"கர்லாக்கட்டையை பெண்களாலும் சுற்ற முடியும்" - தன்னம்பிக்கையூட்டும் ஸ்வாதி கிருஷ்ணன்

- எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கர்லாக்கட்டை பயிற்சி என்றாலே அதை ஆண்கள் தான் செய்வார்கள் என்று தானே பலரும் நினைப்பார்கள். ஆனால் பெண்களும் கர்லாக்கட்டை பயிற்சி செய்து உடலை வலிமையாக்கலாம் என்று கூறுகிறார் தமிழ் பேசும் முதல் சர்வதேச கர்லாக்கட்டை பயிற்சியாளர் ஸ்வாதி கிருஷ்ணன்.
உங்களை பற்றி சொல்லுங்க ?
எனக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம். பள்ளி படிப்பை சத்தியமங்கலத்திலும் கல்லூரி படிப்பை கோவையிலும் முடித்தேன். படித்து முடித்ததும் டெல்லியில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் சீனியர் எக்சிகியூட்டிவ் ஆக பணிபுரிந்தேன். 3 வருடங்கள் அங்கு பணி புரிந்த பின்னர் சிங்கப்பூருக்கு டிப்ளமா படிக்க சென்றுவிட்டேன். பிறகு பெங்களூருவில் ஆரக்கிள் நிறுவனத்தில் சில வருடங்கள் பணிபுரிந்தேன். இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே கர்லாக்கட்டை பயிற்சிகளை ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கி வருகிறேன்.
எப்படி கர்லாக்கட்டை பயிற்சி பெற வேண்டும் என்ற எண்ணம் வந்தது?
2010ஆம் வருடம் சாலையில் வண்டி ஓட்டி செல்லும் போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தால் என்னுடைய கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டது. அதற்கு பிறகு கைகளால் அதிக பாரமான பொருட்களை தூக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும் என்னால் நீண்ட நேரத்திற்கு ஹேண்ட்பேக் கூட தூக்க முடியாமல் பல வருடங்கள் வலியால் அவதிப்பட்டேன். அதே போல் கல்லூரியில் படிக்கும் போதே என்னடைய அப்பா இறந்து விட்டார். ஒரு புறம் அப்பாவின் இழப்பு மறுபுறம் உடல் நல பாதிப்பு என மனதளவில் மிகவும் நொறுங்கிவிட்டேன். அதன் பிறகு 7 வருடங்கள் என்னால் வண்டி ஓட்ட முடியவில்லை.அதற்கான நம்பிக்கையும் இல்லை. முதலில் உட்லநிலையை நன்றாக கவனிக்க வேண்டும் என எண்ணி யூடியூப்பில் தற்காப்பு கலைகள் தொடர்பான விவரங்களை தேடினேன். அப்போது தான் கர்லாக்கட்டை எனக்கு அறிமுகம் ஆனது.

எப்போது பயிற்சியை தொடங்கினீர்கள்?
யூடியூப்பில் கர்லாக்கட்டை என்ற ஒரு பயிற்சி என்பதை பார்த்ததும் எனக்கு அதை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. கர்லாக்கட்டை பயிற்சியை நம் தமிழர்கள் பாரம்பரியமாக பயின்று வருவது குறித்தும் ஆண்கள் மட்டுமே அதை செய்ய முடியும் என்று தான் அதுவரை நினைத்திருத்தேன். ஆனால் பெண்களும் செய்ய முடியும் என்று நினைத்த போது அதை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது. ஆனால் வலியுடன் இருக்கும் கைகளில் பயிற்சி மேற்கொள்ள முடியுமா என நினைத்தேன். என்னுடைய குரு டாக்டர் ஜோதி செந்தில் கண்ணன் தொழில்முறையாக எனக்கு பயிற்சி அளிக்க தொடங்கினார். பிறகு எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக என் மீது நம்பிக்கை ஏற்படத்தொடங்கியது. முதலில் மெய்ப்பாடம் பின்னர் கர்லாக்கட்டை என முறையான பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தேன்.
சர்வதேச அளவில் தமிழ் பேசும் முதல் பெண் கர்லாக்கட்டை பயிற்சியாளர் ஆன தருணம் எப்படி இருக்கிறது?
மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் எனக்கு உடல்நிலை சரியாக வேண்டும் என்று எண்ணி தான் கர்லாக்கட்டை பயிற்சியை தொடங்கினேன். ஆனால் எனக்கு அதில் தொடர்ந்து ஆர்வம் ஏற்படத் தொடங்கியதாலும், வித்தியாசமாக புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பியதாலும் தொழில்முறையாக பயிற்சிகளை எடுக்க தொடங்கினேன். கர்லாக்கட்டை பயிற்சிகளை தொடங்கியதும் என்னுடைய உடல்நிலையில் நல்ல மாற்றங்கள் தெரிந்தது. என்னுடைய சருமம், தோல் பிரச்னைகள் சரியானது. மனது ஒரு நிலையாக இருந்தது. தூக்கம் நன்றாக வந்தது. அதனால் இந்த பயிற்சி மீது மானசீகமாக காதல் வந்ததை என்னால் உணர முடிந்தது.

கர்லாக்கட்டை பயிற்சி வகுப்புகளை தொடங்கும் போது எந்த சமூகம் உங்களை எப்படி பார்த்தது?
முதலில் அனைவரும் என்னை கேலியாக தான் பார்த்தார்கள். கிண்டல் செய்தார்கள். எம்பிஏ படித்துவிட்டு ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை என்று விமர்சனம் எழுந்தது. ஒரு பெண் கர்லாக்கட்டை பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என்று தொடர்ந்து கேள்விகளை முன் வைத்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் நான் என் விருப்பத்தின் மீது உறுதியாக நின்றேன். என் அம்மா மிகவும் துணை நின்றார்கள். உன் மனதிற்கு என்ன பிடிக்கிறதோ உன் மனதிற்கு என்ன சந்தோஷம் தருகிறதோ அதை முழு மனதாக செய் என்று சொன்னார். அதனால் இப்போது பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என இரு தரப்பினருக்குமே ஆன்லைன் மூலமாகவும், நேரடி வகுப்புகள் மூலமும் பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறேன்.

உங்களுடைய குறிக்கோள் என்ன?
நம் அனைவரது வீட்டிலும் ஆரோக்கியத்தை மேம்படுத்த கர்லாக்கட்டை இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னிடம் பயிற்சி பெற்ற பலருக்கும் இந்த கர்லாக்கட்டை பயிற்சி மூலம் தூக்கம் சார்ந்த பிரச்சனைகள், மாதவிலக்கு மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் குணமாகி இருக்கிறது. அதனால் தொடர்ந்து கர்லாக்கட்டை பயிற்சி தொடர்பான விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த விரும்புகிறேன். இந்த வருடத்திற்குள் பத்தாயிரம் மக்களுக்கு கர்லாக்கட்டை பயிற்சிகளை கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளேன்.
நம் எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவை நனவாக்கும் முயற்சியில் நீங்கள் பல கேலி கிண்டல்களை சந்திக்கலாம் . ஆனால் முயற்சி மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டால் நிச்சயம் ஒரு நாள் உங்கள் கனவை உங்களால் அடைய முடியும். இது நான் என் வாழ்வில் உணர்ந்த உண்மை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













