அமராவதி கொலை: நூபுர் ஷர்மாவை ஆதரித்ததற்காக கொலை செய்யப்பட்டாரா உமேஷ் கோல்ஹே?

    • எழுதியவர், நிதேஷ் ரவுத்
    • பதவி, அமராவதியிலிருந்து, பிபிசி மராத்திக்காக

அமராவதியில் மருந்துகடைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இனி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்தும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் 11 நாட்களுக்கு முன்பு உமேஷ் கோல்ஹே என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

கொலைக்கான ஆதாரங்கள் நூபுர் ஷர்மா விவகாரத்துடன் தொடர்புடையவை என்று சில பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உதய்பூரில் தையல்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் இதே விவகாரத்துடன் தொடர்புடையது என காவல்துறை தெரிவித்துள்ளது.

எனவே அமராவதி மற்றும் உதய்பூர் சம்பவங்களுக்கு இடையே ஏதேனும் நேரடி தொடர்பு உள்ளதா என்பதை இப்போது என்ஐஏ விசாரிக்கும். உமேஷ் கோல்ஹே கொலை வழக்கில் இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஐபிசி 302, 120பி மற்றும் 109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமராவதி டிசிபி விக்ரம், ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

"நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக அவர் (உமேஷ் கோல்ஹே) சமூக ஊடகங்களில் பதிவிட்டதால் இந்த சம்பவம் நடந்ததாக முதல்நோக்கில் தெரிகிறது," என்று அவர் கூறினார்.

கொலை நடந்தது எப்படி?

அமராவதி தாலுகா அலுவலகத்திற்கு அருகில் உள்ள ரச்னாஸ்ரீ மாலில் உமேஷ் கோல்ஹே என்பவர் 'அமித் வெட்ரினரி' என்ற பெயரில் செல்லப்பிராணிகளுக்கான மருத்துக் கடை வைத்துள்ளார்.

ஜூன் 21ஆம் தேதி இரவு, அவர் தனது மருத்துக் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார். 51 வயதான உமேஷ் கோல்ஹே ஒரு வாகனத்திலும், அவரது மகன் சங்கேத் மற்றும் மனைவி வைஷ்ணவி மற்றொரு வாகனத்திலும் இருந்தனர்.

இரவு 10.30 மணியளவில், நான்கு-ஐந்து நபர்கள் உமேஷைப் பிடித்து, கத்தியால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

உமேஷின் மகன் சங்கேத் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலின் போது உமேஷ் கோல்ஹேயின் பாக்கெட்டில் 35,000 ரூபாய் பணம் இருந்தது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் அதை தொடக்கூட இல்லை. எனவே இந்தக்கொலை பணத்திற்காக செய்யப்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது

உமேஷின் சகோதரர் என்ன சொன்னார்?

உமேஷ் கோல்ஹேவின் சகோதரர் மகேஷ் கோல்ஹே ஏஎன்ஐ செய்தி முகமையிடம், "நூபுர் ஷர்மாவைப் பற்றிய சில செய்திகளை உமேஷ் சில குழுக்களுக்கு அனுப்பியிருந்தார். ஆனால் இவ்வளவு சிறிய செயலுக்காக இந்த கொடிய தாக்குதலை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. வேறு காரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. "என்று கூறினார்.

"அவருக்கு (உமேஷ் கோல்ஹே) யாருடனும் பகை இருந்ததில்லை. கொலையின் பின்னணி என்ன என்று எங்களுக்கு புரியவில்லை. 12 நாட்களாகியும் போலீசார் எங்களிடம் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. நாங்கள் காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளோம். இது கொள்ளை சம்பவமா என்று கேட்டபோது, கொள்ளையடிக்கும் போது கழுத்தில் காயங்கள் ஏற்படுவதில்லை, உடலில் காயங்கள் ஏற்படும் என்று போலீசார் கூறினர்,"என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக உமேஷ் கோல்ஹே சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக அமராவதி காவல்துறை கண்டறிந்தது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் இது தெரிய வந்துள்ளது. தற்போது விசாரணையும் அதே திசையில் நடக்கிறது.

பதிவு வைரலானது

மருந்துக் கடை நடத்தி வரும் உமேஷ் கோல்ஹே, 'பிளாக் ஃப்ரீடம்' என்ற வாட்ஸ்அப் குழுவில் தீவிர உறுப்பினராக இருந்தார்.

இந்த குரூப்பில் ஹிந்து சார்பு பதிவுகள் பகிரப்பட்டன. சில நாட்களுக்கு முன்பு நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய அறிக்கைக்கு ஆதரவாக உமேஷ் கோல்ஹேவும் இங்கே ஒரு பதிவை வெளியிட்டார்.

இதே பதிவு குழுவிற்கு வெளியே வைரலாக பரவியிருக்கலாம் என்றும் உமேஷ் கோல்ஹே ஒரு முஸ்லிம் குழுவிற்கு இந்தப்பதிவை 'தற்செயலாக' அனுப்பியதால் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அமராவதி போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: