தி வாரியர் - ரவுடியை எதிர்க்க காக்கிச்சட்டை போட்ட டாக்டர் - பட விமர்சனம்

நடிகர்கள்: ராம் பொத்திநேனி, ஆதி பினிசெட்டி, கீர்த்தி ஷெட்டி, அக்ஷரா கௌடா, நதியா, பாரதிராஜா, ரெடின் கிங்க்ஸ்லி, லால், ஜான் விஜய்; இசை: தேவி ஸ்ரீ பிரசாத்; இயக்கம்: என்.லிங்குசாமி.

தெலுங்கில் சில வெற்றிப்படங்களில் நடித்த ராம் பொத்திநேனி தமிழில் அறிமுகமாகியிருக்கும் படம் இது. என். லிங்குசாமி இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

போலீஸ் அதிகாரியாகும் டாக்டர் நாயகன்

"தமிழ் சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்ற 15 வருட கனவு இந்தப் படம் மூலமாக ராம் பொத்தினேனிக்கு நிறைவேறி இருக்கிறது. ஆனால் நிச்சயம் அவரது கனவுக்கு தகுந்த படம் இது அல்ல" என்கிறது 'ஏபிபி லைவ்' தமிழ் இணையதளம்.

இந்த படத்தின் கதையைப் பற்றிச் சொல்லும்போது, "மதுரையில் பிரபல ரவுடியாக வலம் வரும் குருவின் (ஆதி) ஆட்கள், நடுரோட்டில் வைத்து ஒருவரை வெட்டிச் சென்று விட, அவரை டாக்டரான சத்யா ( ராம் பொத்தினேனி) மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றுகிறார். இதை அறிந்து கொண்ட குருவின் ஆட்கள் மருத்துவமனைக்குள் வைத்தே வெட்டப்பட்டவரை கொன்று விட, ஆதங்கத்தின் உச்சிக்கு செல்லும் சத்யா, காவல்துறையின் உதவியை நாடுகிறார்.

அங்கும் அவருக்கு தோல்வியே பரிசாக கிடைக்க, டாக்டர் தொழிலை கைவிட்டுவிட்டு, காக்கிச்சட்டையை அணிகிறார்.

இறுதியில் போலீஸ் அதிகாரியாக அவர் எடுத்துக்கொண்ட நோக்கம் நிறைவேறியதா, குருவின் கொட்டத்தை அவர் எப்படி அடக்கினார், இடையில் நுழையும் விசில் மஹாலட்சுமியின் (கீர்த்தி ஷெட்டி) காதல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை" என இந்தப் படத்தின் கதையைப் பற்றிக் கூறுகிறது ஏபிபி லைவ்.

நையாண்டி செய்த நாளிதழ்

படத்தைத் தயாரித்துள்ள தெலுங்கு தயாரிப்பாளர், இதற்கு முன்பு லிங்குசாமி தயாரித்துள்ள படங்களை பார்த்திருக்க மாட்டார் போலிருக்கிறது என்கிறது தினமலர் இணையதளம்.

"பத்து வருடங்களுக்கு முன்பு லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்தின் கதையில் மாதவனும் ஆர்யாவும் அண்ணன் தம்பியாக நடித்திருப்பார்கள். அதில் தம்பியை நீக்கிவிட்டு மாதவன் கேரக்டரை கொஞ்சம் மாற்றி எடுத்ததுதான் இந்த வாரியர். அவர் அதற்கு முன்பு இயக்கிய ரன், ஜி, சண்டைக்கோழி, பீமா, பையா, அஞ்சான் என ஒவ்வொரு படத்திலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து தேவையான அளவு இதில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்" என்கிறது அந்த இணையதளம்.

படத்தை தெலுங்கில் மட்டும் தயாரித்து தமிழில் வெளியிட்டிருக்க வேண்டும். இரண்டு மொழிகளில் எடுத்துள்ளோம் எனச் சொல்லி தெலுங்கு வாடையுடன் மட்டுமே எடுத்து தமிழ் ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்கள். படத்தின் நாயகன் ராம் பொத்தினேன் பைக்கில் வரும்போது வண்டி எண் முதலில் ஆந்திரா பதிவெண்ணாகவும் அடுத்த தெருவில் வரும்போது தமிழ்நாடு பதிவெண்ணாகவும் அதற்கடுத்த தெருவில் மீண்டும் ஆந்திரா பதிவெண்ணாகவும் மாறிமாறி வருகிறது. அந்த அளவுக்குத்தான் இயக்குநர் படத்தைக் கவனித்திருக்கிறார். ஆந்திராவின் கர்னூல் நகரை மதுரை என்று சொல்லி ஏமாற்றுவது சரியா என்று கேள்வி எழுப்புகிறது தினமலர்.

படத்துக்கு பின்னடைவு

"வாரியர் திரைப்படத்தினை முழுவதும் ஒரு தெலுங்கு படமாக லிங்குசாமி எடுத்து இருந்தால் கூட ஓரளவிற்கு நன்றாக வந்திருக்குமோ என்னமோ. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்பதற்காக படத்தில் பல மாற்றங்களை செய்துள்ளனர். இதுவே படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. குறிப்பாக படத்தில் காட்டப்படும் இடங்கள் அப்பட்டமாக செட் என தெரிகிறது. இது கதையினும் நாம் செல்ல முடியாத அளவிற்கு தடையாக உள்ளது" என்கிறது zeenews.india.com இணையதளம்.

மேலும், "இரண்டு விதமான கெட்டப்புகளில் வரும் ஹீரோ ராம் பொத்திநேனி நன்றாகவே நடித்துள்ளார். மாஸ் காட்சிகளில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் சண்டை காட்சிகளை மேலும் வலுப்படுத்துகிறது.

படத்தில் ஹீரோவைவிட வில்லனுக்கு அதிக பில்டப் காட்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அந்த வில்லன் ஹீரோவை பழிவாங்க அம்மாவை மிரட்டுவதும், ஹீரோயினை கடத்துவதுமாக 80களின் வில்லன் போலவே செய்கிறார்.

கதாநாயகியாக வரும் கீர்த்தி ஷெட்டி மிகவும் அழகாக கியூட்டாக திரையில் காட்சியளிக்கிறார். கதையை தாண்டி கீர்த்தி ஷெட்டியை பார்ப்பதற்காகவே திரையரங்கிற்குள் ரசிகர்கள் படை எடுக்கலாம்," என்கிறது ஜீ நியூஸ் இந்தியா.

"இயக்குநர் லிங்குசாமி ஒரு சிறப்பான 'கம் - பேக்'ஐ கொடுக்க நினைத்திருக்கிறார். ஆனால், தி வாரியர் அப்படிப் படமாக அமையவில்லை" என்கிறது First Post இணையதளம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: