லீனா மணிமேகலையின் 'காளி ஆவணப்படம் சர்ச்சை: "செய்வதற்கும் சாவதற்கும் இடையில் கலை ஊசலாடிக் கொண்டிருக்கிறது"

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

தனது புதிய ஆவண படமான 'காளி' தொடர்பான சர்ச்சைக்குரிய போஸ்டர் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இயக்குநர் லீனா மணிமேகலை மீது திங்கள்கிழமை (ஜூலை 4) டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் ஒருவர் அவருக்கு எதிரான புகாரை பதிவு செய்துள்ளார். காளி பட போஸ்டர் "மிகவும் ஆட்சேபனைக்குரியது" என்று அவர் கூறியிருக்கிறார்.

காளி படத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டரால் பெரும் சலசலப்பு மற்றும் லீனா மணிமேகலையை கைது செய்யும் கோிரக்கைகள் சமூக ஊடகங்களில் வலுத்து வருகின்றன.

ஜூலை 2ஆம் தேதி லீனாவால் பகிரப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பான தமது புகாரில், ஆவணப்படத்தின் ஆட்சேபனைக்குரிய புகைப்படம் மற்றும் கிளிப்பிங்கை தடை செய்யுமாறு வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் கோரியுள்ளார்.

காளி தேவியின் வேடமிட்ட பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பது போன்ற அந்த போஸ்டர், இந்து சமூகத்தினரின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்துவதாக அவர் வினீத் ஜிண்டால் கூறியுள்ளார்.

கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் - சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டங்கள் குறித்தும் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இவருடைய 'மாடத்தி, 'செங்கடல்' போன்ற திரைப்படங்கள் சர்வதேச கவனம் பெற்றிருக்கின்றன. சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச விருதுகளையும் லீனா மணிமேகலை பெற்றுள்ளார்.

என்ன சர்ச்சை?

இந்த நிலையில், தான் இயக்கியுள்ள 'காளி' என்கிற நிகழ்த்து ஆவணப்படத்தின் (Performance Documentary) 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டரை சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுதான் தற்போதைய சர்ச்சையின் மையமாக உள்ளது.

அந்த போஸ்டரில் 'காளி' போன்று வேடமணிந்துள்ள பெண், தன் வாயில் சிகரெட்டுடன், கையில் பால்புதுமையினர் (LGBT) கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது.

இந்த போஸ்டர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதற்கான எதிர்வினைகள் வெளிவரத் தொடங்கின.

'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் தற்போது டிரெண்டாகிவருகிறது. இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஹரியாணா பாஜகவின் மாநில பொறுப்பாளர் அருண் யாதவ், இது குறித்து வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த ஆவணப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அனைவரும் இந்து மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது வீடியோவை 'ரீட்வீட்' செய்து பலரும் ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேகை பதிவிட்டு வருகின்றனர்.

விஷ்வ இந்து பரிஷத் தலைவர்களுள் ஒருவரான பிராச்சி சாத்வி, தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்துக்களே விழித்திருங்கள், இந்து மதத்திற்கு எதிரான இயக்குநரை புறக்கணியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

மேலும், இயக்குநர் அஷோக் பண்டிட், ஹரியாணா பாஜகவின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் ஷர்மா உள்ளிட்டோரும் தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களில் இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நூபுர் ஷர்மா விவகாரம், அதைத்தொடர்ந்து உதய்பூரில் நிகழ்ந்துள்ள கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இந்தியாவில் பல விவாதங்களை எழுப்பியுள்ள வேளையில், நாடு முழுவதும் பல்வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் வணங்கப்படும் 'காளி' ஏன் சர்ச்சையின் மையமாக்கியுள்ளார்?

கனடாவில் உள்ள இயக்குநர் லீனா மணிமேகலை, இந்த ஆவணப்படம் குறித்தும் அதைத்தொடர்ந்த சர்ச்சை குறித்தும் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்:

'காளி' எனும் நிகழ்த்துக்கலை ஆவணப்படத்தின் போஸ்டரில் பெண் தெய்வம் கையில் சிகரெட் மற்றும் கையில் 'பால்புதுமையினர்' கொடியையும் பிடித்திருக்கிறார்... 'காளி' இதன்மூலம் சொல்ல வருவது என்ன?

என்னைப் பொருத்தவரை "காளி" பேராற்றல் கொண்ட, கட்டற்ற, அசுரத்தனம் என்று கருதப்படுவதையெல்லாம் காலில் போட்டு மிதிக்கிற, தீமையின் தலைகளையெல்லாம் ஒட்ட நறுக்கி கெட்ட ரத்தமாக ஓடவிடுகிற துடியான ஆதி மனுஷி. அப்படி ஒரு மனுஷி ஒரு மாலை நேரம் எனக்குள் இறங்கி டொரோண்டோ மாநகர வீதிகளில் வலம் வந்தால் என்ன நடக்கும் என்பதை நிகழ்த்திக் காட்டும் படம் தான் காளி.

நான் பால்புதுமையராகவும், திரைப்படங்களை இயக்கும் பெண்ணாக இருப்பதாலும் எனக்குள் இறங்கும் காளி, பால்புதுமையர் கொடியையும் கேமராவையும் பிடித்திருக்கிறார். என்ன செய்ய?

என் மேல் இறங்கும் காளி கனடாவில் வாழும் பழங்குடி மக்களோடும், ஆப்பிரிக்க, ஆசிய, யூத, பாரசீக இனங்களை சேர்ந்த மக்களோடும் கலந்து மனித நேயத்தைக் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கிறார். கனடாவில் கஞ்சா சட்டப்பூர்வமானது என்றாலும் விலை அதிகம். பூங்காவில் படுத்துறங்கும் கனடாவின் வீடற்ற ஏழை கருப்பின உழைக்கும் மக்களிடம் காளியை உபசரிக்க ஒரு சிகரெட் தான் இருக்கிறது. அதை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் காளி.

இந்த போஸ்டர் இந்துக்கடவுளை அவமதிப்பதாகவும் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூறி, ட்விட்டரில் 'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவதை பார்த்தீர்களா? இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இந்திய அரசாங்கம் சமூக செயற்பாட்டாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தெருவில் இறங்கிப் போராடும் மாணவர்களையும் கலைஞர்களையும் நசுக்குவதை முழு நேர வேலையாக வைத்திருக்கிறது. இப்படி செய்வது மக்களாட்சி அல்ல, பாசிசம். சிறுபான்மையினரை ஒடுக்கி மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து துண்டு துண்டாக்கி வருகிறது.

கடந்த பதினேழு ஆண்டுகால கலை வாழ்க்கையில் கொலை மிரட்டல், வன்புணர்வு செய்யப்படுவாய்-ஆசிட் அடிக்கப்படுவாய் போன்ற அச்சுறுத்தல்கள், அரசியல் கைதுகள், சென்சார் தலையீடுகள், அவதூறுகள், போலீஸ் புகார்கள், அரசியல் கைதுகள், மீடூ இயக்கத்தில் இணைந்து பாலியல் அத்துமீறல்களைப் பற்றி பேசியதால் தொடுக்கப்பட்ட வழக்குகள், அதன் அடிப்படையில் பாஸ்போர்ட் முடக்கம், அதை முறியடிக்க போராட்டங்கள் - இப்படி எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்.

போஸ்டருக்காக மட்டுமே இத்தகைய சர்ச்சை ஏற்படும் என நினைத்தீர்களா? ஆவணப்படம் தடை செய்யப்பட வேண்டும் என கூறுவது குறித்து...

படைப்பூக்கத்தில் இருக்கும்போது எந்த நினைப்பும் எனக்குத் தடையாக இருப்பதை நான் அனுமதிப்பதில்லை. சுய தணிக்கையை விட மோசமான தடை கலைக்கு வேறெதுவும் இல்லை. படத்தைப் பார்த்தால் இந்த hashtag கொடூரர்களின் மனம் மாறுவதற்கு வாய்ப்புண்டு. அதனால் தான் தடை செய்ய விரும்புகிறார்கள். இந்த இன்டர்நெட் யுகத்தில் அரசாங்க ரகசியங்களையே எதேச்சிதிகாரங்களால் காப்பாற்ற முடியவில்லை. கலை எப்படியாவது மக்களைப் போய் சேர்ந்து விடும். என் முந்தையப் படைப்புகள், கவிதையாகட்டும், திரைப்படங்களாகட்டும், தடைகளை சந்தித்திருக்கின்றன. அதனால் அவை வாசிக்கப்படாமலோ, பார்க்கப்படாமலோ போனதில்லை.

இந்திய பிரதமர், உள்துறை அமைச்சரையும் டேக் செய்து உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் கூறிவருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இந்தியாவில் மோதியும் அமித்ஷாவும் வைப்பது தான் சட்டம். இது உலகத்திற்கே தெரிந்த விஷயம். அதற்காக, எல்லாரும் மூச்சையும் இயக்கத்தையும் நிறுத்திக் கொள்ள முடியுமா என்ன? பயத்தை அவர்கள் விதைக்கலாம். கலைஞர்கள் அதை அறுவடை செய்ய முடியாது.

நூபுர் ஷர்மா விவகாரத்தையடுத்து தேசிய அளவில் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், இந்த போஸ்டரால் ஏற்பட்டுள்ள சர்ச்சை தவிர்த்திருக்கக்கூடியதா? இந்த போஸ்டரை வெளியிடுவதற்கான தகுந்த நேரம் இதுவென்று கருதுகிறீர்களா?

கனடாவின் யோர்க் பல்கலைக்கழகம் சர்வதேச அரங்கில் திறம்பட இயங்கும் படைப்பாளியென என்னை வரவழைத்து உதவித்தொகை வழங்கி மேலதிக பயிற்சிக்கான களத்தையும் மாஸ்டர்ஸ் டிகிரிக்கான வாய்பையும் வழங்கியது. கனடாவில் சினிமா படிக்கும் கலைஞர்களுள் சிறந்தவர்களைத் தேர்நதெடுத்ததில் - டொரன்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகம் "பன்முக கலாசாரம்" பற்றிய படமொன்றை எடுக்கும் முகாமில் என்னை இணைத்தது. காளி உருவான கதை அது தான். இந்தப் படத்தை ஒடுக்க நினைப்பவர்கள் கலையோடு நில்லாமல் கல்விப்புலத்தையும் அவமதிக்கிறார்கள். ரொம்ப நாட்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இந்த உலகமும் மக்களும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.

மதம் குறித்த வெறுப்புணர்வு பேச்சுகளும், குற்றங்களும் அதிகமாகியுள்ள இந்த காலத்தில், ஒரு கலைஞராக நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? இந்த காலகட்டத்தில் 'கலை' என்பது உங்களை பொறுத்தவரை என்ன?

செய்வதற்கும் சாவதற்கும் இடையில் கலை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எனக்கு அதைவிட பற்றிக் கொள்ள ஏதும் இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: