ஜி.பி.முத்து: பிக் பாஸ் வீட்டிலிருந்து மகனுக்காக பாதியில் வெளியேறிய ஜி.பி.முத்து - மீண்டும் வர வாய்ப்புண்டா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 ஆரம்பமானதிலிருந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பெரும் ஆதரவையும் தொடர்ந்து ட்ரெண்டிங்கிலும் இருந்து வந்த ஜி.பி.முத்து, உடல்நலம் சரியில்லாத தன் மகனை காண வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் வீட்டிலிருந்து தன் விருப்பத்தின்பேரில் போட்டியின் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

டிக்டாக், பின்னர் யூடியூப் என சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து, தன் இயல்பான பேச்சு, அப்பாவித்தனம் காரணமாக பிக் பாஸ் வீட்டிலும் இணைய உலகிலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டவர். இவருக்கு சமூக வலைதளங்களில் 'ஜி.பி.முத்து ஆர்மி' போன்ற பக்கங்களையும் அவரது ரசிகர்கள் உருவாக்கினர். அதில், இந்த சீசனை பார்ப்பதற்கே ஜி.பி.முத்துதான் காரணம் என்பது போன்ற ட்வீட்டுகளை அவர்கள் பதிவிட்டனர்.

முதல் வாரத்திலேயே கமல்ஹாசனிடமிருந்து அதற்கான பாராட்டையும் பெற்றார். "நான் உட்பட உங்களின் ரசிகன் தான்" என கமல்ஹாசன் கூறியிருந்தார். பிக் பாஸை 'பிக் பாக்ஸ்' என அழைப்பது, ஆதாம் - ஏவால் என்றால் யார் என கேட்டது என அவருடைய பேச்சுக்கள் வீட்டில் கலகலப்பை ஏற்படுத்தின.

பிக் பாஸ் வீட்டின் தலைவருக்கான போட்டியில் கலந்துகொண்டு வீட்டின் முதல் தலைவராகவும் ஆனார். இது மற்ற போட்டியாளர்களுக்கு ஜி.பி.முத்து எவ்வளவு வலுவான போட்டியாளர் என்பதை உணர்த்தியது.

ஆடல், பாடல், இயல்பான பேச்சு என இருந்த ஜி.பி.முத்து, கடந்த வாரத்தில் பெரும்பாலும் தன் மகன் குறித்தே வீட்டில் பேசிக்கொண்டிருந்தார். உடல்நலம் சரியில்லாத தன் மகனைக் காண வேண்டும் என்றும் அதற்காக இங்கிருந்து செல்ல வேண்டும் என்றும் சக போட்டியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதனால், போட்டியாளர்கள் தங்களின் கதைகளைக் கூறும் போட்டியிலும், தன் கதையை முழுமையாக முடிக்க விடாமல் 'பஸ்சரை' அழுத்துமாறு அவரே சக போட்டியாளர்களை கேட்டுக்கொண்டார். பிக் பாஸும் சில முறை ஜி.பி.முத்துவை 'கன்ஃபெஷன்' அறைக்கு அழைத்து, அவருடைய மகன் நலமாக இருப்பதாகவும் கவலையில்லாமல் வீட்டில் இருக்குமாறும் சமாதானப்படுத்தினார்.

இருந்தாலும், தொடர்ந்து கவலையுடனேயே இருந்தார் ஜி.பி.முத்து. இந்நிலையில், நேற்று, சனிக்கிழமை நிகழ்ச்சியின் முடிவில் கமல்ஹாசன் ஜி.பி.முத்துவை 'கன்ஃபெஷன்' அறைக்கு அழைத்து அவருடைய முடிவை கேட்டார். அப்போது, தன் மகனுக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் தான் இல்லாமல் மகன் இருக்க மாட்டான் என்றும் கண்கலங்கியபடி கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியால் வரும் புகழைவிட குடும்பமே முக்கியம் என கூறினார் ஜி.பி.முத்து.

இதையடுத்து, போட்டியாளரின் உணர்வுகள் முக்கியம் எனக்கூறி பிக் பாஸ் வீட்டிலிருந்து ஜி.பி.முத்து வெளியேறலாம் என தெரிவித்தார் கமல்ஹாசன். இதனால் வருத்தமடையும் அவருடைய ரசிகர்களுள் தானும் ஒருவன் என்றும் கூறினார் கமல். இதன்பின், தனக்கு ஆதரவளிப்பவர்களிடம் மன்னிப்பு கோரிய ஜி.பி.முத்து நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

மகனுக்காக ஜி.பி.முத்து வீட்டிலிருந்து வெளியேறியதை சக போட்டியாளர்களிடம் கமல் தெரிவித்தபோது, அவர்கள் அனைவரும் எழுந்துநின்று கைதட்டி ஜி.பி.முத்துவை பாராட்டினர். சிலர் வருத்தம் அடைந்தனர்.

இதற்கு முன்பு, பிக் பாஸ் சீசன் 3-ல் வனிதா விஜயகுமார் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், சில வாரங்கள் கழித்து, வைல்டு-கார்டு என்ட்ரி மூலம் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளராகத் தொடர்ந்தார். அதேபோல ஜி.பி. முத்து மீண்டும் வருவாரா என்று இனி வரும் வாரங்களில் தெரியும்.

ட்விட்டரில் பலரும் ஜி.பி.முத்துவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஜி.பி.முத்து பிக் பாஸ் பட்டத்தை வெல்லாவிட்டாலும், அவர் பலரின் இதயங்களை வென்றுவிட்டதாக ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பணம், புகழைவிட குடும்பமே பெரிது என்பதை ஜி.பி.முத்து உணர்த்திவிட்டதாக வேறொரு பதிவர் பதிவிட்டுள்ளார்.

இன்னும் சிலர் ஜி.பி.முத்து பாதியில் வெளியேறியதன் மூலம், அவருடைய இடத்தில் வேறொரு போட்டியாளரின் வாய்ப்பையும் அவர் பறித்துக்கொண்டதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

யார் இந்த ஜி.பி.முத்து?

உடன்குடியைச் சேர்ந்த ஜிபி முத்து, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் வசிப்பவர். டிக்டாக் இருந்த காலகட்டத்தில், அதில் செய்த வீடியோக்கள் மூலம் பிரபலமான ஜிபி முத்து, டிக்டாக் தடைசெய்யப்பட்ட பிறகு, யூடியூபில் வீடியோக்கள் மூலம் தனது ரசிகர்களிடம் தொடர்புகொள்ள ஆரம்பித்தார்.

குறிப்பாக, அவருக்கு வந்து குவியும் கடிதங்களை அவர் படிக்கும் வீடியோக்கள், ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவை. மேலும், சன்னி லியோன் நடிக்கும் 'ஓ மை கோஸ்ட்' எனும் திரைப்படத்திலும் ஜி.பி.முத்து நடித்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: