You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாக்டீரியாவில் இருந்து நகைகளை உருவாக்கிய டிக்டாக் கலைஞர்
- எழுதியவர், கேட்டி ஸ்காட்
- பதவி, பிபிசி
தன் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பாக்டீரியாவில் இருந்து நகைகளை உருவாக்கிய ஒரு ஸ்காட்லாந்து கலைஞர் டிக்டாக் செயலியில் வைரலாகியுள்ளார்.
க்ளோ ஃபிட்ஸ்பாட்ரிக் என்பவர் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ள வீடியோக்களை லட்சகணக்கானவர்கள் பார்த்துள்ளனர்.
அவரது உடலின் தோலில் இருந்தும் தாவரங்களில் இருந்தும் எடுக்கப்பட்ட பாக்டீரியாக்கள் வண்ணங்களாக மாற்றப்பட்டு, அவை பிசினில் உருவாக்கப்படும் நகைகளுக்கு சாயம் பூச பயன்படுதப்பட்டன.
"பாக்டீரியாக்கள் ஒரே மாதிரி மொத்தமாக இருக்கும். ஆனால், நான் அவற்றின் அழகை வெளிப்படுத்தியுள்ளேன்," என்கிறார் 21 வயதான க்ளோ ஃபிட்ஸ்பாட்ரிக் . இவர் ஸ்காட்லாந்தின் போனெஸ் நகரை சேர்ந்தவர்.
இவரின் கடைசி பாக்டீரியா நகை வடிவமைப்பானது ஆராய்ச்சி மற்றும் கல்வி உதவித் தொகைக்கான பங்களிப்புக்கான சிறந்த படைப்புக்கான அங்கீகாரமான சர் ஜேம்ஸ் பிளாக் விருதை அவருக்குப் பெற்றுத்தந்தது.
க்ளோ தனது வடிவமைப்பு பயணத்தை, டிக்டாக்கில் தன்னை பின் தொடரும் 1,06,000 பேரிடம் பகிர்ந்திருந்தார். அதில் சில வீடியோக்கள் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்திருக்கின்றன.
"இது ஒரு வித்தியாசமான யோசனை என்பதால், எனது வீடியோக்கள் பெரும் எண்ணிக்கையிலான பார்வைகளைப் பெற்றிருப்பதாக நினைக்கின்றேன்," என்று கூறுகிறார் க்ளோ.
"பாக்டீரியாவை, தீவிரமான ஆர்வத்துடன் மக்கள் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய வீடியோக்கள் ஒரு புதிய கண்ணோட்டத்துக்கு திறப்பாக அமைந்துள்ளது."
க்ளோ தனது உடலின் பாகங்களில் இருந்து அல்லது தாவரங்களில் இருந்து பாக்டீரியா மாதிரியை எடுக்கிறார். அந்த மாதிரியை, 'அகர்' என்று அழைக்கப்படும் மெல்லிய கண்ணாடி குடுவையில் வைக்கிறார்.
பாக்டீரியா மாதிரிகள் மூடப்பட்டு, அறை வெப்பத்தில் ஒரு வாரத்துக்கு வைக்கப்படும். அப்போது பாக்டீரியா கூட்டங்கள் பல வண்ணங்களாக பல்கிப் பெருக அனுமதிக்கப்படுகிறது.
அதன்பின்னர், குறிப்பிட்ட வண்ணத்தை தனிமைப்படுத்தி, புதிய குடுவையில் வைத்து மேலும் அதனை அதிக எண்ணிக்கையில் அவர் உருவாக்குகிறார்.
இந்த வண்ணங்கள் சாயப் பொருட்களாக பருத்தித் துணிகள் அல்லது பிசின் நகைகளில் நிலைத்திருக்கும்.
"நீங்கள் உங்கள் கைகள் மற்றும் கால்களை 'அகர் ப்ளேட்ஸ்' எனப்படும் தட்டுகளில் அழுத்தும்போது நீங்கள் பல்வேறு விதமான சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணங்களைப் பெற முடியும். ஒவ்வொருவரின் பாக்டீரியாவும் வித்தியாசமாக இருக்கும். வித்தியாசமாக வளரும்," என்றார் க்ளோ.
ஜவுளித்துறையில் உபயோகிக்கப்படும் பாரம்பரியமான சாயம் சேர்க்கும் முறையை விடவும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இந்த முறை திகழும் என்கிறார் க்ளோ.
"ஜவுளித்துறையில் தீங்களிக்கும் பல ரசாயனங்களை சாயமாக உபயோகிக்கின்றனர். பாக்டீரியாவை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக தற்போதைய முறைக்கு மாற்றாக பயன்படுத்தலாம். விரைவாக அதிக எண்ணிக்கையில் உருவாக்கலாம். நீங்கள் புதிய வகை வண்ணங்களைப் பெற முடியும்," என்கிறார் அவர்.
க்ளோ பெரும்பாலும் மோதிரங்களை உருவாக்குகிறார். இது தவிர பிசினால் உருவாக்கப்படும் ஆபரணக் கற்களுக்கும் பாக்டீரியா சாயத்தை உபயோகிக்கிறார் இவர்.
ஒவ்வொரு மாதிரியும் நாம் நினைக்கும் வகையில் முடிவை கொடுப்பதாக இருக்காது. ஆனால், பாக்டீரியாக்கள் எப்படி வளர்கின்றன என்பதை அவர் அறிகிறார்.
மனிதர்களின் உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள், குறிப்பாக தோலில் இருந்து எடுக்கப்படும் பாக்டீரியா பல வண்ணங்களைக் கொண்டது.
"ஆகவே மனித உடலில் உள்ள பாக்டீரியாக்கள் இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் என வண்ணங்களைக் கொண்டிருக்கும். தாவரங்கள் அதே வண்ணங்களை வெளிப்படுத்துகின்றன. அதில் பொதுவாகக் குறைந்த அளவில்தான் பாக்டீரியாக்கள் இருக்கின்றன.''
இந்த சோதனைகளை முறைப்படுத்தி பாதுகாப்பாக மேற்கொள்ளும் பணியின்போது டண்டீ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளுடன் க்ளோ பணியாற்றினார்.
"பாக்டீரியா அழிக்கப்பட்டுவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் வரை ஒவ்வொன்றும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டது," என்றார் க்ளோ.
"கலை மற்றும் அறிவியல் இணைந்த பயோ-ஆர்ட் இயக்கத்தில் நான் பங்கெடுக்க விரும்புகின்றேன். கலை உலகம் அந்த திசையில் பயணிக்கும் என்று நான் நம்புகின்றேன். அதில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல சாத்தியங்கள் நிறைந்துள்ளன."
கஜகஸ்தானின் நுர் சுல்தானில் உள்ள குலான்ஷி கலை மையத்த்தில் பயோ-ஆர்ட் கண்காட்சியாக இப்போது அவரது சில படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
டண்டீ பல்கலைக்கழகத்தில் லைஃப் சயின்ஸ் பிரிவின் வெளியே அமைக்கப்பட்டுள்ள மருத்துவ தோட்டத்தில் வைப்பதற்காக பாக்டீரியா உயிர்ப்புடன் கூடிய சிலையை உருவாக்கும் பணியில் தற்போது க்ளோ ஈடுபட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்