பொன்னியின் செல்வன்: கதைச் சுருக்கம் - பாகம் 2

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

(இது கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' மூலக் கதையின் சுருக்கம்.)

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்த ஒரு பிரம்மாண்டமான படைப்பு. புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களையும் 300க்கும் மேற்பட்ட அத்தியாயங்களையும் கொண்டது. கல்கி இதழில் 1950 அக்டோபர் 29ஆம் தேதி இந்தத் தொடர் துவங்கியது.

இலங்கையிலிருந்து அருள்மொழிவர்மனை அழைத்துவர பழுவேட்டரையர் அனுப்பிய கப்பல்களில் ஒன்று கரைதட்டிவிட, மற்றொன்று புயலில் சிக்குகிறது. அந்தக் கப்பலில் இருந்து ஒரு படகில் அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் தப்புகிறார்கள். கடலில் தத்தளித்த அவர்களை பூங்குழலி காப்பாற்றுகிறாள் என்பதை கடந்த பாகத்தில் பார்த்தோம். தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

துறைமுகப்பட்டினமான நாகப்பட்டனத்திற்கு இளவரசன் அருள்மொழிவர்மன் வந்துசேர்ந்தால், அவரை வரவேற்று அழைத்துக் கொண்டு தஞ்சாவூருக்குச் செல்லலாம் என நினைத்து பெரிய பழுவேட்டரையரும் நந்தினியும் வந்திருந்தனர். ஆனால், புயல் வீசியதால் தான் அனுப்பிய கப்பல்கள் என்ன ஆனதோ எனத் திகைத்து நின்றுகொண்டிருந்தார்.

அப்போது வேறொரு கப்பலில் வந்த பார்த்திபேந்திரன் ஒரு படகு மூலம் கரைக்கு வந்து இறங்கி, பழுவேட்டரையரை சந்தித்து கப்பல்களுக்கு நேர்ந்த கதியை விவரித்தான். இளவரசனின் கதியும் வந்தியத்தேவனின் கதியும் தெரியவில்லை என்றான் பார்த்திபேந்திரன். இதைக் கேட்ட பழுவேட்டரையர் மனம் கலங்கிப்போனார்.

இந்த நேரத்தில், நந்தினியை சந்தித்த பார்த்திபேந்திரன் அவள் அழகில் சொக்கிப் போனான். பார்த்திபேந்திரனிடம் பேசிய நந்தினி, ஆதித்த கரிகாலனை எப்படியாவது கடம்பூருக்கு வரவழைக்க வேண்டுமென்றாள். அவனை அங்கே வரவழைத்து, சம்புவரையர் மகளை அவனுக்குத் திருமனம் செய்துகொடுத்துவிடலாம் என்றும் சோழப் பேரரசை அதற்குப் பிறகு, இரண்டாகப் பிரித்து ஆதித்த கரிகாலனுக்கும் மதுராந்தகனுக்கும் கொடுத்துவிடலாம் என்றும் சொன்னாள். அதற்கு பார்த்திபேந்திரன் ஒப்புக்கொண்டான்.

இதற்கிடையில் பூங்குழலியின் படகில் வந்தியத்தேவனும் அருள்மொழி வர்மனும் வேறு பாதையில் கோடிக்கரை வந்தனா். இளவரசருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால், குந்தவை சொல்லி அனுப்பியபடி நாகப்பட்டனம் சூடாமணி விகாரைக்கு கொண்டு சென்றனர். இளவரசருக்கு நாகப்பட்டனம் சூடாமணி விகாரையின் தலைமை பிக்குவே சிகிச்சை அளித்தார்.

இதற்குப் பிறகு வந்தியத்தேவன் குந்தவையைப் பார்ப்பதற்காக பழையாறையை நோக்கிச் சென்றான். அப்படிப் போகும் வழியில் சிலர் அவனை மடக்கி நந்தினியின் முன்பாக நிறுத்தினார்கள். நந்தினி அவனிடம் கொடுத்த முத்திரை மோதிரத்தை திரும்பக் கேட்டாள். அதனை இலங்கையில் தளபதி பறித்துக்கொண்டுவிட்டதாகச் சொன்னான் வந்தியத்தேவன்.

இதையடுத்து, இலங்கையில் வந்தியத்தேவன் சந்தித்த வாய்பேச முடியாத பெண்மணியான மந்தாகினியை மீண்டும் எங்காவது பார்த்தால் தன்னிடம் கூட்டிவர வேண்டுமென வந்தியத்தேவனிடம் சொன்னாள் நந்தினி. மேலும், கந்தமாறனை முதுகில் குத்த உத்தரவிட்டது பழுவேட்டரையர் என்பதையும் சொன்னாள். இதற்குப் பிறகு, வந்தியத்தேவன் தன்னிடம்தான் முத்திரை மோதிரம் இருப்பதாகச் சொன்னான். ஆனால், அந்த மோதிரத்தை அவனையே வைத்துக்கொள்ளச் சொன்ன நந்தினி, மீண்டும் அவனை கடத்தப்பட்ட இடத்திலேயே இறக்கிவிடும்படி வீரர்களிடம் சொன்னாள்.

அங்கிருந்து பழையாறையை வந்தடைந்த வந்தியத்தேவன், எப்படி கோட்டைக்குள் புகுவது என்று யோசித்தான். அப்போது மதுராந்தகர் ரதத்தில் வந்துகொண்டிருந்தார். அவரிடம் தன்னை ஒரு ஜோசியக்காரன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட வந்தியத்தேவன், அவர் மூலமாகவே கோட்டைக்குள் புகுந்தான்.

பிறகு ஆழ்வார்க்கடியானுடன் சேர்ந்து குந்தவையை சந்தித்த வந்தியத்தேவன், சூடாமணி விகாரையில் அருள்மொழிவர்மன் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவரை பூங்குழலியும் சேந்தன் அமுதனும் கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்தான்.

இதற்கிடையில் மக்கள் அரண்மனை முன்பாகக் கூடி அருள்மொழி வர்மன் இறந்திருக்கலாம் எனக் கூச்சலிட்டார்கள். ஆனால், செம்பியன் மாதேவியும் குந்தவையும் அவர் காப்பாற்றப்பட்டிருக்கக்கூடும் என்பதைத் தெரிவித்தார்கள். கூட்டத்திலிருந்த வந்தியத்தேவனை கண்ட வைத்தியரின் மகன், 'ஒற்றன்' என்று குற்றம்சாட்டவும் இருவரும் சண்டைபோட ஆரம்பித்தார்கள். இதைக் கண்ட அநிருத்தர், இருவரையும் கைதுசெய்ய உத்தரவிட்டார்.

இதற்கிடையில் மதுராந்தகரைச் சந்தித்த அவரது தாய் செம்பியன் மாதேவி, அவனை சிவபக்தராக வளர்க்கவே தானும் அவருடைய தந்தையும் ஆசைப்பட்டதாகவும் பழுவேட்டரையர் அவருடைய மனதை மாற்றிவிட்டதாகவும் கூறினார். ஆனால், இதை மதுராந்தகர் கேட்கவிரும்பவில்லை. தாயையே தகாத வார்த்தைகளால் பேசிவிட்டு வெளியேறினார்.

குந்தவையும் அநிருத்தரும் சந்தித்துப் பேசிய பிறகு, வந்தியத்தேவனை ஆதித்த கரிகாலனிடம் அனுப்பி, அவன் கடம்பூருக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று சொன்னார் அநிருத்தர். சிறையிலிருந்த வந்தியத்தேவனை சந்தித்த குந்தவை, அவனைக் காதலிப்பதாகத் தெரிவித்தாள். பிறகு ஆதித்த கரிகாலனை சந்தித்து, அவனுடனேயே இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டாள்.

அடுத்த நாள் அநிருத்தர் கொடுத்த ஓலையை எடுத்துக்கொண்டு, ஆழ்வார்க்கடியானுடன் சேர்ந்து காஞ்சிபுரத்திற்குப் புறப்பட்டான் வந்தியத்தேவன். போகும் வழியில் குடந்தை ஜோதிடர் வீட்டில் வானதியைச் சந்தித்தான் வந்தியத்தேவன். அவள் தனது தாத்தாவைப் பார்க்கப்போவதாக குந்தவையிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருந்தான். வந்தியத்தேவனைப் பார்த்த அவள், தான் பௌத்த மதத்திற்கு மாற விரும்புவதாகவும் தன்னை நாகப்பட்டனம் சூடாமணி விஹாரையில் சேர்ப்பிக்கும்படியும் கோரினாள் வானதி. ஆனால், தான் முக்கியமான வேலையாகச் சொல்லி அதை மறுத்துவிட்டான் வந்தியத்தேவன். இதற்குப் பிறகு அநிருத்தரின் ஆட்கள் அவளது பயணத்தைத் தடுத்து, மீண்டும் அவளைக் குந்தவையிடம் சேர்ப்பித்தனர்.

இந்தக் களேபரத்தில் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் பிரிந்துவிட, அமாவாசை இருட்டில் ஒரு மண்டபத்தைச் சென்றடைந்தான் வந்தியத்தேவன். அந்த மண்டபத்திற்குள் ஒரு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையோடு அவன் பேசிக்கொண்டிருந்தபோது ரவிதாசன் உள்ளிட்ட சதிகாரர்கள் அங்கே வந்துவிட்டனர். அவர்கள் வந்தியத்தேவனைப் பிடித்து கட்டிப்போட்டார்கள். சிறிது நேரத்தில் நந்தினியும் அங்கே வந்து சேர்ந்தாள். அந்தச் சிறுவனுக்கு பாண்டிய இளவரசனாக பட்டாபிஷேகம் நடந்தது. இவையெல்லாம் முடிந்த பிறகு, வந்தியத்தேவனை கொல்லாமல் விட்டுவிடலாம் என்று சொன்னாள் நந்தினி.

அவர்கள் புறப்பட்ட பிறகு ஆழ்வார்க்கடியான் வந்து வந்தியத்தேவனை விடுவித்தான்.

இதற்கிடையில் வானதியும் குந்தவையும் நாகப்பட்டனம் சென்று இளவரசனைச் சந்தித்தனர். இலங்கையில் உள்ள வாய்பேச முடியாத பெண்ணை தஞ்சைக்கு எப்படியாவது அழைத்துவர வேண்டுமென இளவரசனிடம் கூறினாள் குந்தவை. நந்தினியை வைத்து சுந்தரசோழரை எப்படி பயமுறுத்திவருகிறார்கள் என்பதையும் விவரித்தாள். பழுவேட்டரையர்களும் சில சிற்றரசர்களும் சேர்ந்துகொண்டு செய்துவரும் சதி பற்றியும் கூறினாள்.

காஞ்சிபுரத்திலிருந்து கந்தமாறன், பார்த்திபேந்திரனுடன் ஆதித்த கரிகாலன் கடம்பூரை நோக்கிப் புறப்பட்டான். ஆதித்த கரிகாலன் புறப்பட்டது தெரியாமல் காஞ்சிபுரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் கடம்பூர் பக்கமிருந்த ஐய்யனார் கோவிலில் தங்கினார்கள். அங்கிருந்த மண் யானைக்குக் கீழிருந்த சுரங்கத்தின் வழியாக கடம்பூர் அரண்மனைக்குள் சென்ற வந்தியத்தேவன், கந்தமாறனின் சகோதரி மணிமேகலையின் உதவியால், அரண்மனையின் மேல்மாடத்தைச் சென்றடைந்தான்.

அன்று இரவு ஆதித்த கரிகாலனும் கந்தமாறனும் அங்கே வருவதாக மணிமேகலை சொன்னாள். விரைவிலேயே வந்தியத்தேவனுடன் ஆழ்வார்க்கடியான் வந்து இணைந்துகொண்டான். பிறகு, அரண்மனைக்கு வெளியில் சென்று, ஆதித்த கரிகாலனைச் சந்தித்து அவனுடன் சேர்ந்துகொண்டான் வந்தியத்தேவன்.

பிறகு அரண்மனைக்கு வந்த ஆதித்த கரிகாலன், அங்கிருந்த அனைவரிடமும் குத்தலாகவே பேசினான். கந்தமாறனை தன் நண்பன் வந்தியத்தேவன் கத்தியால் குத்தவில்லை என்றும் சொன்னான். இதற்கிடையில், நந்தினியைச் சந்தித்த மணிமேகலை, தனக்கு வந்தியத்தேவன் மேல்தான் விருப்பம் என்றும் ஆனால், தன்னை ஆதித்த கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்கப்போகிறார்கள் என்றும் கூறினாள்.

கோடிக்கரையில் சேந்தன் அமுதனும் பூங்குழலியும் பேசிக்கொண்டிருந்தார்கள். பூங்குழலியைக் காதலிப்பதாக சேந்தன் அமுதன் சொன்னான். அதை அவள் ஏற்கவில்லை. அந்தத் தருணத்தில் மந்தாகினி அங்கு வந்தாள். ஆனால் இவர்கள் அவளை அழைத்ததும் ஓடத் துவங்கினாள். சிறிது நேரத்தில் அவளை வேறு யாரோ சிலர் மடக்கிப் பிடித்து, பல்லாக்கில் வைத்து தஞ்சைக்கு அழைத்துச் செல்லத் துவங்கினர்.

இந்த விவகாரம் குறித்து சக்கரவர்த்தியிடம் முறையிடலாம் என்று முடிவுசெய்த பூங்குழலியும் சேந்தன் அமுதனும் தஞ்சையை நோக்கிப் புறப்பட்டனர். வழியில் மழையின் காரணமாக பல்லாக்கு நின்றபோது, அந்த வழியாக வந்த பூங்குழலி சேந்தன் அமுதனும் வந்தனர். மந்தாகினிக்குப் பதிலாக பூங்குழலி பல்லக்கில் ஏறிக்கொண்டாள். மந்தாகினியை சேந்தன் அமுதன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

தஞ்சை அரண்மனையில் பல்லக்கில் வந்தது பூங்குழலி என்பதை அறிந்த அநிருத்த பிரம்மராயர் ஆச்சரியமடைந்தார். மந்தாகினி தனக்கு அத்தை என்பதை விளக்கினாள் பூங்குழலி. பிறகு, மந்தாகினியைக் காட்டுவதாகக் கூறி ஆழ்வார்க்கடியானை சேந்தன் அமுதன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் பூங்குழலி.

அவர்கள் சென்ற பிறகு, அங்கிருந்த குந்தவையிடம், தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டார் அநிருத்த பிரம்மராயர். "தன் மகன்களுக்கு ஆபத்துவரும் என்பதால்தான் மதுராந்தகருக்கு பட்டம் கட்ட விரும்புகிறா் சக்ரவர்த்தி. அவரிடம் ஒருமுறை அருள்மொழி வர்மனைக் காட்டிவிட்டாள் அவருடைய அச்சம் தீர்ந்துவிடும்" என்றாள் குந்தவை. அதேபோல, "தானும் மந்தாகினி உயிரோடு இருப்பதை சக்ரவர்த்தியிடம் தெரிவித்துவிட்டால் அவருடைய பயம் தீர்ந்துவிடும் என நினைத்ததாகவும் ஆனால், அதனை பூங்குழலி கெடுத்துவிட்டதாகவும்" குற்றம் சுமத்தினார் அநிருத்த பிரம்மராயர்.

அப்போது அங்கு வந்த பூங்குழலியும் ஆழ்வார்க்கடியனும், மந்தாகினியை கோட்டைக்கு அழைத்துவந்தபோது, கூட்டத்தோடு கலந்து காணாமல்போய்விட்டதாகத் தெரிவித்தனர். அந்தக் கூட்டத்தில் ரவிதாஸனைப் பார்த்துவிட்ட மந்தாகினி அவனால் ஏதாவது தீய காரியம் நடக்கக்கூடும் என்பதால் அவனைப் பின்தொடர்ந்தாள்.

அவனும் ரவிதாஸனும் ஒரு நிலவறை மூலமாக சுந்தர சோழரின் படுக்கை அறையை சென்றடைந்தார்கள். மூன்று நாட்கள் அந்த நிலவரையிலேயே காத்திருந்து, பிறகு வேல் எறிந்து சுந்தரசோழரைக் கொல்ல வேண்டுமென்றான் ரவிதாஸன். பிறகு சோமன் சாம்பவனை அங்கே விட்டுவிட்டு அவன் சென்றுவிட்டான்.

இதையெல்லாம் கவனித்த மந்தாகினி, இருள் சூழ்ந்ததும் சோமன் சாம்பவனை பயமுறுத்தி விரட்டிவிட்டு, அவர்கள் சென்ற நிலவறை வழியாகவே சுந்தர சோழரின் படுக்கை அறையைச் சென்றடைந்தாள். அப்போது அங்கே பூங்குழலி, அநிருத்தர் ஆகியோர் இருந்தனர். அநிருத்தர் சக்கரவர்த்தியிடம் எல்லா உண்மையையும் சொன்னார். அருள்மொழிவர்மன் பத்திரமாக இருப்பதை பூங்குழலி தெரிவித்தாள். பிறகு எல்லோரும் அங்கிருந்து சென்ற பிறகு, மந்தாகினி அங்கே வந்தாள்.

அவளைப் பார்த்ததும் அருகில் இருந்த உலோகப் பொருள் ஒன்றை அவள் மீது எறிந்தார். அவள் கத்திய சத்தம் கேட்டதும் அனைவரும் ஓடிவந்தார்கள். அப்போது குந்தவை, அவள்தான் மந்தாகினி என்றும் அவள் சாகவில்லையென்றும் கூறினாள்.

இதற்கிடையில், நந்தினி சில மந்திரவாதிகளைச் சந்திப்பதைப் பற்றியும் ஒரு சிறுவனை பாண்டிய இளவரசனாக மகுடாபிஷேகம் செய்ததைப் பற்றியும் அநிருத்தர் சொன்னார். நந்தினி மன்னருடைய மகளாகக்கூட இருக்கலாம் என்றும் சொன்னார்.

மந்தாகினி உயிருடன் இருந்தது மன்னருக்கு நிம்மதியை அளித்தது. ஆனால், மந்தாகினி தூங்கவில்லை. அன்று இரவு, பூங்குழலியும் மந்தாகியினியும் புறப்பட்டு சுரங்கத்தை அடைந்தனர். காலையில், அவர்களைக் காணாமல் மற்றவர்கள் தேடினர்.

இதற்கிடையில் கடம்பூரில் ஆதித்த கரிகாலன் தொடர்ந்து குதர்க்கமாகவே பேசிவந்தான். பிறகு ராஜ்யத்தை மதுராந்தகனுக்கே கொடுத்துவிடுவதாகவும் தான் படையெடுத்துச் செல்ல பொருளுதவி செய்தால் போதுமென்றும் சொன்னான். அதற்கு மன்னரைக் கேட்க வேண்டும் என பழுவேட்டரையர் சொன்னதும், அவரைக் கேட்டா அருள்மொழிவர்மனை சிறைப்பிடித்து வர ஆள் அனுப்பினீர்கள் என்று கேட்டான்.

இதற்குப் பிறகு தான் தஞ்சைக்குத் திரும்புவதாகச் சொன்னார் பழுவேட்டரையர். ஆனால், பழுவேட்டரையரை இழிவாகப் பேசியதற்காக தான் கடம்பூரிலேயே தங்கியிருந்து ஆதித்த கரிகாலனை பழிவாங்க விரும்புவதாகச் சொன்னாள் நந்தினி. பிறகு பழுவேட்டரையர் தஞ்சைக்குப் புறப்பட்டார்.

பிறகு ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், பார்த்திபேந்திரன், கந்தமாறன் ஆகியோர் வேட்டைக்குச் சென்றனர். அப்போது ஆற்றில் ஒரு படகில் நந்தினியும் மணிமேகலையும் இருப்பதைப் பார்த்தனர். ஆதித்த கரிகாலன் நந்தினியைச் சந்தித்து, அவள் தன்னுடைய சகோதரி என்றான். அவள் அதை ஏற்கவில்லை. அடுத்த நாள் நள்ளிரவு தன்னை அந்தப்புரத்தில் சந்திக்க வேண்டுமென வந்தியத்தேவனிடம் சொன்னாள் நந்தினி.

(தொடரும் - 2)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: