கார்கி சினிமா விமர்சனம்: சாய் பல்லவி நடிப்பு எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், 2D Entertainment
நடிகர்கள்: சாய் பல்லவி, காளி வெங்கட், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஆர்.எஸ். சிவாஜி, ஜெயபிரகாஷ் லிவிங்ஸ்டன்; இசை: கோவிந்த் வசந்தா; இயக்கம்: கௌதம் ராமச்சந்திரன்.
சாய் பல்லவி முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள கார்கி திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இதற்கான விமர்சனங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
இந்தப் படத்தின் கதையைப் பற்றிப் பார்க்கும்போது, ஒரு குற்றத்தில் சிக்கிக்கொள்ளும் தனது தந்தை நிரபராதி என்று நம்பும் மகள், சட்ட ரீதியாக தந்தையை விடுதலை செய்ய போராடுவதுதான் கதை என்கிறது tamil.samayam.com இணைய தளம்.
"ஒன்பது வயது குழந்தையை நான்கு வட மாநில இளைஞர்கள் பாலியல் வல்லுறவு செய்துவிடுகின்றனர். இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஐந்தாவது நபராக சாய் பல்லவியின் அப்பா ஆர்.எஸ். சிவாஜியும் கைதாகிறார். இதனால் சாய்பல்லவி குடும்பம் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறது. சட்ட போராட்டங்களின் மூலம் தனது அப்பாவை மகள் காப்பாற்றினாரா, இறுதியில் அவருக்கு என்ன ஆனது என்பதே கார்கி படத்தின் கதை." என்கிறது தமிழ் சமயம்.
"முதல் பாதி முழுக்க ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் தன்மையும் நமக்குத் தெளிவாகக் காட்டப்படுகிறது. இரண்டாம் பாதியில் இது வெகுவாகக் கை கொடுத்திருக்கிறது. 'அப்பாவா பார்க்க வேண்டிய பொண்ணு ஆம்பளையா பார்க்குறா' என்பது போன்ற வசனங்கள் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது" என்கிறது தினமணி இணையதளம்.
"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கும் சூழலில் இந்தப் படம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தக்கூடும். இந்தப் படம் ஏற்படுத்தும் தாக்கத்தின் எதிரொலியாக பெண்கள், குறிப்பாக சிறுமிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பேசுபொருளாக மாறும். அந்த அளவுக்கு சரியான சமூகப் புரிதலுடன் காட்சிகளை வடிவமைத்துள்ளார் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன். குறிப்பாக நீதிபதி திருநங்கை என்பதால் எதிர்கொள்ளும் விமர்சனங்கள், அதற்கு அவர் பதிலடி கொடுக்கும் காட்சி ஆகியவை மாஸ் ஹீரோவுக்கு நிகராக கைதட்டலைப் பெறுவது உறுதி" என்கிறது தினமணி.
சாய் பல்லவி நடிப்பு எப்படி?
இதுவரை சாய் பல்லவி நடித்துள்ள படங்களிலேயே மிகச் சிறந்த நடிப்பு இந்தப் படத்தில்தான் வெளிப்பட்டுள்ளது என்கிறது The Hindu.

பட மூலாதாரம், Gargi/official teaser
"ஆரம்பகட்ட காட்சிகளில் அவரை யாரோ கேலி செய்யும்போது வெளிப்படும் அவருடைய புன்னகையும் படத்தின் பிற்பகுதியில் தன் தந்தைக்காக அங்கும் இங்கும் ஓடும்போது வெளிப்படும் நிராசையும் கவனிக்கத்தக்கது. சமீபத்தில் வேறு எந்த நடிகையும் இம்மாதிரி நடிப்பை வெளிப்படுத்தியதாக சொல்ல முடியாது.
சாய் பல்லவிக்கு அடுத்தபடியாக மிகச் சிறந்த நடிப்பை வெளிபடுத்தியிருப்பது வழக்கறிஞர் இந்திரனாக வரும் காளி வெங்கட்டினுடையது. கதாநாயகிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதே அதே திரை நேரம் இவருக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பும் பல படங்களில் சிறிய வேடங்களில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். ஆனால், கார்கி படத்தில் அவருடைய திறமை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது" என்கிறது The Hindu இணைய தளம்.
இயக்குநர் எப்படி?
"வேறு ஒரு இயக்குனராக இருந்தால், இந்த வழக்கறிஞர் பாத்திரத்தில் ஒரு இளம் நடிகரை நடிக்க வைத்து, நாயகியோடு ஒரு காதல் கோணத்தையும் உருவாக்கியிருப்பார். ஆனால், இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் தான் சொல்ல விரும்பியது என்ன என்பதில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார். மற்ற பாத்திரங்களை அவர் வடிவமைத்திருக்கும் விதத்திற்கும் அவரைப் பாராட்ட வேண்டும். நீதிபதி பாத்திரத்தில் ஒரு திருநங்கையை நடிக்கவைத்திருப்பதைப் பார்க்கும்போது தமிழ் சினிமா விஷயங்களை மிக நுணுக்கமாக கையாளும் பாதையில் செல்கிறது எனக் காட்டுகிறது" என்கிறது The Hindu.

பட மூலாதாரம், Gargi/official teaser
"கார்கியிடம் அவளுடைய ஆசிரியர் தவறாக நடந்துகொள்வதைச் சொல்லும் 'ஃப்ளாஷ் பேக்' ஆரம்பத்தில் தேவையில்லாத தகவலாகத் தெரிகிறது. ஆனால், தன் தந்தை நிரபராதி என்பதைப் புரிந்துகொள்ள இது போன்ற சம்பவங்கள் எப்படி உதவுகின்றன என்பது புரிகிறது. இத்தனைக்கும் கார்கியே ஒரு மோசமான நிகழ்வுக்கு உள்ளானவர் என்பதால், குற்றம்சாட்டும் குழந்தையைத்தான் அவர் நம்பவேண்டும். படத்தின் இறுதியில் வரும் திருப்பம், நம்பக் கடினமாக இருந்தாலும், ஒரு மோசமான குற்றத்தைச் செய்யக்கூடியவர் என்று நாம் நினைத்துக்கூட பார்க்காதவர்கூட அந்தக் குற்றத்தைச் செய்ய முடியும் என்பதை உணர வைக்கிறது" என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம்.
படத்தில் பலவீனமென்று ஏதுமில்லை என்கிறது Film beat இணையதளம். "சாய் பல்லவி நடித்துள்ள கார்கி திரைப்படத்துக்கு மைனஸ் என்று பெரிதாக எதையுமே சொல்ல முடியவில்லை. ஏனென்றால் கதையின் ஆழம் மற்றும் அழுத்தம், சமூக சீர்கேடு, ஆண்களின் சபல புத்தி என பல விஷயங்களை முகத்தில் அறைந்தது போல சொல்லி உள்ளார் இயக்குநர். கமர்ஷியலாக இந்தப் படம் தியேட்டரில் எந்தளவுக்கு வொர்க்கவுட் ஆகும் என்பது மட்டும் தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது" என்கிறது ஃபில்ம் பீட்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












