமாறுகிறதா? சுவாரஸ்யமாக உள்ளதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: