ஜீவி - 2: ஊடக விமர்சனம்

ஜீவி 2

பட மூலாதாரம், @ahavideoIN / Twitter

நடிகர்கள்: வெற்றி, மைம் கோபி, கருணாகரன், அஸ்வினி, ரோகிணி, ஜவஹர்; இயக்கம்: வி.ஜே. கோபிநாத்.

திரையரங்குகளில் வெளியான ஜீவி திரைப்படம், அதன் வித்தியாசமான கதை - திரைக்கதைக்காக கவனிக்கப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றது. சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது. இந்த நிலையில், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது Aha ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதற்கான விமர்சனங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

"ஜீவி முதல் பாகத்தை ரீவைண்ட் செய்தபடி தொடங்குகிறது கதை." என இந்தப் படத்தின் கதையைச் சொல்கிறது இந்து தமிழ் திசை நாளிதழின் விமர்சனம்.

"திருமணம் முடித்து மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் சரவணன் (வெற்றி). எந்த அளவுக்கு மகிழ்ச்சி என்றால் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தவர் கார் வாங்குகிறார், நண்பன் மணிக்கு (கருணாகரன்) டீக்கடை வைத்து தருகிறார். மனைவிக்கு கண் ஆபரேஷன் செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்.

எல்லாமே நன்றாக சென்று கொண்டிருக்கும்போது, தொடர்பியல் விதி தன் ஆட்டத்தை தொடங்க, சிக்கலும் கூடவே வந்து சேர்கிறது. பண நெருக்கடி, குடும்பம், வேலை என சிக்கல்கள் அடுக்க மீண்டும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார். இப்படியாக தொடரும் சிக்கல்களை எப்படி சமாளிக்கிறார், தொடர்பியல் விதியின் கோரத்தாண்டவத்திலிருந்து எப்படி மீண்டார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை." என்கிறது இந்து தமிழ் திசை.

முதல் பாகம் போலவே அடுத்து என்ன என்ற பரபரப்பை இந்த இரண்டாம் பாகமும் கொடுக்கும் என்று எதிர்பார்த்து உட்கார்ந்தால் சற்றே ஏமாற்றம்தான் ஏற்படுகிறது என்கிறது தினமலர் நாளிதழின் விமர்சனம்.

"முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் இல்லை. இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு கதையை அவசர கதியில் எழுதி படமெடுத்தது போல இருக்கிறது. தங்களுடன் நட்பாகப் பழகிய முபாஷிர் வீட்டிலேயே திருட முடிவெடுக்கிறார்கள் என்பது நெருடல். முதல் பாகம் வெற்றி மனதிலும், கருணாகரன் மனதிலும் ஆழமாகப் பதிந்துள்ளது போலிருக்கிறது. அதே நடிப்பை இந்தப் படத்திலும் அழுத்தம் திருத்தமாகத் தொடர்ந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் கூடுதலாக முபாஷிர் கதாபாத்திரம் இணைந்துள்ளது. பணக்கார நண்பன் எப்படி இருப்பாரோ அதை அப்படியே காட்டியிருக்கிறார். முதல் பாகத்தில் நடித்த ரோகிணி, மைம் கோபி ஆகியோருக்கு இந்த இரண்டாம் பாகத்தில் முக்கியத்துவம் உண்டு. இன்ஸ்பெக்டராக ஜவஹர் (நடிகர் நாசரின் தம்பி). உயரம் குறைவான ஒருவர் எப்படி போலீசில் சேர முடியும் எனத் தெரியவில்லை. ஆனாலும், தனது நடிப்பால் அக்கதாபாத்திரத்தைப் பேச வைத்திருக்கிறார் ஜவஹர். உடல் மொழிகளில் நாசர் தான் தெரிகிறார்.

தொடர்பியல் என்பது முதல் பாகத்தில் அதன் போக்கிலேயே போகும். அதைச் சுற்றி திரைக்கதை அமைத்தது போல இருக்கும். ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் தொடர்பியலைக் காட்ட வேண்டும் என்பதற்காக திரைக்கதையை எங்கெங்கோ அலைய விட்டிருக்கிறார்கள். முதல் பாகம் போல இன்னும் சிறப்பாக எழுதியிருந்தால் இரண்டாம் பாகமும் பேசப்பட்டிருக்கும்." என்கிறது தினமலர் நாளிதழ்.

ஜீவி 2

பட மூலாதாரம், @ahavideoIN / Twitter

முதல் பாகத்தின் நீட்சியாக இல்லாமல் இன்னும் புதுமையான சுவாரஸ்யமான காட்சியமைப்பு இருந்திருந்தால் முதல் பாகத்தைப் போலவே வித்தியாசமான படமாக வந்திருக்கும் என்கிறது புதிய தலைமுறை இணையதளத்தின் விமர்சனம்.

"படத்தின் பெரிய குறையே, முதல் பாகத்தின் சுவாரஸ்யங்களை மட்டுமே நீட்டிக்க முயன்றிருப்பது. புதிதாக எந்த சவாலும் சிக்கலும் நாயகனுக்கு இல்லை. படம் முழுக்க தன்னுடைய சிக்கலை யாரிடமாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார். அல்லது தொடர்பியல், முக்கோண விதி, மையப்புள்ளி என தியரிகளை அடுக்குகிறார். ஆனால், அது கதையை நகர்த்தப் பயன்படவேயில்லை.

இரண்டாம் பாகத்திலும் அதே சிக்கலும் பிரச்னையும் கதாநாயகனின் வாழ்விலும் இன்னொரு குடும்பத்தின் கடந்த காலத்திலும் இருப்பதையே காட்ட முயல்கிறது. அதனால், படம் சுவாரஸ்யமாகிறதா என்றால், இல்லை. படத்தின் சில காட்சிகள் தேவையற்றதாகவே தோன்றியது. உதாரணமாக மனநல மருத்துவரை வெற்றி சந்திக்கும் காட்சியைச் சொல்லலாம்.

இதெல்லாம் ஏன் நடக்கிறது என கதாநாயகனும் அவரது நண்பனும் குழம்புவதும் ஏற்கும்படியாக இல்லை. முதல் பாகத்தில் நடக்கும் திருட்டு, அதன் தொடர்ச்சியாக கதாநாயகனின் வாழ்வில் தொடங்கும் பிரச்னை என்பதுதான் களமே. அதேபோன்ற ஒரு திருட்டுதான் இந்த பாகத்திலும் பிரச்னையைத் தொடங்கிவைக்கிறது என அவர்கள் முன் விடை தெளிவாக இருக்கிறது. அதனால் நாம் என்ன தவறு செய்தோம், நமக்கு ஏன் இப்படி நடக்கிறது என அவர்கள் குழம்புவது ஏன் எனப் புரியவில்லை" என விமர்சித்துள்ளது புதிய தலைமுறை.

ஜீவி படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பிற்கு ஏற்றவகையில் இந்த இரண்டாம் பாகம் இருக்கவில்லை என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம்.

"முதல் காட்சியிலிருந்தே ஜீவி - 2 அதன் அடிப்படையான கதையிலிருந்து விலகாமல், முதல் பாகம் எப்படியிருந்ததோ, அதைப் போலவே நகர்கிறது ஜீவியைப் போலவே, படத்தின் பிற்பாதியில் நமக்கு எல்லா விடைகளும் கிடைக்கின்றன. திருப்யான க்ளைமாக்சுடன் படம் நிறைவடைகிறது. ஆனால், இந்தப் படத்திற்குள் நுழையும்போது புதிய தியரிகள் ஏதாவது இருக்குமோ என எதிர்பார்க்கிறோம். ஆனால், முந்தைய பாகத்தில் வந்த முக்கோண விதியின் நீட்சியாக புதிய பாத்திரம் அறிமுகமாகி, அதன் கடந்த காலம் சொல்லப்படுகிறது. ஜிவி உருவாக்கிய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இந்தப் படம் இல்லை. ஒவ்வொரு பாத்திரத்தின் பாதையையும் தெளிவாகக் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்." என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

காணொளிக் குறிப்பு, ராக்கெட்ரி படத்தை எடுக்க மாதவன் வீட்டை இழந்தாரா? - ட்விட்டரில் நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: