You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேயிலை தோட்டத்தில் ஒரு பாட்டுக்குயில் - களைப்புக்கு மருந்தாகும் ரெஜினாவின் குரல்
- எழுதியவர், சுதாகர் பாலசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
உழைப்பின் களைப்பை மீறி, அட்டைப்பூச்சி கடி, கடும்மழை, வனவிலங்குகள் என பல பிரச்சனைகளை தாண்டி குளிர்ந்த காற்றோடு, செவிக்கு இதமாக பயணிக்கிறது ரெஜினா லூகாஸின் குரல்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ரெஜினா( 48). இவர் கோத்தகிரி பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்ட தொழிலாளியாக 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் லூக்காஸ் (53) ஆசாரியாக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு திருமணம் முடிந்த மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.
சிறுவயதில் 'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் வரும் என் ராசாவே என்ற பாடல்களை கேட்டபோதே, தன்னையறியாமல், திரும்பத் திரும்ப பாடியுள்ளார். எந்த வேலையாக இருந்தாலும், பாட்டு பாடிக்கொண்டே செய்வது ரெஜினாவின் வாடிக்கை.
இதனால் தேயிலை தோட்டத்தில், தேயிலை பறிக்கும்போது ரெஜினா பாடல்களை தொடர்ந்து பாடுவது வாடிக்கையானது. இதனால், உழைப்பின் களைப்பு, தெரியாமல் பணியாற்ற மற்ற தொழிலாளர்களுக்கு உதவுகிறது.
தினமும் கடவுள் பாடலில் தொடங்கிய இவரது பயணம், சினிமா பாடல்களில் முடிகிறது.
இசையை முறையாக கற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்றாலும், கேள்வி ஞானத்தால் தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டு, தமிழ் , மலையாளம், ஹிந்தி, படுக மொழிகளில் அச்சுப்பிசகாமல் பாடுவது இவரின் தனிச்சிறப்பு.
தேயிலை தோட்டத்தைச் சுற்றி பார்க்க வந்தவர்கள், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து என்ற பாடலை ரெஜினா பாடுவதை கேட்டு மகிழ்ந்துள்ளனர். அவரை பாராட்டியதோடு வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அது தற்போது வைரலாகி, திரைப்பட பாடகராக வேண்டும் என்ற அவரது கனவு நனவாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி ரெஜினா கூறுகையில், "சிறுவயதில் இருந்தே, இசையின் மீது தனக்கு ஆர்வமும், பி.சுசிலா அவர்களின் மீது பற்றும் ஏற்பட்டது. வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு போனப்ப அதில் வரும் அழகு மலராட , ராசாவே ஆகிய இரு பாடல்கள் பிடித்திருந்ததால், அதை பாடிக்கொண்டே இருந்தேன்," என்கிறார்.
"பாடிப்பழக எங்கேயும் போய் மியூசிக் கற்றுக்கொள்ளவில்லை. கேள்வி ஞானத்தின் மூலம் பாடல்களை கற்றுக்கொண்டு வீட்டு விசேஷங்கள் மற்றும் ஆலய வழிபாடுகள் ஒரு சில மேடை கச்சேரிகளில், பாடியுள்ளேன்."
"மேடை கச்சேரிகளில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால்,இசையில் பெரியளவில் வெற்றி பெற முடியவில்லை.பல முறை வாய்ப்பு தேடியும், உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் சிட்டுக்குருவி பாடல் என் குடும்பத்தார், நண்பர்கள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது எனக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது இசை பயணத்திற்கு கணவர் வழிகாட்டுவதாகவும், உச்சரிப்பு, ஏற்ற இறக்கங்கள், பாடும் போது உள்ள குறைகளை சுட்டிக்காட்டி என்னை மெருகேற்றுகிறார். வாழ்க்கையில் மட்டுமல்ல, 'இசையிலும்' அவர்தான், எனக்கு குரு என்றார்.
வேலை பளுவுக்கு இடையில், உழைப்பின் களப்பை மறந்து, சக தொழிலாளர்களுக்கு உற்சாகத்தை அளிக்கவும், தனது மனதை ஆறுதல் படுத்திக்கொள்ள பாடல்களே, மருந்தாக அமைவதாக தெரிவித்தார்.
உணவு கூட வேண்டாம், பாட்டு இருந்தாலே போதும், பாட்டுதான் என் உலகம் என ரெஜினா பேசும்போது அவரது முகம் பிரகாசிக்கிறது.
தன்னைவிட தன் மனைவி இன்றும் மிக அழகாக பாடல்களை பாடுவார் எனவும், தனது மனைவிக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார் லூகாஸ்.
இது குறித்து தேயிலைத் தோட்ட சக பணியாளர் ஷீலா கூறுகையில், "பத்து வருடமாக தேயிலைதோட்டத்தில் ரெஜினா அக்காவோடு வேலை செய்கிறேன். நல்லா பாட்டு பாடுவாங்க.
அவங்க பாடினால் எங்க கஷ்டம் எல்லாம் மறந்து போகும். அட்டை கடி, மழை, காட்டெருமை தொந்தரவு என எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும்,அவுங்கள பாட்டு பாடச்சொல்லி சந்தோஷமாக வேலை செய்வோம். அவுங்களுக்கு நிறைய கஷ்டம் இருக்கிறது. அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டாங்க. நாங்க பாடுங்கன்னு சொன்ன உடனே எல்லாத்தையும் மறந்து படுவாங்க. அவுங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தால் எங்களுக்கு சந்தோஷம்," என்றார்.
ரெஜினாவோடு வேலை செய்யும் சக தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும், அவரின் குரல், திரைத்துறையில் ஒலிக்க வேண்டும் என்ற அவர்களின் பிரார்த்தனை விரைவில் நிறைவேற, நாமும் வாழ்த்துவோம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்